வியாழன், 15 ஆகஸ்ட், 2024

மகாபாரதம் - ஒரு அலசல் 3

 

மகாபாரதம் 

3ம் பாகம் 51-55 - தர்மன் மன்னனாகிறான் 

கொலகாரப் பயலுக எல்லாரும் ஒன்னுசேந்து சண்ட போட்டா எப்பிடி இருக்கும்? அப்பிடிதான் அக்கப்போர் பண்றானுங்க இந்த பாண்டவர் கௌரவர் ரெண்டு பயலுகளும். மாயாஜாலமெல்லாம் பண்றானுங்க ஃபன்னி கய்ஸ்.

ஜெயத்ரதன், துரோணன், துரியோவோட 99 தம்பிகள் அம்புட்டு பேரும் காலி. கடைசில கர்ணன் நாகாஸ்திரத்த எடுத்து அர்ஜுனன் மேல ஏவ, இந்த கிருஷ்ணம்பய தேரை ஒரு அடிக்கு கீழ இறக்கி அர்ஜுனனைக் காப்பாத்துறான். நாகாஸ்திரத்தால திரும்பவும் அடிக்கச் சொல்றான் கர்ணனோட தேரோட்டி சல்லியன். ஒரு தடவைக்கு மேல நாகாஸ்திரம் பயன்படுத்த மாட்டேன்னு குந்திக்கு சத்தியம் பண்ணதை நினைச்சு வேண்டாம்னு சொல்றான் கர்ணன். கடுப்பாகுறான் சல்லியன். தேர் ஒரு பள்ளத்துக்குள்ள விழுறப்போ தேரை விட்டு இறங்கி கர்ணன் தேரைத் தூக்குறான்.

கர்ணன் கீழ எறங்கி தேர் சக்கரத்தைத் தூக்குற நேரம் அவம்மேல அம்படிக்கச் சொல்லி அர்ஜுனன்ட்ட சொல்றான் கிருஷ்ணன். "அவன் நிராயுதபாணியா தேரைத் தூக்குற நேரத்துலயா அம்படிக்கிறது? இது தர்மமா?"ன்னு கேக்குறான் அர்ஜுனன்.

"தர்மமாவது மர்மமாவது? நீ அடிலே,."ங்குறான் தர்மத்தைக் காக்கவந்த கிருஷ்ணன். அதக்கேட்டு அர்ஜுனன் அம்படிக்க கர்ணன் ஸ்பாட் அவுட்.

அம்புட்டு நாளா கொலையா பண்ண பயலுக, கர்ணன் குந்தியோட மூத்த மகன்னு தெரிஞ்சதும் அழுவுறானுங்களாம்.  குந்திக்கு ஒவ்வொரு சாமியா வந்து ஒவ்வொரு குழந்தையா தான குடுத்தது? எப்பிடி அண்ணன் தம்பி ஆகும்?
********


அம்புட்டுப் பயலுகளும் அழியுறானுங்க. கடைசியா துரியோதனனும் பீமனும் காட்டாகுஸ்தி போடுறானுங்க. பீமன் துரியோவ அடிச்சு குத்துயிரும் குலையுயிருமா விட்டுப் போறானுங்க.

இத கேள்விப்பட்டு வந்த அஸ்வத்தாமன் பாண்டவர்ஸ்க்குள்ள பூந்து அவனுங்க அஞ்சு பேருக்கும் பாஞ்சாலி மூலமா பிறந்த அஞ்சு குழந்தைகளைப் போட்டுத் தள்ளிட்டு துரியோ கிட்ட விசயத்த சொல்றான். துரியோ உடனே சந்தோசமா உயிர விடுறான்.

துரியோ செத்தவுடனே சஞ்சயன் கண்ணுல வியாசன் கனெக்சன் குடுத்திருந்த "போர்க்கள நேரடி ஒலிபரப்பு" கேமரா கட் ஆகுது.

இனி சாக யாருமில்லயே? என்ன பண்றது? பாண்டவர்கள் ஜெயிச்சுட்டாங்கன்னு அறிவிச்சுற வேண்டியது தான். ரைட்டு, அறிவிச்சாச்சு. பாண்டவர், பாஞ்சாலி, கிருஷ்ணன் இந்த டீம் அஸ்தினாபுரம் அரண்மனைக்குப் போகுது.

தர்மன் மன்னனாகுறான். தன்னோட நேரம் வந்தவுடனே பீஷ்மனும் உயிரை விடுறான். (சிகண்டி பீஷ்மனைக் கொல்லல.. சிகண்டிய பக்கத்துல வச்சிக்கிட்டு அர்ஜுனம்பய தான் பீஷ்மனைக் கொல்றான்)

திருதராட்டிரன், காந்தாரி, குந்தி, விதுரன் எல்லாரும் வனவாசம் போறானுங்க. (ஏன் ஆஊன்னா வனவாசம் போறானுங்க?)

40 வருசம் தர்மன் நாடாண்டானாம். வயசாயிருச்சு. வாரிசு இல்ல. எல்லாப் பிள்ளைகளையும் அஸ்வத்தாமன் கொன்னுட்டான். அபிமன்யு போர்ல செத்துட்டான். அபிமன்யு மகன் பரீக்ஷித் அப்பிடிங்குற பையனை மன்னனாக்கிட்டு பாண்டவர்ஸ் & பாஞ்சாலி ஆறுபேரும் pilgrimage கிளம்புறானுங்க. (இதுக்குத்தானா இம்புட்டு அலப்பறையும்?)

சுபமஸ்து.. முடிஞ்சது மகாபாரதம்


நன்றி 

5ம் நூற்றாண்டுத் தமிழ்ச் சமூகம் "ஒன்றறிவதுவே உற்றறிவதுவே..." என்று பகுத்தறிவைப் பேசிக் கொண்டிருந்த அதேநேரம், இத்தாலியில் கெப்ளருக்கு முன்னதாக ஹைப்பேசியா என்ற பெண், கிரகங்களின் நீள்வட்டப் பாதை குறித்து தான் கண்டுபிடித்ததை ஆதாரங்களோடு மக்களிடம் எடுத்துரைக்கிறார்.

விளைவாக, போப் தலைமையிலான கத்தோலிக்க மதபீடம் அந்தப் பெண்ணுக்கு மரண தண்டனை அறிவித்து, ஹைப்பேசியா என்ற வானியல் அறிஞர் எரித்தே கொல்லப்பட்டார். போப் என்ற மதத் தலைவனே இவ்வளவு முட்டாளாக தான் இருந்திருக்கிறான். ஆன்மீக முட்டாள்களின் கடும் தண்டனைகளைத் தாண்டி தான் அறிவியல் வளர்ந்தது.


"நடைமுறை வாழ்க்கையின் துன்பங்களை மறக்க ஒரு ஊடகம் மனிதனுக்குத் தேவைப்பட்டது. கச்சிதமாக ஆன்மீகம் அந்த இடத்தை நிரப்புகிறது. துன்பத்தின் காரணங்களான மன்னராட்சிகள், மக்களின் கோபத்தை திசைதிருப்ப ஆன்மீகத்தை பயன்படுத்தினார்கள். இப்படியாக இருதரப்புக்கும் மதம் ஒரு அபின் போல செயல்படுகிறது" என்று தனது "மதம் பற்றி.." நூலில் குறிப்பிடுவார் லெனின்.


இப்படி இயல்பாகவே மதகுருக்கள் ஆட்சித் தலைமையில் செல்வாக்கு செலுத்தினார்கள். மன்னர்களை கடவுளர்களின் பிரதிநிதிகளாக ஆக்கினார்கள். பதிலுக்கு இறையிலி நிலங்களைப் பெற்றார்கள். யாக நெருப்பு அணையும் முன்னே பொன்னையும் பொருளையும் அள்ளிச் சென்றார்கள். இந்த நிலைமை இன்றுவரை தொடரும் ஒரு உண்மை.

அறிவுத்தளம் வெகுவாக உயர்ந்தாலும், மறுபுறம் மூடநம்பிக்கைகளுக்கும் பஞ்சமில்லை. பசிக்கு ஈயாதார் திருப்பதி வெங்கடாஜலபதிக்கு அள்ளித் தருவது என்ன வகை பக்தி?

மனிதன் தான் கடவுளர்களைப் படைக்கிறான். கோவிலைக் கட்டுகிறான். அங்கே உண்டியலை வைக்கிறான். அவனே உண்டியலில் பணமும் போடுகிறான். பின் அவனே கடவுளிடம் கோரிக்கையும் வைக்கிறான். அவனே கடவுள் பற்றி கதையும் எழுதுகிறான். அதை உண்மை என்று பிறரையும் நம்ப வைக்கிறான். இப்படி எழுதப்பட்டவைகள் தான் புராண இதிகாச குப்பைகள்.

மகாபாரதமும் அதுபோன்ற காலி டப்பா தான். "அது முன்னொரு காலத்தில் எழுதப்பட்டது. அப்போது சூழல் வேறு" என்று சொல்வார்கள். அப்படியானால் அதை இப்போதைய சூழலுக்கு மாற்றுங்கள். அல்லது தூக்கி எறியுங்கள்.

அந்த முன்னொரு காலத்தில் மகாபாரதத்தில் சொல்லப்பட்ட சூத்திரன், சூத புத்திரன், சண்டாளன் என்ற வார்த்தைகள் இன்றளவும் சமூகத்தில் செல்வாக்கு செலுத்துகிறதே? இந்த புராண இதிகாசங்கள் இதைத்தான் சாதித்தது. உயர்குடியாக தங்களைக் கருதிக்கொள்ளும் பார்ப்பனர்களைக் காத்தது. இன்றளவும் சூத்திரனின் இடஒதுக்கீட்டைப் பறிக்கிறது. நீட் தேர்வால் சூத்திரனின் மருத்துவக் கனவைக் குலைக்கிறது. சாதிப் பாகுபாட்டை மேலும் கூர்தீட்டுகிறது.

மறுபுறம் இந்திரன் அகலிகையைக் கவர்ந்தது, இந்திரன் மனைவி இந்திராணி ராதையாக மறுபிறவி எடுத்து கிருஷ்ணனோடு வாழ்ந்தது, தமிழ்நாட்டின் சித்தர் மரபுக்கு நேரெதிரான ரிஷிகள், முனிவர்களின் பாலியல் திருவிளையாடல்கள், பராசர முனிவன் - சத்யவதி படகுத்துறை அலங்கோலங்கள் மற்றும் இதுபோன்ற குப்பைகள் எல்லாம் இரு விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. ஒன்று ஒரு முனிவர் இப்படி இருக்கலாமா என்று இதைப் படிக்கும் யாரும் கேள்வி எழுப்ப முடியாத அளவு மூளையை மழுங்கடிக்கிறது. மறுபுறம் பிரேமானந்தா முதல் நித்தியானந்தா வரை பல கிரிமினல்களை வளர்த்து விட்டிருக்கிறது.

எந்த ஒரு விமர்சனமுமின்றி புராணங்கள், இதிகாசங்கள், அம்புலிமாமா கதைகள், கோவில், பக்தி, ஆன்மீகம் எல்லாவற்றையும் ஏற்பது எப்படி ஒரு மனிதனால் முடிகிறது? காரணம் கடவுள் என்ற சல்லாத் துணி. அதைக் கிழித்தெறிவதே இன்றைய தேவை.

செத்த பிறகு சொர்க்கமும் நரகமும் என்பது கற்பனைக் கதை. வாழும் நாளில் எல்லா மக்களுக்குமான வாய்ப்புகளை உருவாக்குவோம். இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம். 

ஹைப்பேசியாக்கள் மீண்டும் பிறக்கட்டும். போப்புகளை எரிக்கட்டும். நன்றி.

சங்கர் சீனிவாசன்
மதுரை
WhatsApp +919042404390  



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக