"சாதியும் மதமும் சமயமும் பொய்யென, ஆதியிலுணர்த்திய அருட்பெருஞ்சோதி"
- வள்ளலார்
எல்லாம் வல்ல இயற்கைப் பேராற்றல் நம் எல்லோரையும் வழிநடத்தட்டும்
***************
மகாபாரதம் - ஒரு அலசல்
- சங்கர் சீனிவாசன்
வணக்கம். ஆன்மீகம் என்ற பெயரால் எதை எழுதினாலும், அதை எந்தக் கேள்வியும் கேட்காமல் ஏற்றாக வேண்டும் என்பது இங்கு எழுதப்படாத விதியாக உள்ளது. புராணங்களும், இதிகாசங்களும் உண்மையானவை என்றும் அதை அப்படியே ஏற்கவேண்டும் என்றும் சர்க்கஸ் விலங்குகளைப் போல் நம்மைப் பழக்கி வைத்திருக்கிறார்கள்.
இந்த மூடத்தனத்தின் விளைவு, உண்மையில் புராணங்கள் என்ன சொல்கின்றன என்பதை இறை மறுப்பாளர்கள் எடுத்துரைத்தால் "இந்து விரோதி" என்று முத்திரை குத்தப்படுகிறார்கள்.
பார்ப்பன மூடத்தனங்கள் எப்போது தமிழகத்தில் நுழைந்ததோ, அப்போதிருந்தே தமிழர்களின் நம்பிக்கை திட்டமிட்டு மழுங்கடிக்கப்பட்டது.
விளைவாக, தமிழர்களின் முருகன் வழிபாடு என்பது பிற்பாடு சிவனின் மகன் முருகன் என்றும், வடநாட்டு விநாயகன் முருகனின் அண்ணன் என்றும் உருவேற்றினார்கள். 60 சமஸ்கிருத ஆண்டுகள் தமிழ் ஆண்டுகளானது. இப்படியாக திட்டமிட்டு தமிழர் கலாசாரம் இன்றளவும் தாக்குதலுக்குள்ளாகிறது.
மானிடர் ஆன்மா மரணமெய்தாது என்று உருவேற்றிவிட்டு, மறுபுறம் மகாளய அமாவாசையில் இறந்தோருக்கு சடங்குகள் செய்யவைத்து பணம் பிடுங்கும் பார்ப்பனக் கூட்டம்.
உங்களது கடவுள் நம்பிக்கை வேறு. அதை நான் மதிக்கிறேன். ஆனால் நம்பிக்கையின் பேரால் ஏமாறாதீர்கள். எதையும் கேள்வி கேளுங்கள்.
தொடர்ந்து எழுதுகிறேன். என் கேள்விகளுக்கு நீங்களும் பதில் தரலாம். உங்கள் நம்பிக்கையை நான் மதிக்கிறேன். ஆனால் பொய்களை வலிந்து திணிக்க வேண்டாம். நன்றி
அன்புடன்
சங்கர் சீனிவாசன்
Click "Read More..."
மதுரை மணிநகரத்தில் உள்ள இஸ்கான் ஆலயம் சென்று உள்ளே என்ன நடக்கிறது என்றறிய நீண்ட நாள் ஆவல். சமீபத்தில் தான் வாய்ப்புக் கிடைத்தது. போய்த்தான் பார்ப்போமே என்று உள்ளே நுழைந்தேன்.
உள்ளே நுழைந்தவுடன் காவி உடையணிந்த இளம் மொட்டை+குடுமி ஒன்று என் கையில் தொன்னையில் சர்க்கரைப் பொங்கலை வைத்தது. (சோத்துக்கு வந்திருப்பேன்னு நினைச்சிட்டான் போல)
தேடிவந்த பொங்கலை விட மனமில்லை என்பதால் பொங்கலை முடித்து உள்ளே நுழைந்தேன். ரிசப்சனில் பல இளம் காவி மொட்டை+ குடுமிகள் ரிசப்ஷனிஸ்டுகள் போல் அமர்ந்திருக்க, திரும்பிய பக்கமெல்லாம் பிரபுபாதா சிரித்துக் கொண்டிருந்தார்.
(இந்த மொட்டைகளைக் கண்டதும் எனக்கு நித்தியானந்தாவும், குறிப்பாக அந்த சிஷ்யைகளும் நினைவில் வந்து போவதைத் தவிர்க்க முடியவில்லை)
ஆன்மீக வேட்டைப் பிரியர்கள் பலர் வேகவேகமாக உள்ளே உள்ள தியான மண்டபத்திற்கு விரைந்தார்கள். (கொஞ்சம் லேட்டானாலும் கிடைக்காதோ? ஏன் அரக்கப் பரக்க ஓடணும்?)
அதிகபட்ச இளம் காவி மொட்டை+ குடுமிகள் உள்ளூர்க் காரர்கள் இல்லை. ஒருவருக்கொருவர் சமஸ்கிருதத்தில் பேசுகிறார்கள்.
ஒரு மொட்டையை நிறுத்தி வாயைக் கிண்டினேன்... மொட்டை எதுவும் பேசாமல் மற்றொரு மொட்டையிடம் கையைக் காட்டிவிட்டு நகர்ந்தது. அந்த மற்றொரு மொட்டை "வாங்க சார்... 150 ரூவாக்கு பகவத்கீதை விக்கிறோம்... வாங்குனீங்கன்னா 6 புத்தகங்களை இலவசமாக் குடுப்போம்" என்று தன்பங்குக்கு ஸ்ரீகிருஷ்ணனை Offerல் விற்க முயன்றது. விதி வலியது. 150 ரூபாயும் கைமாறியது.
150 ரூபாய் குடுத்ததும், தடிமனான ஒரு பகவத்கீதையையும், சில இலவசப் பிரசுரங்களையும் மொட்டையிடமிருந்து பெற்றேன்.
"போர்க்களத்தில் உறவினர்களோடு சண்டையிடணுமா என்று தயங்கிநின்ற அர்ச்சுனனைத் தேற்றி உபதேசம் செய்த கிருஷ்ணன், இம்மாம்பெரிய புத்தகம் போடுற அளவுக்கு பேசியிருக்கான்னா அதுக்கு எத்தனை நாள் ஆகியிருக்கும்? அவன் சொல்லச் சொல்ல யாரு எழுதுனது? யப்பா... போதும்ப்பா... சீக்கிரம் முடி... அப்பிடின்னு அர்ச்சுனன் சொல்லாமலா இருந்திருப்பான்" என்றெல்லாம் மனதில் எழுந்த கேள்விகளைக் கேட்டு மொட்டையை தர்மசங்கடப்படுத்த விரும்பாமல் நகன்றேன்.
வெளியே சில மொட்டை+ குடுமிகள் பையில் நிறைய பகவத்கீதைகளை வைத்து நின்றார்கள். இவர்கள் தினமும் நகருக்குள் சென்று, சிக்கியவர்களிடம் கீதையை 150 ரூபாய்க்கு தலையில் கட்டுவது இவர்களது பணி.
"இலவச குர்ஆன் பெற்றுக் கொள்ளுங்கள்" என்று போர்டு வைத்து அமர்ந்திருக்கும் மீசை மைனஸ்+தாடி பிளஸ் குல்லாக்களை மதுரை நகருக்குள் அவ்வப்போது காணலாம்.
இவர்கள் இருதரப்புக்கும் tough fight குடுக்கும் "இலவச பரிசுத்த வேதாகம" போட்டியாளர்களையும் அடிக்கடி காணலாம். ஆனால் "இலவச கீதை" மட்டும் இல்லை.
Referenceக்கு அவ்வப்போது கீதையைத் தொட்டிருந்தாலும், முறைப்படி வாசிப்போம் என்று முதல் பக்கத்தைப் புரட்டினால், அந்த முதல் பக்கமே சொல்கிறது "மகாபாரதத்தை படித்துவிட்டு பிறகு வா" என்று. அந்த மகாபாரதத்தையும் தான் பார்ப்போமே...
மகாபாரதத்தை ஒரு பறவைப் பார்வை பார்த்து என் கருத்துகளைப் பகிர்கிறேன். வியாசர் சொல்லச் சொல்ல, விநாயகர் தன் தந்தத்தை ஒடித்து ஓலைச்சுவடியில் மகாபாரதம் எழுதினாராம்.
எங்காவது உங்கள் மனம் புண்பட்டால் அதற்கு வியாசரும், விநாயகருமே காரணம். நானல்ல...
பகவான் ஸ்ரீகிருஷ்ணன் அருள்மாரி பொழியட்டும்.
பின்குறிப்பு: அந்த சர்க்கரைப் பொங்கலுக்குப் பின் ஒரு நுண்ணரசியல் உள்ளது. 7ம் நூற்றாண்டுக்குப் பின்னான பக்தி இயக்கம், தமிழர் கலாச்சாரத்தில் பல மாற்றங்களையும் அழிவுகளையும் ஏற்படுத்தியது. சமணமும், பௌத்தமும் அழிக்கப்பட்டது. வைதீக பார்ப்பனியமும், சமஸ்கிருதமும் உள்நுழைந்தது. சம்பந்தமே இல்லாத விநாயகரும் தமிழர்களுக்கு அறிமுகமாகிறார். கிராமங்கள் தோறும் கதாகாலட்சேபம் நடத்திய பார்ப்பனர்களுக்கு, தான் சொல்லும் பொய்களை நம்பவைக்க புராணங்கள் தேவைப்பட்டது. புராணங்களை நம்ப முட்டாள்களும் தேவைப்பட்டார்கள். அந்த முட்டாள்களை அடிமையாக்கவே பொங்கலும் புளியோதரையும் தேவைப்பட்டது. இதன் மறுவடிவே பிரிட்டிஷார் இந்தியாவில் அறிமுகப்படுத்திய தேனீர். பொங்கல் பார்ப்பனர்களையும், தேனீர் பிரிட்டிஷாரையும் வாழவைத்தது.
மகாபாரதம்
ஒரு முன்னோட்டம்
ராமாயணம், மகாபாரதம் இவையெல்லாம் உண்மையில் நடந்ததா இல்ல கட்டுக்கதையா? குகை மனிதன், மம்மோத் யானை இதெல்லாம் வாழ்ந்த தடத்தைக் கண்டுபிடிச்சாலும், அதெல்லாம் பெரிய விசயமே இல்லேங்கற மாதிரி, ராமன் பிறந்தது வாழ்ந்ததை எல்லாம் ஊகமா கண்டுபிடிச்சு நம்மாளுங்க தெறிக்க விடுவாங்க... நம்புனாத்தான் தொன்னையில பொங்கல் கிடைக்கும்னு நெனச்சி நம்பிக் கெட்டவய்ங்க தான் நம்ம முன்னோர்கள்...
மெய்ப்பொருள் காண்பதறிவு என்னும் வள்ளுவனின் வாக்கே துணை. கதைக்குள்ளாற போவோம்.
அதாகப்பட்டது.... திரேதாயுகத்தில் ராமன் வாழ்ந்திருக்கிறான். ராமாயணம் வால்மீகியால் எழுதப்பட்டது. கம்பர் தமிழில் மொழிபெயர்த்தார். ராமன் சூர்ய வம்ச வழித்தோன்றல்.
துவாபரயுகத்தில் பாண்டவர்கள், கவுரவர்கள் வாழ்ந்திருக்கிறார்கள். இவர்களது வாய்க்காத் தகராறே மகாபாரதமாக எழுதப்பட்டது. இயற்றியவர் வியாசர். வில்லிபுத்தூர் ஆழ்வார் தமிழில் மொழிபெயர்த்தார். பாண்டவ, கவுரவ அங்காளி பங்காளிகள் எல்லோரும் சந்திர வம்ச வழித்தோன்றல்.
இந்த சூரியன் சூரியகுடும்பத்தின் தலைமைக் கோள். சந்திரன் பூமியின் துணைக்கோள். இந்த வெங்காயம் எல்லாம் எங்களுக்கும் தெரியும். ஆனா.. சூரிய வம்சம்னா சூரியனின் வாரிசுகள், சந்திர வம்சம்னா சந்திரனின் வாரிசுகள்.
எப்பிடிப்பா? அது அப்பிடித்தான். சேர சோழ பாண்டியர் மூவரும் சூரியவம்ச வழித்தோன்றல்னு சொல்றதில்லையா? கள்ளர் மறவர் அகமுடையர் மூவரும் சூரியவம்சம்னு அவிங்க பெருமையா சொல்லிக்கிறதில்லையா? அப்பிடித்தான்...
அந்தக்காலத்தில், ஒட்டுமொத்த உலகமும் பாரதம் என்றே அழைக்கப்பட்டதாம். அடேங்கப்பா... அகண்ட பாரதமே இங்க இருந்து தான் ஆரம்பிக்குதா?
மகாபாரதம்
முதல் பாகம் 1 - பரத வம்சம்
திரேதா யுகம் 12,96,000 ஆண்டுகளைக் கொண்டது. அந்த யுகத்தில், சூர்ய வம்சத்தில் தசரதன் மகன் ராமன் பிறக்கிறான். இந்த திரேதா யுகத்தின் தொடக்க நாளையே அட்சய திருதியை என்கிறார்கள். நம்ம மக்களுக்கு அதெல்லாம் தெரியாது. ஆனா அன்னிக்கு நகை வாங்குனா பெருகும்னு எவனோ கிளப்பிவிட்டத மட்டும் இவனும் நம்புவான்.
திரேதா யுகம் முடிந்து, துவாபர யுகம் தொடங்கும் சமயத்தில் பாரதத்தை சந்திரவம்சம் அல்லது பரதவம்சம் அல்லது குரு வம்சத்தவர் ஆளத் துவங்குகிறார்கள்.
(ராமன் ஆண்டது அயோத்தி, மகாபாரதம் அஸ்தினாபுரத்தில் துவங்குகிறது... பிறகு எப்படி முழு பாரதத்தை ஆண்டார்கள்னு கேள்வி வருதா? வரணுமே...)
துவாபர யுகத்தில் சந்திரன் என்பவன் "பாரதத்தை" ஆளத் துவங்குகிறான். அதனால் இது சந்திர வம்சம். சந்திரனின் வாரிசுப் படிநிலை...
- சந்திரன்
- புதன்
- புருரூவன் (ஊர்வசியின் புருசன்) (தேவலோக ஊர்வசி இங்க எங்க வந்தா? வந்துட்டா.. விடுங்க)
- ஆயு
- நகுடன்
- யயாதி
- புருரூவன் (இவன் வேற புருரூவன்)
- ஜனனேஜெயன்
- பிரசாவன்
- சாயதி
- சார்வபவுமன்
- அரிசிகன்
- மதிவான்
- திடன்
- நீலன்
- துஷ்யந்தன் (சகுந்தலை புருசன்)
- பரதன் (மகாபாரத பரதன்) (பரத வம்சம்)
- பவுமன்
- சுகோத்திரன்
- அஸ்தன் (இவனே அஸ்தினாபுரத்தை உருவாக்குகிறான். அப்போ அதுவரைக்கும் எங்க இருந்தாய்ங்க? எங்கயோ இருந்தாய்ங்க...)
- நிகும்பன்
- அரசமீளி
- வருணன்
- குரு (இந்த குரு ஆளும்போதே குரு வம்சத்தவர் என்றும் கவுரவர் என்றும் அழைக்கப்படுகிறார்கள். இவன் ஆண்டநாடு "குருவின் இடம்" அல்லது குருட்சேத்திரம் என்றும் அழைக்கப்பட்டதாம். தலைநகர் அஸ்தினாபுரம். அப்புறம் பாரதத்தை ஆண்டதாச் சொன்னது? தம்பி... கேள்வியெல்லாம் கேக்கப்படாது)
- பிரதீபன்
- சாந்தனு
சாந்தனுங்குற இந்த மெயின் கேரக்டர்ல இருந்து தொடங்குவோம்... டைரக்டர் பாக்யராஜ் கூட இவம்பேரைத் தான் மகனுக்கு வச்சிருக்கார். அப்பிடியென்ன சிறப்புன்னு பாத்துருவோம்.
ஸ்டாப்பு... பொங்கல் வாங்கித் தின்னுட்டு, போயிட்டு நாளைக்கு வாங்க...
மகாபாரதம்
முதல் பாகம் 2 - சாந்தனு கங்கா திருமணம்
சாந்தனு கிட்ட இருந்து கதைய ஆரம்பிக்கிறோம். சரியா?பாரதத்தின் மன்னன் (அதாவது குருட்சேத்திர நாட்டின் மன்னன்) குருவின் மகன் பிரதீபன். பிரதீபனுக்கு ரெண்டு பசங்க. மூத்தவன் தேவாபி, இளையவன் சாந்தனு.
மூத்தவன் தோல் நோய் வந்து சொரிஞ்சிகிட்டே இருந்ததால, ஆட்சியுரிமை அவனுக்கு இல்லைன்னு சொல்லி இளையவன் சாந்தனுவ மன்னனாக்கிட்டாய்ங்க. மூத்தவன் தேவாபி போங்கடான்னு வெறுத்து காட்டுக்குப் போய் தவம் பண்ணுறான். (ஏன்டா இதுக்கெல்லாமா ஆட்சியுரிமை இல்லன்னு சொல்லுவீங்க?)
ஆட்சியை சாந்தனுவுக்கு வழங்கிய அப்பன் பிரதீபனும் இன்னொருபக்கம் காட்டுக்குப் போய் தவம் பண்ணுறான். ஆஊன்னா ஆளாளுக்கு தவம் பண்ண, இன்னொரு பக்கம் சாந்தனு மன்னனோ "போர் போர்"னு ஒரே அக்கப்போர்.
போர்லயே காலம் கழியுது. திருமண வயசு தாண்டி நடுத்தர வயசு ஆகுது சாந்தனுவுக்கு. "நமக்குப் பிறகு யார் இந்த நாட்டை ஆள்றது?"னு கவலைப்பட ஆரம்பிச்சு, வழக்கம்போல கண்ணாலம் பண்ண முடிவெடுக்குறான்.
காலம் போன காலத்துல எவன் பொண்ணு குடுப்பான்? சரி... யார கல்யாணம் பண்ணலாம்னு அப்பன் கிட்ட கேக்கலாம்னு காட்டுக்குப் போறான்.
***********
காட்டுல அவங்கப்பன் பிரதீபன் தவம் பண்றப்போ, கங்கை நதி பெண் உருவெடுத்து அவன் கிட்ட வர்றா... (நதி எப்பிடிய்யா பெண் உருவெடுக்கும்? தம்பி... பொங்கல் வேணுமா, வேணாமா... வேணும்னா அப்பிடி ஓரமாப்போய் ஒக்காரு...)
"யாரும்மா நீயி"ன்னு பிரதீபன் கேட்க, நாந்தேன் கங்கைன்னு அந்தம்மா சொல்ல, யாரு... சிவன் தலையில இருக்குற கங்கம்மாவான்னு இவங்கேக்க, ஆமான்னு அவ சொல்ல, சரி இங்க எதுக்கு வந்தன்னு இவன் திருப்பிக்கேக்க, நான் உங்க மகனை கல்யாணம் பண்ண விரும்புறேன்னு கால் பெருவிரலால மண்ணுல சுத்தி சுத்தி கங்கம்மா சொல்ல, பிரதீபனுக்கு ஒரு மண்ணும் புரியல.
சரி சரி பாப்போம்னு சொல்லி அனுப்பிவிடுறான். (சிவன் தலையில ஒருபக்கம் இருந்துக்கிட்டு, இன்னொரு பக்கம் சாந்தனுவ கல்யாணம் பண்ணா சிவன் கோச்சுக்க மாட்டாரா...?)
கொஞ்ச நேரத்துல சாந்தனு வந்து சேர்றான். "வாங்க மகனே"ன்னு மகனை வரவேற்குறான் பிரதீபன். "டே தகப்பா.. இது ஒனக்கு நியாயமாடா? எனக்கு ஒரு பொண்ணு பாத்து கல்யாணம் பண்ணி வக்கிறத விட்டுட்டு, காட்டுக்குள்ள வந்து தவம் பண்றியே"ன்னு ஓன்னு அழுறான் சாந்தனு.
"என்னங்க மகனே இப்பிடி சொல்லிட்டீங்க.. உங்களுக்கு பொண்ணு ரெடி. ஏற்கனவே பாத்து வச்சிட்டேன். கொஞ்சம் வெயிட் பண்ணுங்க. அவங்களே வந்துருவாங்க"ன்னு சொல்லி முடிக்க கரெக்டா கங்கம்மாவும் வந்து சேர்றா...
அண்ணலும் நோக்க, அவளும் நோக்க.. அப்புறமென்ன கண்ணாலந்தான். இந்த எடத்துல ஒரு ட்விஸ்ட்டு வைக்கிறா கங்கம்மா...
"என்னைய திருமணம் செய்யணும்னா ஒரு நிபந்தனை.... கல்யாணத்துப் பிறகு நான் என்ன செஞ்சாலும் என்னை கேள்வி கேக்கப்படாது. மீறி கேட்டா அடுத்த நொடியே டைவர்ஸ் பண்ணிருவேன்" அப்பிடின்னு கங்கம்மா கண்டிசன் வைக்கிறா...
கங்கம்மாவ பாத்ததுல இருந்து ஏற்கனவே புல் பார்ம்ல இருந்த சாந்தனு, தண்ணி தெளிச்சு விட்ட ஆடு மாதிரி மண்டைய ஆட்டிட்டான்...
"கிறுக்குப் பயபுள்ள.. இவ பெருசா என்ன செஞ்சிறப் போறவ...?" அப்பிடின்னு நெனச்சிட்டே சரின்னு மண்டைய ஆட்ட, கல்யாணம் நடக்குது.
பொங்கல் ரெடி...
மகாபாரதம்
முதல் பாகம் 3 - பீஷ்மன்-பிறப்பு
கல்யாண மூட்ல இருந்த சாந்தனுவுக்கு, கங்கம்மா தான் சாட்சாத் அந்த புண்ணிய நதி கங்கா தேவி அப்பிடிங்குற பேக்ரவுண்ட் தெரியாது. அவன் அப்பனும் அதைச் சொல்லல...கல்யாணத்தை முடிச்சிட்டு சட்டுபுட்டுன்னு ஆகறத பாப்போம்னு முடிவுபண்ணி, களத்துல இறங்குறான் சாந்தனு. ஐயிரண்டு திங்களில் அழகா ஒரு குழந்தை பிறக்குது. "அகண்ட" இந்த பாரதத்தை ஆள வாரிசு வந்தாச்சுன்னு சாந்தனு ரொம்ப சந்தோஷப்படுறான். ஆனா சந்தோஷம் ரொம்பநாள் நீடிக்கல.... புதுசா பிறந்த குழந்தைய தூக்கிட்டுப்போன கங்கம்மா, அத கங்கை ஆத்துல தூக்கி எறிஞ்சிட்டு வர்றா...
"அடிப்பாவி.... பெத்த தாயா நீ... பெத்த பேயி..."ன்னு மனசுல திட்டுற சாந்தனு, நேரடியா திட்ட முடியல... வாரிசுக்குத் தான கல்யாணம் பண்ணோம், இப்ப அந்த வாரிசையே ஆத்துல போட்டு வந்துட்டாளே....ன்னு புலம்புன சாந்தனு அதை நேரடியா அவகிட்ட அதைக் கேக்கமுடியல... கேட்டா டைவர்ஸ் ஆயிருமே?
"நான் என்ன செஞ்சாலும் ஏன்னு கேக்கப்படாது... மீறிக்கேட்டா உடனடி டைவர்ஸ்"ன்னு வரம் வாங்கிட்டாளே...? என்ன பண்றது?
கொஞ்சநாள் கழிச்சு இரண்டாவது குழந்தை பிறக்குது. அதையும் கொண்டுபோயி ஆத்துல தூக்கிப் போட்டா... இப்பிடியே ஏழு குழந்தைகள் பிறந்து ஏழையும் ஆத்துல தூக்கிப் போட்டா... சாந்தனு செம காண்டுல வெயிட் பண்றான்.
எட்டாவது குழந்தை பிறக்குது. கதையில டர்னிங் பாயிண்ட்டும் நெருங்குது. எட்டாவதை எடுத்துட்டு கங்கம்மா ஆத்துக்குப் போறப்போ நிப்பாட்டுறான் சாந்தனு.
"யம்மா கங்கம்மா... என்னைய என்ன கேணையன்னு நெனச்சியா... ஏழு குழந்தைகள ஆத்துல தூக்கிப் போட்டுட்ட... என்ன ஆனாலும் சரி, இந்தக் குழந்தைய மட்டும் ஆத்துல போட விடமாட்டேன்"னு சொல்றான்.
அதுக்கு கங்கம்மா "மன்னா... குடுத்த வரத்தை மீறிவிட்டீர். இனி நாம் சேர்ந்து வாழமுடியாது. இப்பவே டைவர்ஸ் பண்ணிட்டு கிளம்புறேன். அதேநேரம் உண்மையையும் சொல்லிட்டுப் போறேன். நான் தான் புண்ணிய நதி கங்காதேவி. உன்னைய கல்யாணம் பண்ணச்சொல்லி தேவர்கள் தான் அனுப்பி வச்சாங்க"ன்னு சொல்றா...
"தேவர்களா... அவிங்களுக்கு வேற வேலையே கிடையாதா? உன்னைய ஏம்மா அனுப்பிவச்சாங்க"ன்னு சாந்தனு கேக்க உண்மைய சொல்றா கங்கம்மா....
**********
"முன்னொரு காலத்தில் (ஆமாங்க... முன்னாடி ஒரு காலத்துல...) பிரம்மன் இந்திரனுக்காக 8 அல்லக்கைகளைப் படைக்கிறான். மேலோகத்துல இந்திரனுக்கு எடுபிடியா வேலை பாக்குற இந்த 8 பயலுகளும், ஒருதடவை வசிஷ்டரோட "மேலோக" ஆசிரமம் வழியா போறானுங்க. போறவிங்க சும்மா போகாம, அங்க நந்தினி பசு இருக்குறதை பாக்குறாங்க. இந்தப் பசு எது கேட்டாலும் குடுக்குமாம் (எவன் எதைக் கேட்டு வாங்குனானோ?)
வசிஷ்டர் முற்றும் துறந்த முனிவர். அந்த முனிவருக்கு எதுக்கு இந்த நந்தினி பசு? பேசாம நாம கொண்டு போயிருவோம்னு கெளப்பிட்டுப் போயிட்டானுங்க. வசிஷ்டர் வர்றாரு. நந்தினிய காணாம ஞானக்கண்(?) கொண்டு பாத்து உண்மைய தெரிஞ்சிகிட்டாரு. கடுப்பான வசி "அந்த 8 அல்லக்கைகளும் பூலோகத்துல பொறந்து நாசமாப் போங்கடே"ன்னு சபிச்சுட்டாரு.
"பெருசு.. என்னய்யா ஆஊன்னா சாபம் விடுறீர்? சரி போகட்டும், சாப விமோசனம்னு ஒண்ணு தருவீரே... அதச் சொல்லும்"னு அல்லக்கைகளோட தலைவன் வசி கிட்ட கேக்குறான்.
அதுக்கு வசி "அடே அல்லக்கை தலைவனே.. நான் சொல்றத நல்லா கேட்டுக்க. உங்க எட்டு பேர்ல, ஏழுபேர் பூலோகத்துல பொறந்த உடனே சாபம் நீங்கும். ஏன்னா அவிங்க உனக்கு உடந்தையா இருந்தவனுங்க... நந்தினி பசுவைத் திருடுன A1 மெயின் அக்யூஸ்டே நீதான். நீ பூலோகத்துல ரொம்ப நாள் வாழ்ந்தாலும் அதர்மத்துக்கு பக்கத்துலயே இருந்து லோல்பட்டு லொங்காத்தான் போகப்போற... உன் சாவு ஒரு திருநங்கையால இருக்கும். கெளம்புங்கடா"ன்னு அனுப்பிட்டார்." அப்பிடின்னு கங்கம்மா பிளாஷ்பேக் சொல்றா...
*********
ஏழு அல்லக்கைகளும் கங்கம்மா வயித்துல பிறந்தவுடனே சாபம் நீங்குச்சு... ஆத்துல எறிஞ்சுட்டா... (அதான் சாபம் நீங்கிருச்சுல்ல, அப்புறம் ஏன் ஆத்துல போடணும்?)
கையில இருக்குற எட்டாவது குழந்தைதான் A1 மெயின் அக்யூஸ்ட். அதாவது நந்தினிய ஆட்டயப் போட்ட பார்ட்டி.
"நம்ம மேரேஜ் டீல் முடிஞ்சது. இந்தக் குழந்தைய நான் எடுத்துட்டுப் போயி வளர்த்துக் கொண்டுவர்றேன். அதுவரைக்கும் உன் திசைக்கே ஒரு கும்புடு"ன்னு சொல்லிட்டு கங்கம்மா கிளம்பிட்டா.
ஒரு பசுமாட்ட ஆட்டயப் போட்டதுக்குத் தான் இத்தன அக்கப்போரும்...
அந்த A1 மெயின் அக்யூஸ்ட் தான் பின்னாடி பீஷ்மனா வாறாப்டி....
பொங்கல் ரெடி...
மகாபாரதம்
முதல் பாகம் 4 - இளவரசன் பீஷ்மன்
முன்னொரு நாளில்..(!) நந்தினி என்ற பசு மாட்டை ஆட்டயப் போட்ட குற்றத்துக்காக வசிஷ்டர் கிட்ட சாபத்தை வாங்குன எட்டு பேருல ஏழுபேரு இந்த ஜென்மத்துல கங்காதேவிக்கு பிள்ளையா பிறந்து அவ ஆத்துல தூக்கிப் போட்டுட்டா... So சாபம் தீர்ந்தது. எட்டாவதாப் பொறந்தவனை வளர்த்தபிறகு தான் வருவேன்னு, குழந்தையத் தூக்கிட்டுப் போயிட்டா கங்காதேவி.கங்காதேவிய நினைச்சு நினைச்சு உருகுறான் மன்னன் சாந்தனு. இப்பிடியே பதினாறு வருசம் ஓடுனபிறகு ஒரு நாள்... ஒரு சின்னப்பய அம்புல வில்லா எறிஞ்சு கங்கைக்கு அணைகட்டுறதைப் பாக்குறான். 🏹 (ஒரு அணைய கட்டுறதுக்குள்ள பென்னி குயிக்குக்கு நாக்கு தள்ளுன கதையெல்லாம் வேற விசயம்)
சின்னப்பயலுக்கு என்ன தைரியம்னு சொல்லிட்டு, வில் எடுத்து அவனோட சண்டை போடுறான் சாந்தனு. திடீர்னு "நிறுத்துங்க"ன்னு சத்தத்தோட வந்து நிக்கிறாங்க ஒரு அம்மா. அட, நம்ம கங்கம்மா.
"கங்கம்மா..."ன்னு சாந்தனு ஓடிவர்றான். நிப்பாட்டுனா கங்கம்மா. "நில்லுங்க, நீங்க எதுக்கு வருவீங்கன்னு தெரியும். அதெல்லாம் நடக்காது. தம்பி, இங்க வாடா. இவருதான் ஒன்ற தகப்பன். இந்த பாரதத்தை ஆளும் மன்னன் சாந்தனு"ன்னு சொல்லி அவனை சாந்தனு கிட்ட ஒப்படைச்சா கங்கம்மா.
"மன்னா, எட்டாவதா பிறந்த நம்ம பையர் இவருதான். இவரு பேரு காங்கேயன் alias தேவவிரதன் (பின்னாடி பீஷ்மரு). இவனுக்கு வில்வித்தைய பரசுராமர் கத்துக் குடுத்தார். Extra curriculars எல்லாம் வசிஷ்டர் கத்துக் குடுத்தார். இனி நீயாச்சு, அவனாச்சு. நா கெளம்புறேன்"னுட்டு போயிட்டா கங்கம்மா.
காங்கேயனை அரண்மனைக்குக் கூட்டிட்டுப் போன சாந்தனு, அவனை இளவரசனா முடிசூட்டுறான்.
பரசுராமர் ஆறாவது அவதாரமாச்சே, இவருதான் திரேதாயுகத்தில ராமாயணத்துல வர்ற கேரக்டர். அவரு எப்பிடி 12,96,000 வருசம் கழிச்சி துவாபர யுகத்துல மகாபாரதத்துலயும் கன்டினியூ ஆகுறார்?
அந்த வசிஷ்டர் முன்னொரு காலத்துல A1 அக்யூஸ்ட்க்கு சாபம் குடுத்தார். அவரே எப்பிடி இந்த ஜன்மத்துல பிறந்த அதே கேரக்டருக்கு extra curriculars சொல்லிக் குடுத்தார்? கன்பீசன்.
தம்பி, இன்னிக்கு பொங்கல்ல நெய் கொஞ்சம் தூக்கல். அப்பச் சரி.
மகாபாரதம்
முதல் பாகம் 5 - அம்பா அம்பிகா அம்பாலிகா
கங்கம்மா மாதிரி இங்க ஒரு யமுனாம்மா கிடைக்குதா பாப்போம்னு ஒரு நப்பாசை தான். ஆனா யமுனாம்மா வரல. சத்யாம்மா வர்றாங்க. அதாவது, யமுனை ஆற்றங்கரையில சத்யவதின்னு ஒரு மீனவப் பொண்ணைப் பாக்குறான். ரொம்ப நாளா காய்ஞ்சி போய்க் கிடந்த சாந்தனுவுக்கு, சத்யவதிய பாத்தவுடனே கல்யாண ஆசை வந்துருச்சி.
மன்னனாச்சேன்னு சத்யவதி சாந்தனு கிட்ட பேசுறா. சாந்தனு அவகிட்ட அவ அப்பன் டீடெயில்ஸ் எல்லாம் வாங்கிட்டு, நேரா அவ அவன் கிட்ட போயி சத்யவதிய பொண்ணு கேக்குறான். சத்யவதி டாடி பேரம் பேசுறதுல கில்லாடி.
"மன்னா, உமக்குப் பிறகு உமது மகன் தேவவிரதன் மன்னனாகக் கூடாது. என் மகள் சத்யவதிக்குப் பிறக்கும் பிள்ளைதான் அரசாள வேண்டும். சம்மதம்னா மத்ததைப் பேசலாம்"னு சொல்றான் சத்யவதியோட அப்பா. "அடப் போய்யா, நீயும் உன் கன்டிசனும்"னு சொல்லிட்டு வந்துட்டான் சாந்தனு.
***********
வந்துட்டானே ஒழிய சத்யவதிய அவனால மறக்கமுடியாம மூட்அவுட் ஆகிட்டான். கல்யாண வயசுல மகன் தேவவிரதன் (பீஷ்மன்) இருந்தாலும், விசயம் தெரிஞ்சவுடனே நேரா சத்யவதியோட அப்பன்ட்ட போயி "உன் பேரனே நாடாளட்டும். நான் விட்டுக் குடுக்குறேன். உடனே எங்கப்பனுக்குக் கல்யாணத்த பண்ணு"ங்குறான். (நம்ம ஊர் அன்வர் ராஜா எம்.பி.க்கு அவர் பிள்ளைங்க தான் பேசி ரெண்டாவது கல்யாணம் பண்ணி வச்சாங்க. இத தினமலர்க்காரன் செம நக்கலடிச்சான்)
தேவவிரதன் சொன்னத முதல்ல அவனும் நம்பல. உடனே "எங்கம்மா கங்காதேவி மேல சத்தியமா நான் நாடாள மாட்டேன். நான் கல்யாணம் பண்ணா, என் வாரிசுகள் நாடாளும் போட்டிக்கு வருவாங்க. அதனால நான் கல்யாணமே பண்ணமாட்டேன். இது சத்தியம்" அப்பிடின்னு சத்யவதி அப்பன் கையில அடிச்சி தேவவிரதன் சத்தியம் பண்றான்.
அப்போ தேவர்கள் எல்லாம் வானத்துல இருந்து தேவவிரதனை வாழ்த்தி "பீஷ்மன்"னு சொல்றாங்க. அப்ப இருந்து அவன் பீஷ்மனாயிட்டான். இந்த தேவர்களுக்கு வேற வேலையே இல்லையா? அந்தரத்துல ஆளாளுக்கு ஒரு கடையப் போட்டுட்டு என்னா அக்கப்போர் பண்றானுங்க?
(அது சரி, வானத்துல இருந்து சத்தம் வருமா? ஏன் வராது? புதிய ஏற்பாட்டுல இயேசுவுக்கு யோவான் ஸ்நானகன் ஞானஸ்நானம் பண்ணவுடனே மட்டும் வானத்துல இருந்து சத்தம் வந்ததுல்ல? அப்பிடித்தான்னு வச்சிக்கங்களேன்)
தான் கல்யாணம் பண்ண மாட்டேன்னு சத்தியம் பண்ணி எனக்கு ரெண்டாவது கல்யாணம் பண்ணி வைக்கிறானேன்னு மகனை நினைச்சி சந்தோஷப்பட்ட சாந்தனு "மவனே பீஷ்மா, I am so proud of you. நீ எப்ப விரும்புறியோ அப்பதான் உன் உயிர் பிரியும்" அப்பிடின்னு சாந்தனு மகன் பீஷ்மனுக்கு வரம் குடுக்குறான். (வரம்ன்னா சாமிதானய்யா குடுக்கும்? இங்க இவன் குடுக்குறான்? சரி போகட்டும், எவங்குடுத்தா என்ன?)
************
அடுத்து சாந்தனு-சத்யவதி கல்யாணம் நடக்குது. சட்டுபுட்டுன்னு ஆகுறத பாப்போம்னு களத்துல இறங்குறான் சாந்தனு. ரெண்டு குழந்தைகளும் பிறக்குது. பர்ஸ்ட் சித்ராங்கதன், செகண்ட் விசித்ரவீரியன். சித்ராங்கதன் ஒரு டென்சன் பார்ட்டி, எப்ப பாத்தாலும் எரிஞ்சி எரிஞ்சி விழுவான். விசித்ரவீரியன் ஒரு நோஞ்சான் பார்ட்டி. ஆஸ்பத்திரியே கதியா கிடக்குறான். இவன் நிலைமைய நினைச்சு நினைச்சு ஒரேயடியா போய்ச் சேர்ந்துட்டான் சாந்தனு. (போயிட்டியா!)
சத்யவதியோட பிள்ளைங்க ரெண்டுபேரும் சின்னப்பசங்க. அதனால யாருக்கும் முடிசூட்டாம பீஷ்மன் குருட்சேத்திர நாட்டோட மேனேஜ்மென்ட் பாத்துக்குறான். சித்ராங்கதன் பெரிய பையனா வளர்ந்த உடனே அவனை மன்னனாக்குறான்.
இப்ப ஒரு டர்னிங் பாயின்ட். என்னன்னா, வானத்துல (ஆமாங்க வானத்துல தான்) ஒரு கந்தர்வன்(?), அவம்பேரும் சித்ராங்கதன். "என் பேர்ல இன்னொருத்தனா? அவனைக் கொல்லாம விட மாட்டேன்"னு கிளம்பி வந்து, காட்டுல சிவனேன்னு வேட்டையாடிட்டு இருந்த மன்னன் சித்ராங்கதனை கொன்னே போட்டுட்டான் (ஏண்டா, பேரு வச்சது குத்தமாடா?)
வேற என்ன பண்றது? திரும்பவும் நாட்டை மேனேஜ்மென்ட் பண்றான் பீஷ்மன். நோஞ்சான் விசித்ரவீரியன் பெரிய பையனா வளர்ந்த உடனே அவன மன்னனாக்குறான்.
தல விசித்ரவீரியன் பெர்மனன்ட்டா ஆஸ்பிடல்ல அட்மிட் ஆகிட்டு அப்பப்போ அரண்மனைக்கு வருவான். அதனால பீஷ்மன் தான் திரும்பவும் நாட்டோட மேனேஜ்மென்ட்.
மன்னன் விசித்ரவீரியனுக்கு பேர்ல தான் வீர்யம். ஆனா விசயம் ஒண்ணுமில்ல. எப்ப பாத்தாலும் ஆஸ்பத்திரி தான். பேசாம இந்தப் பயலுக்கு கல்யாணம் பண்ணிவச்சா உடல்நிலை முன்னேறும்னு அவங்கம்மா சத்யவதி யோசிக்குறா. (பாத்தீங்களா, அப்பவே இப்பிடித்தான் யோசிச்சிருக்காய்ங்க)
யோசிச்சா மட்டும் போதுமா? உடனே எந்தெந்த நாட்டு மன்னனுக்கெல்லாம் கல்யாண வயசுல இளவரசி இருக்காங்களோ, அந்தந்த நாட்டு மன்னனுக்கெல்லாம் பொண்ணு கேட்டு ஓலை அனுப்பச் சொல்றா ராஜமாதா சத்யவதி.
ஓலை கிடைச்ச மன்னர்ஸ் எல்லாம் நோஞ்சாம்பயலுக்கு பொண்ணு குடுக்க விரும்பாம, அவங்கவங்க பொண்ணுகளுக்கு வேறவேற எடத்துல அவசர அவசரமா மாப்பிள்ளை பாத்து கல்யாணம் பண்ணி வைக்கிறாங்க.
**********
அப்போ காசியை ஆண்ட மன்னனுக்கு அம்பா, அம்பிகா, அம்பாலிகான்னு மூணு பொண்ணுங்க. மூணு பேருக்கும் சுயம்வரம் நடத்த எல்லா ராஜாக்களுக்கும் இவன் ஒருபக்கம் ஓலை அனுப்புறான் காசி மன்னன். (இது ஓலை வாரம்)
ஆனா அஸ்தினாபுரத்துக்கு மட்டும் அவன் ஓலை அனுப்பல. சுயம்வரத்துக்கு அந்த நோஞ்சாம்பய விசித்ரவீர்யன் வந்துருவானோ? வந்தா ஒன்னும் சொல்லமுடியாது. மூணு பொண்ணுங்கள்ல யாராச்சும் ஒருத்தி அவன் கழுத்துல மாலையப் போட்டுட்டா திருமணம் பண்ணி வச்சாகணும். ஆனா பொண்ணு வாழ்க்கை வீணாயிருமோன்னு காசி மன்னனுக்கு ஒரு பயம். அதனால அஸ்தினாபுரத்துக்கு ஓலை அனுப்பாம விட்டுட்டான்.
என்ன ஒரு அவமானம்? சத்யவதி பீஷ்மனைக் கூப்பிட்டு இதுக்கு பழிக்குப் பழி வாங்கணும். நீ உடனேபோயி காசி மன்னனோட மூணு பொண்ணுங்களையும் தூக்கிட்டு வான்னு சொல்றா. (பாத்தீங்களா, பொண்ணைத் தூக்கிட்டு வர்ற பழக்கத்தையும் அப்பவே ஆரம்பிச்சிட்டாய்ங்க)
பீஷ்மன் தயங்குறான். நானோ ஒரு பிரம்மச்சாரி. ஒன்னா ரெண்டா, மூணு பொண்ணுங்களைத் தூக்கிட்டு வந்தா என் பிரம்மச்சரிய விரதம் என்னாகும்னு தயங்குறான்.
பழிக்குப் பழி, இது என் உத்தரவுன்னு சத்யவதி சொல்லிட்டா. வேற வழியில்லாம வில் அம்பெல்லாம் எடுத்துக்கிட்டு ரதத்துல தனி ஆளா கிளம்புறான் பீஷ்மன்.
*****
(ஒட்டுமொத்த உலகமும் பாரதம் என்றே அழைக்கப்பட்டது. அதை சூரியவம்சமும், சந்திர வம்சமும் ஆண்டதுன்னு சொல்லிட்டு எந்த அண்டைநாட்டு மன்னர்களுக்கு எப்படி ஓலை அனுப்பமுடியும்? கன்பீசன்.)
ரொம்ப கேள்வி கேட்டீர்ன்னா பொங்கல் கிடைக்காது. சிந்திக்கிறதெல்லாம் உம்ம வேலை இல்லைங்காணும்.
----
படம்: சாந்தனு & சத்யவதி
ரவிவர்மனின் ஓவியம்
மகாபாரதம்
முதல் பாகம் 6, 7 & 9 - அம்பாவின் சாபம்
அஸ்தினாபுரத்துக்கு காசி மன்னன் அவனோட பொண்ணுங்க அம்பா, அம்பிகா, அம்பாலிகா சுயம்வரத்துக்கு ஓலை அனுப்பாததால காண்டான ராஜமாதா சத்யவதி, பீஷ்மன்ட்ட காசிக்குப் போயி மூணு பொண்ணுகளையும் தூக்கிட்டு வரச்சொல்றா. ரதத்துல தனி ஆளா வில் அம்போட காசிக்குப் போன பீஷ்மன், நேரா அரண்மனைக்குப் போறான். அங்க அம்பா, அம்பிகா, அம்பாலிகான்னு மூணு இளவரசிகளுக்கும் சுயம்வரம் நடந்திட்டிருக்கு,
மாஸ் என்ட்ரி குடுத்த பீஷ்மன் "காசி மன்னா. சுயம்வரத்துக்கு எங்களுக்கு மட்டும் ஓலை அனுப்பாம அவமானப்படுத்திட்ட. அதனால மூணு இளவரசிகளையும் தூக்கிட்டு வரச்சொல்லி ராஜமாதா சத்யவதி உத்தரவு போட்டுட்டாங்க. இதோ தூக்கிட்டுப் போறேன். முடிஞ்சா தடுத்துக்கோ"ன்னு சொல்லிட்டு மூணுபேரையும் இழுத்துட்டுப் போறான் பீஷ்மன்.
இந்த பீஷ்மன் அவன் நெனச்ச நேரத்துல சாகுற வரம் வாங்குனதால, சண்டை போட்டு ஜெயிக்கமுடியாது. அதனால மாவீர மன்னர்கள் எல்லாரும் வேடிக்கை மட்டும் பாக்குறாங்க. வேறென்ன பண்ணமுடியும்? தன்னை விட வலுத்தவன் கிட்ட பாச்சா பலிக்காது.
மூணு பொண்ணுங்களையும் தூக்கிட்டு ரதம் வர்ற வழியில அம்பாவோட லவர் சால்வன் பீஷ்மன் கிட்ட சண்டைக்கு வர்றான். அவனையும் தோற்கடிச்சிட்டு நேரா அஸ்தினாபுரம் வந்த பீஷ்மன், மூணு பேரையும் சத்யவதி கிட்ட ஒப்படைக்கிறான். அம்பா தன்னோட லவர் சால்வன் பத்தி சத்யவதி கிட்ட சொன்னவுடனே, சத்யவதி அம்பா விரும்புனவன போய் கட்டிக்கோன்னு சொல்லி அனுப்பிவிடுறா. (காதலுக்கு மரியாதை)
அம்பா அவ லவர் சால்வனைத் தேடிப்போய் "நம்ம லவ் பத்தி சொன்னவுடனே என்னை அனுப்பி வச்சிட்டாங்க. வா கல்யாணம் பண்ணலாம்"னு கூப்பிட்டதுக்கு "நா பீஷ்மனோட சண்டை போட்டு தோத்துட்டேன். இனி உன்னை கல்யாணம் பண்ணமாட்டேன். கெளம்பு கெளம்பு"ன்னு கெளப்பிவிட்டான் அவ லவர் சால்வன். (என்னடா லாஜிக் இது? சால்வனை ஒருபக்கம் லவ் பண்ணிட்டு இன்னொரு பக்கம் சுயம்வரமும் பண்ணுவ. சுயம்வரம் பெயிலியர் ஆனவுடனே திரும்பிவந்து லவர் கால்ல விழுவியா?)
அம்பாவுக்கு கிரிட்டிகல் பொசிசன். என்ன பண்றதுன்னு தெரியல. ஒட்டுமொத்த கோபமும் பீஷ்மன் மேல திரும்புது. அந்த பீஷ்மன் கிட்டயே நியாயத்தைக் கேப்போம்னு அஸ்தினாபுரம் அரண்மனைக்குத் திரும்புறா.
அங்க வந்து பாத்தா, அந்த நோஞ்சாம்பய விசித்ரவீரியனுக்கு அம்பிகா, அம்பாலிகா ரெண்டு பேரையும் கல்யாணம் பண்ணி வைக்கிறாங்க ராஜமாதா சத்யவதியும், பீஷ்மனும்.
இதுதான் சமயம்னு அம்பா நேரா சத்யவதி கிட்ட போயி, நடந்த லவ் பெயிலிர சொல்லி, தன்னையும் விசித்ரவீரியனுக்கு கல்யாணம் பண்ணி வைங்கன்னு சொல்றா.
"இந்தாம்மா, நீயாச்சு உன் லவ்வராச்சு. நா என்ன பண்ணமுடியும்? உன் காதலுக்கு மரியாதை குடுத்து உன்னை அனுப்பி வச்சேன். ஆனா உன் லவர் உன்னை ரிஜெக்ட் பண்ணா அதுக்கு நான் என்ன பண்ணமுடியும்? வேணும்னா ஒன்னு பண்ணு. அந்தப்புரத்துல நிறைய தாசிகள் இருக்காங்க. நீயும் அவங்களோட போய் சேந்துக்கோ"ன்னு சத்யவதி சொல்றா.
அம்பாவுக்கு இதைக்கேட்டு செம ஷாக். வந்துச்சு கோபம். "இந்தாம்மா... நான் சத்திரிய வம்சம். உன்ன மாதிரி மீனவப் பொண்ணா பொறந்து மன்னனை மயக்குனவ நான் கிடையாது. உன்கிட்ட என்ன பேச்சு? பீஷ்மா, நீதான என்னய தூக்கிட்டு வந்த... நீயே எனக்கு ஒரு வழியச் சொல்லு"ன்னு கேக்குறா.
பீஷ்மனுக்கு ஒன்னும் சொல்லத் தெரியல. "அம்மா சத்யவதி சொன்னதுதான் சரி. நீ வேணும்னா அந்தப்புர தாசியா இரு. இல்லாட்டி உன் வழிய பாத்துட்டு கெளம்பு"ன்னு சொல்றான் பீஷ்மன்.
செம காண்டான அம்பா "அடே பீஷ்மா, என்னைத் தூக்கிட்டு வந்து நடுத்தெருவுல விட்டுட்டல்ல? இந்த நாள்.. உன் டைரில நோட் பண்ணிக்கோ... மவனே, நீ நெனச்ச நேரம் சாகுற வரம் வாங்குனவனா? இல்ல, உன் சாவுக்கு நான்தாண்டா காரணம். இது சத்தியம்டா"ன்னு தொடைல அடிச்சி சத்தியம் பண்ணிட்டு போயே போயிட்டா.
உன் சாவு என் கையாலன்னு பீஷ்மன்ட்ட சவால் விட்ட அம்பா நேரா காசிக்கு அவ அப்பன்ட்ட போறா. பாசக்கார அப்பனா இருந்தாலும், பீஷ்மனுக்கு பயந்து அம்பாவ விரட்டியடிக்கிறான்.
நேரா ஆத்தங்கரைக்கு வர்றா. ஆத்தங்கரையில உக்காந்து அழுதுட்டிருந்த அம்பாவ சில முனிவர்ஸ் பாத்து ஆறுதல் சொல்றாங்க.
"இந்த வீணாப்போன பீஷ்மன் மாதிரி சத்திரியன்ஸை எல்லாம் சண்டைபோட்டு விரட்டுறது பரசுராமர் தான். அதோட பீஷ்மனுக்கு தொழில் சொல்லிக்குடுத்த குருவும் பரசுராமர் தான். அவர் himalayasல தான் இருக்கார். நீ அவர்ட்ட போம்மா. உன் பிரச்சினைய அவர்தான் தீர்த்து வைப்பார்"ன்னு சொல்லி திருப்பி விடுறாங்க முனிவர்ஸ் எல்லாம்.
அம்பா நேரா himalayas போயி பரசுராமரை சந்திச்சு நடந்ததை சொல்றா. பரசுராமர் உடனே பீஷ்மனுக்கு ஒரு லெட்டர் எழுதி தூதன்ட்ட குடுத்து விடுறார்.
அதாவது "பிராது குடுத்த அம்பாங்குற பொண்ணு என்கிட்ட தான் வந்திருக்கா. நீ என்ன சொல்ற? பேசாம என்கூட சண்டைக்கு வா. சண்டையில நீ தோத்துட்டா அவளைக் கல்யாணம் பண்ணனும். நான் தோத்துட்டா அவளை விரட்டி விட்டுர்றேன். டீலா, நோ டீலா?"னு லெட்டர் அனுப்புறார் பரசு.
லெட்டரை படிச்சவுடனே பீஷ்மன் குரு பரசு கூட சண்டை போட himalayas கெளம்புறான். சண்டை நடக்குது. சண்டையில பீஷ்மன் win பண்றான். தொழில் சொல்லிக் குடுத்த குருவுக்கு தோல்வி. வானத்துல இருந்து தேவர்ஸ் எல்லாரும் இந்த வெட்டிச் சண்டைய வேடிக்கை பாக்குறாங்க.
அம்பாக்கு பீஷ்மன் மேல இருந்த கோபம் இப்போ பரசுராமர் மேலயும் பரவுது. நேரா அந்தாள்ட்ட போயி "யோவ் பெருசு... நீ எதோ பெரிய மனுசன்னு நினைச்சி உன்கிட்ட ஞாயங்கேக்க வந்தா, சண்டையில தோக்குறமாதிரி தோத்து பீஷ்மனை காப்பாத்துறியா நீ?"ன்னு கேக்குறா.
"எம்மா... ஆள விடு. நா வேணா ஒதுங்கிக்குறேன். நீ ஆத்தங்கரைக்குப் போயி முருகனை நோக்கி தவம் பண்ணு. முருகன் வந்து உனக்கு உதவுவார்"ன்னு சொல்லிட்டு எஸ்கேப் ஆகுது பெருசு.
ஏண்டா டே... கேமா ஆடுறீங்கன்னு புலம்பிட்டே ஆத்தங்கரைக்குப் போன அம்பா முருகனை வேண்டி தவம் பண்றா.
12 வருசம் (அடப்பாவிகளா) தவம் பண்ண பின்னாடி சாம்பிராணிப் புகையோட நேரில் காட்சியளிக்கிறான் லார்ட் முருகன். சினிமா மாதிரியே என்ன வரம் வேண்டும்னு கேக்க, அம்பா "என் வாழ்க்கைய நாசமாக்குன அந்தப் படுபாவி பீஷ்மன் சாகணும். அதுவும் என் கையால"ன்னு சொல்றா.
"அது உன்னால முடியாது. அதுவும்போக ஒரு பெண்ணால் பீஷ்மனுக்கு மரணமில்லை"ன்னு முருகன் சொல்ல "அப்பிடின்னா நான் பெண்மை நீங்கிப் பிறக்க வழிசொல்லு"ன்னு அம்பா கேக்குறா.
"அது வேற டிபார்ட்மென்ட். லார்ட் சிவன் தான் அதையெல்லாம் டீல் பண்றார். நீ சிவன்ட்ட போய் கேளு. நா கெளம்புறேன். என்னால ஆன ஒரு உதவி, இந்தா இது ஒரு முத்துமாலை. இதை எந்த ஆண் அணியுறானோ அவனால ஈசியா பீஷ்மனை கொல்லமுடியும். நா வரேன்"னு கெளம்பிட்டான் முருகன். அது சரி... இந்த முருகம்பய இங்க எப்பிடி வந்தான்? எப்பிடி எல்லாம் கோர்க்குறானுங்க?
முத்துமாலைய எடுத்துட்டு பீஷ்மனோட எதிரி பஞ்சாப் மன்னன் துருபதன் கிட்ட போய் குடுத்துட்டு, திரும்பவும் இமயமலையில சிவனை நோக்கி தவம் பண்றா அம்பா. So நினைச்ச நேரம் சாகுற வரம் வாங்குன பீஷ்மனை இப்ப துருபதன் நினைச்சா கொல்லலாம். கொன்னு தொலைய வேண்டியது தான? ம்ஹும். தவம் கன்டினியூ ஆகுது.
திரும்பவும் சாம்பிராணிப் புகை. இந்த வாட்டி சிவன் வரார். வந்து என்ன வரம் வேணும்னு கேக்க "அந்தப்பய பீஷ்மன் என் கையால சாகணும். அதுக்கு நான் பெண்மை நீங்கிப் பிறக்கணும்"னு அம்பா சொல்றா.
"உன்னோட இந்த ஜென்மத்துல பீஷ்மன் சாகமாட்டான். டைம் வேஸ்ட் பண்ணாத. அடுத்த ஜென்மத்துல நீ சிகண்டின்னு ஒரு திருநங்கையா பிறந்து வா. அந்த பீஷ்மனோட சாவுக்கு சிகண்டியான நீதான் காரணம். நா வரேன்"னு சிவன் கெளம்பிட்டான்.
அதாவது, நந்தினி பசுவை ஆட்டயப்போட்ட A1 அக்யூஸ்டுக்கு இந்த ஜென்மத்துல ஒரு திருநங்கையால தான் சாவுன்னு வசிஷ்டர் சாபம் விட்டது மேட்ச் ஆகுதா? அது.
அம்பாவுக்கு அடுத்த ஜென்மம் வரைக்கும் காத்திருக்க பொறுமையில்ல. இப்பவே செத்து சிகண்டியா பிறப்போம்னு முடிவுபண்ண அம்பா "பீஷ்மா... விடமாட்டேன்டா"ன்னு கத்திக்கிட்டே தீயில விழுந்து எரிஞ்சு சாம்பலாகுறா.
அப்பிடியே 12 வருசம் பேக்ல போயி, அஸ்தினாபுரம் அரண்மனையில மன்னன் நோஞ்சாம்பய விசித்ரவீர்யனுக்கு அம்பிகாவையும், அம்பாலிகாவையும் திருமணம் பண்ணி வச்சாங்களே. அங்க போவோம்.
அம்பிகாவும், அம்பாலிகாவும் பால் சொம்போட பர்ஸ்ட் நைட்டுக்குத் தயாராகுற நேரத்துல, தல விசித்ரவீரியன் பொசுக்குன்னு மயங்கி விழுறான்.
மகாபாரதம்
முதல் பாகம் 8 - திருதராட்டிரன் பிறப்பு
ஆஸ்பத்திரிக்கு ரெகுலர் விசிட் அடிக்கிறதால, டாக்டர்ஸ்க்கு அவன் நிலைமை தெரியும். எவ்வளவோ மருந்து குடுத்தும் பிரயோஜனம் இல்லாம, மயக்கம் தெளியாமலே மண்டையப் போட்டுட்டான்.
அவ்வளவு தான். அஸ்தினாபுரம் அரண்மனையே திகைச்சு நிக்குது. சாந்தனு-சத்யவதி தம்பதிங்க பெத்தது ரெண்டு. ரெண்டுமே அல்பாயுசுல போச்சு. சத்யவதி அழுது புலம்புறா. இதுக்குத்தானா எங்கப்பன் பீஷ்மன்ட்ட சத்தியம் வாங்குனான்? பீஷ்மனும் கல்யாணம் பண்ணாம, நாடாளாம என்ர பிள்ளைகளும் நாடாள முடியாம இது என்னடா சாபக்கேடுன்னு புலம்புறா.
அஸ்தினாபுரத்து மன்னனுக்கு வாரிசு இல்லாமப் போச்சே. என்ன செய்றது? வாரிசு இல்லைன்னு தெரிஞ்சாலே பக்கத்து நாட்டுக்காரன் படையெடுத்து வருவான். ஆனா இங்க பீஷ்மனுக்கு பயந்துட்டு ஒருபய வரமாட்டான். ஆனா வாரிசு வேணுமே? என்ன பண்றது?
ஜெயலலிதா கால்ல விழுந்து மந்திரியா இருந்த அம்புட்டுபேரும் அந்தம்மா போய்ச் சேர்ந்தவுடனே சசிகலா கால்ல விழுந்தமாதிரி, அஸ்தினாபுரம் அமைச்சர்களுக்கு அடுத்து யார் கால்ல விழணும்னு தெரியல. மன்னன் விசித்ரவீர்யன் போய்ச் சேர்ந்துட்டான். பீஷ்மன் நாடாள மாட்டான். மன்னனுக்கு வாரிசுமில்லை. கல்யாணம் பண்ண கையோட போய்ச் சேர்ந்துட்டான். இனி என்ன நடக்குமோ அப்பிடின்னு அவங்க ஒருபக்கம் புலம்புறாங்க.
இன்னொரு பக்கம், அந்த விசித்ரவீர்யன் ரெண்டு கல்யாணம் பண்ணிட்டு அவம்பாட்டுக்கு போயி சேர்ந்துட்டான். இனி எங்க கதி என்னன்னு அம்பிகாவும், அம்பாலிகாவும் புலம்புறாங்க. தங்களைத் தூக்கிட்டு வந்த பீஷ்மன் மேல இவங்களுக்கும் கடுப்பு ஏறுது. இந்த பீஷ்மன் பயலால அம்பா வாழ்க்கையும் போச்சு. அம்பிகா வாழ்க்கையும் போச்சு. அம்பாலிகா வாழ்க்கையும் போச்சு.
***********
இப்பிடி எல்லாரும் புலம்பித் தவிச்சபிறகு, சத்யவதி பீஷ்மனைக் கூப்பிட்டு பேசுறா. நியாயப்படி பீஷ்மன் சாந்தனுவோட மூத்த மகன். அவன் தான் நாடாளணும். ஆனா அவன் சத்யவதி அப்பனுக்கு சத்தியம் பண்ணி குடுத்ததால அதை மீறாம இருக்கான்.
பிரம்மச்சரியத்தை ஸ்டாப் பண்ணிட்டு அம்பிகா அம்பாலிகாவ மேரேஜ் பண்ணிக்கோ. நமக்கு வாரிசே இல்ல பாத்தியான்னு எவ்வளவோ பேசிப் பாக்குறா சத்யவதி.
பீஷ்மன் அதுக்கு ஒத்துக்கல. வாரிசுக்கு நீ எதுவோ பண்ணு. ஆனா நான் பண்ண சத்தியம் பண்ணதுதான். அதை மீறமாட்டேன்னு சொல்லிட்டு ஒதுங்கிட்டான்.
அஸ்தினாபுரத்தை ஆள வாரிசு இல்லை. என்னதான் பண்றது?
*************
இப்ப கதையில ஒரு ட்விஸ்ட்டு.
என்னன்னா, திடீர்ன்னு சத்யவதிக்கு ஒரு சின்ன பிளாஷ்பேக் ஞாபகத்துக்கு வருது.
அதாகப்பட்டது... சாந்தனுவ கல்யாணம் பண்றதுக்கு கொஞ்ச நாள் முன்னாடி ஒருநாள்ல, அவ மீனவப் பொண்ணா படகு ஓட்டிட்டு இருந்தப்போ, தனியா படகுத்துறையில இருக்கா. அப்போ பராசரன்னு ஒரு முனிவன் அங்க வர்றான். வந்தவன் "ஏ புள்ள... என்னய படகுல ஏத்திட்டுப் போயி அக்கறையில இறக்கி விடுறயா"ன்னு சத்யவதி கிட்ட கேக்குறான். சரி முனிவராச்சேன்னு அந்தாள படகுல ஏத்திட்டுப் போறா சத்யவதி.
படகு அக்கறை நோக்கி போயிட்டே இருக்கு. சத்யவதி படகு ஓட்டுறா. பராசர முனிவனோ அவன் பார்வைய சத்யவதி மேல ஓட்டுறான். அவளும் கண்டுக்காம படகு ஓட்டுறா. அவ அழகுல ரொம்பவே அப்செட்டாகிப் போன பராசரன், தன்னோட "தவ ஒளி"ய சத்யவதி மேல இறக்குறான். உடனே ஒரு குழந்தை சத்யவதி மடில விழுந்து "ஹாய் மம்மி... நாந்தான் வியாசன்" அப்பிடின்னு சொல்லுது. (இந்த விசயம் சாந்தனுவுக்குத் தெரியுமா?)
(டியர் முனிவர்ஸ்.. இதுக்கா ஐம்புலன்களையும் அடக்கி தவம் பண்ணீங்க? சராசரி மனுசனை விட படுகேவலமா இருக்கீங்களே!)
காரியம் முடிஞ்ச உடனே எஸ்கேப் ஆகுறது சாதாரண ஆம்பளை மட்டுமா? பராசர முனிவனும் தான். அக்கறையில இறங்குன உடனே தல எஸ்கேப்.
"அம்மா, நான் தவம் பண்ணப் போறேன். நீ என்னை எப்ப கூப்பிட்டாலும் நான் வருவேன். இப்ப நான் போயிட்டு வரேன்"னு கைக்குழந்தை வியாசன் பேசிட்டு தவம் பண்ணப் போயிடறானாம். (கைக்குழந்தை எப்பிடி பேசும், எப்பிடி தவம் பண்ணும்னு லாஜிகல் கொஸ்டின் எல்லாம் கேக்கப்படாது)
***********
இந்த பிளாஷ்பேக் ஞாபகத்துக்கு வந்த உடனே சத்யவதிக்கு ஒரு ஐடியா. எப்பிடி பராசரன் தன்மேல "தவ ஒளி"ய இறக்கி வியாசனைப் பெத்தேனோ, அதேமாதிரி இந்த வியாசன் அவனோட "தவ ஒளி"ய நம்ம மருமகள்கள் மேல இறக்கி அவங்களும் குழந்தை பெத்துக்கிட்டா வாரிசுப் பிரச்சினை தீர்ந்ததே? (வாழ்க தவஒளி)
எவ்வளவு சுலபமா பிரச்சினைய தீர்க்குறா இந்த சத்யவதி? இந்த யோசனை வந்தவுடனே வியாசனை நினைக்கிறா சத்யவதி. நினைச்சவுடனே "ஹாய் மம்மி"ன்னு வந்து நிக்குறான் வியாசன்.
"மவனே வியாசா, இந்த அஸ்தினாபுரம் நாட்டை ஆள வாரிசு இல்ல. எப்பிடி பராசரன் "தவஒளி"ய என்மேல இறக்கி நீ பிறந்தியோ, அதேமாதிரி நீயும் உன் "தவஒளி"ய என் மருமகள்கள் மேல இறக்கி அவங்களுக்குப் பிள்ளைவரம் குடு"ன்னு சொல்றா சத்யவதி.
"நோ.. நான் ஒரு முனிவன்"னு முதல்ல ஷாக் ரியாக்சன் குடுத்த வியாசன், அப்புறம் சரின்னு சம்மதிக்குறான் (அவனும் ஆண்தானே?)
"சரி சரி, நீ ரூம்ல போயி வெயிட் பண்ணு. நா வரிசையா ரெண்டு மருமகள்களையும் அனுப்புறேன்"னு சொன்ன சத்யவதி முதல்ல அம்பிகாவ அனுப்புறா. அவ போயிட்டு வந்து அடுத்ததா அம்பாலிகாவ அனுப்புறா. ரெண்டு பேரும் வெளில வந்தபிறகு, என்ன feedbackனு கேக்க வியாசனுக்காக வெயிட் பண்றா சத்யவதி.
**********
ஒரு வழியா வியர்க்க விறுவிறுக்க வெளில வந்தான் வியாசன். சத்யவதி feedback கேக்க, "அம்மா, ஒருத்தி உள்ள வந்தவுடனே கண்ண மூடிட்டா. கடைசி வரைக்கும் கண்ண தெறக்கல. அதனால "தவஒளி" அவ கண்ணுல படலங்குறதால, அவளுக்கு கண் தெரியாத மகன் பிறப்பான்"னு முதல் குண்டைத் தூக்கிப் போடுறான். (அப்ப வாயையும் தான மூடியிருப்பா? ஏன் ஊமையா பிறக்கக்கூடாது? டவுட்டுதான்)
"இன்னொருத்தி உடம்பு மொத்தத்தையும் ஆரம்பத்துல இருந்து கடைசி வரைக்கும் சேலைய இழுத்துப் போர்த்தியே இருந்தா. அதனால அவளுக்கு உடம்பு வெளுத்துப் போன மகன் பிறப்பான்" அப்பிடின்னு ரெண்டாவது குண்டைத் தூக்கிப் போடுறான் வியாசன்.
வியாசன் இப்பிடி சொன்னவுடனே சத்யவதி கவலைப்பட்டு "வியாசா, இரு. இன்னொரு வாட்டி டிரை பண்ணுவோம். நீ திரும்பவும் ரூம்ல போயி வெயிட் பண்ணு"ன்னு சொல்லி ஒரு வேலைக்காரிய கூப்பிட்டு அவங்க ரெண்டுபேரையும் திரும்ப உள்ளாற கூட்டிட்டுப் போகச் சொல்றா.
ரூம் பக்கத்துல போன அவங்க ரெண்டு பேரும் திரும்பவும் உள்ளாற போக பயந்துக்கிட்டு, வேலைக்காரியவே வியாசன்ட்ட அனுப்புறாங்க.
வந்திருக்குறது வேலைக்காரின்னு வியாசனுக்கு தெரியாது. அந்த "தவஒளி"க்கு அதெல்லாம் தெரியாது போல.
வேலைக்காரி நல்லா கோவாப்பரேட் பண்ணதால "தவஒளி" இருக்கே... அது திவ்வியமாப் பரவுது. பரவுன பிறகுதான் வந்தது மருமகள் இல்ல, வேலைக்காரின்னு வியாசனுக்குத் தெரியுது. (நல்லா தவம் பண்ண போ)
வெளில வந்தான் வியாசன். "யம்மா, ஆள விடு. நான் பண்ண தவ வலிமை எல்லாம் போச்சு. இனிமே நான் புதுசா தவம் பண்ணி ரீசார்ஜ் ஏத்திக்கணும். இதுமாதிரி வேலைக்கு இனிமே என்னைய கூப்பிடாத. நா வரேன்"னு சத்யவதி கிட்ட சொல்லிட்டு எஸ்கேப் ஆனான் வியாசன்.
***************
கொஞ்ச நாள் கழிச்சி அம்பிகாவுக்கு திருதராஷ்டிரனும், அம்பாலிகாவுக்கு பாண்டுவும், வேலைக்காரிக்கு விதுரனும் பிள்ளையாப் பிறக்குறாங்க.
திருதராஷ்டிரன், பாண்டு, விதுரன் மூணு பயலுகளும் அவங்கவங்க அப்பன்களுக்குப் பிறக்கல. இந்த பாயிண்ட் முக்கியம்.
(இந்த சாமியார்ப் பயலுகள்ல மெஜாரிட்டி ஏன் சபலக் கேசா இருக்கானுகன்னு இப்பதான் தெரியுது. இவனுகளுக்கு மகாபாரதம் ஒரு operating manual மாதிரி இருக்கே?)
மகாபாரதம்
முதல் பாகம் 10-12 - திருதராட்டிரன் பாண்டு திருமணம்
மூத்தவன் திருதராட்டிரனுக்கு காந்தார நாட்டு இளவரசி காந்தாரியை பொண்ணு கேப்போம்னு நினைச்சு பீஷ்மனை அனுப்புறா சத்யவதி. படையைக் கூட்டிட்டு காந்தார நாட்டுக்குப் போறான் பீஷ்மன். இதுக்கிடையில "அஸ்தினாபுரத்து பீஷ்மன் படையெடுத்து வரான்"னு நாலுபேரு கிளப்பிவிட, காந்தார மன்னன் சுபலன் இதென்னடா வம்பா போச்சுன்னு ஒரு தூதனை பீஷ்மன்ட்ட அனுப்புறான்.
"படையெடுத்தெல்லாம் வரலப்பா. திருதராட்டிரனுக்கு காந்தாரிய பொண்ணு கேட்டு வந்திருக்கேன்னு போய்ச் சொல்லு"ன்னு தூதன்ட்ட சொல்லி அனுப்புறான் பீஷ்மன்.
இந்த விசயம் தெரிஞ்சவுடனே காந்தார நாட்டு அரண்மனைல பூகம்பம் வெடிக்குது. காந்தாரியோட தம்பி தான் சகுனி. அக்கா மேல பாசம் அதிகம். திருதராட்டிரனுக்கு பொண்ணு கேட்டு பீஷ்மன் வரான்னு கேள்விப்பட்ட உடனே படு டென்சனான சகுனி நேரா அவன் அப்பன் சுபலன்ட்ட போயி சண்டை போடுறான். "யப்பா, போயும் போயும் கண்ணு தெரியாத திருதராட்டிரனுக்கா அக்கா காந்தாரிய குடுக்கப் போற?. நா ஒத்துக்க மாட்டேன்"னு சண்டை பிடிக்கிறான்.
"தம்பி, பிராக்டிகலா யோசிச்சுப் பாரு. இந்த பீஷ்மன் இருக்கானே, அவன் பண்ற காரியத்த பாரு. பொண்ணு கேக்க வர்றவன் தாம்பூலத் தட்டோட வராம, எதோ போருக்கு படையெடுத்து வர்றமாதிரி வந்திருக்கான். இதுக்கென்ன அர்த்தம்? பொண்ணு குடுக்கிறியா இல்ல தூக்கிட்டுப் போகவான்னு சொல்லாம சொல்றான். ஏற்கனவே காசி நாட்டுல இருந்து அம்பா, அம்பிகா, அம்பாலிகான்னு மூணு இளவரசிகளைத் தூக்கிட்டு வந்திருக்கான். இப்ப அவங்க பிள்ளைகளுக்கும் பொண்ணு கேட்டு வரான். எல்லாத்துக்கும் மேல தான் நெனைச்ச நேரத்துல சாகுற வரம் வாங்குனவன். இவனை பகைச்சிக்கிட்டா நாம நாட்டையே இழந்திருவோம். அதனால பேசாம காந்தாரிய குடுப்போம். திருதராட்டிரன் நாளைக்கி மன்னனானா நம்ம காந்தாரி தான அஸ்தினாபுரத்து அரசி? போக நம்மளவிட சொத்து பத்து நெறைய வச்சிருக்காய்ங்க"ன்னு சுபலன் மகன் சகுனிய சமாதானப்படுத்துறான்.
ஆனாலும் சகுனிக்கு டென்சன் அடங்கல. நேரா அக்கா காந்தாரிட்டயே போயி பேசுறான். "விடுறா தம்பி, அப்பா சொல்றது தான் சரி. அவர் சொல்றபடியே கேப்போம். நீ கவலைப்படாத"ன்னு சொல்றா காந்தாரி.
சுபலனும் உடனே போயி பீஷ்மனுக்கு வரவேற்பு குடுத்து, ஒருவழியா சம்பந்தம் பேசி முடிக்கிறாங்க. அஸ்தினாபுரம் அரண்மனையில திருதராட்டிரன் - காந்தாரி மேரேஜ் நடக்குது. எல்லாரும் வந்து வாழ்த்தினாலும் சகுனி மட்டும் நிம்மதியில்லாம திரியுறான்.
"அக்கா, உனக்கா இந்த நிலைமை? கண்ணு தெரியாதவனுக்கு வாழ்க்கப்பட்டு கஷ்டப்படணும்னு உனக்கென்ன தலையெழுத்தா?"ன்னு புலம்பிட்டே இருக்கான்.
"தம்பி, ஆனது ஆகிப்போச்சி. இனி திருதராட்டிரன் உன்ர மாமன். மனசுல வச்சிக்கோ. இப்ப கண்ணுல கருப்புத்துணி கட்டிக்கப் போறேன். இனி நாங்க ரெண்டு பேருமே பார்வை இல்லாதவங்க தான்"னு சொன்ன அக்கா காந்தாரி கண்ல கருப்புத் துணிய கட்டிக்கிட்டா. இதப்பாத்த சகுனி இன்னும் டென்சனாகி கோபத்தைப் பூராவும் பீஷ்மன் மேல சேர்த்து வைச்சிட்டு ஒரு முடிவெடுக்குறான்.
"அக்கா, இனி நான் காந்தார நாட்டுக்குப் போகவிரும்பல. உன்ன இப்பிடி விட்டுட்டு நான் போகமாட்டேன். உன்னோடயே அஸ்தினாபுரம் அரண்மனைல தங்கிக்கறேன்"னு பெர்மிசன் கேக்குறான் சகுனி. அக்கா காந்தாரி கணவன் திருதராட்டிரன்ட்ட கேக்க, அவனும் "அட, நம்ம மாப்பிள்ளைக்கி இல்லாத இடமா? இருந்துட்டுப் போகட்டும்"னு சொல்றான்.
**********
ஒருவழியா திருதராட்டிரன் கல்யாணம் முடிஞ்சது. அடுத்ததா இந்தப் பாண்டுவுக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும்னு யோசிச்ச சத்யவதி, குந்திதேவிய பத்தி கேள்விப்பட்டு, அவளையே பேசி பாண்டுவுக்கு கல்யாணம் பண்ணி வச்சிடலாம்னு முடிவெடுக்குறா.
சிற்றரசன் குந்திபோஜனுக்கு பெண் குழந்தை இல்லைன்னு மனக்கவலைல இருந்தான். அதனால அவனோட பிரெண்ட் ஒருத்தனோட பொண்ணு பிரீத்தியை தத்தெடுத்து வளர்க்குறான். இந்த பிரீத்திமா தான் குந்திதேவி.
********
ஒரு பிளாஷ்பேக். ஒரு நாள் குந்திபோஜனை சந்திச்ச துர்வாச முனிவர், "உன் ஊர்ல ஒரு யாகம் பண்ணப் போறேன். உதவிக்கு உன் பொண்ணை அனுப்பிவை"ன்னு கேக்குறான். துர்வாச முனிவன் ஒரு கோவக்கார முனிவன்னு கேள்விப்பட்டிருக்கான். மாட்டேன்னா சொல்லமுடியும்? சரின்னு குந்திய ஹெல்ப்க்கு அனுப்பி வைக்கிறான் குந்திபோஜன்.
யாகத்தை முடிச்ச துர்வாசன் குந்திய கூப்பிட்டு "நல்லா ஹெல்ப் பண்ணம்மா, நா உனக்கொரு மந்திரம் சொல்லித் தரேன். எந்த சாமிய நினைச்சி அந்த மந்திரத்த சொல்றியோ, அந்த சாமி வந்து உனக்குப் பிள்ளை வரம் குடுக்கும். நா வரேன்"னு சொல்லிட்டுக் கிளம்பிட்டான். (பொண்ணுன்னா உடனே குழந்தை வரம் தானா? ஒரே குஷ்டமப்பா..)
ரஜினி பாபா படத்துல மந்திரம் உச்சரிக்கிற மாதிரி, குந்தி ஒருநாள் சூரியனைப் பாத்துட்டே அந்த மந்திரத்த சொல்லி டெஸ்ட் பண்ணிருக்கா. உடனே சூரியன் நேரா வந்துட்டான். வந்தவன் சும்மா வரல. "குந்தி, இந்தா உனக்கொரு குழந்தை. இவம்பேரு கர்ணன். மார்புல கவசமும், காதுல குண்டலமும் இருக்கான்னு செக் பண்ணிக்கோ. இது ரெண்டும் இருக்கும்வரை இவனை யாராலயும் ஜெயிக்கமுடியாது. அம்புட்டுதேங்"ன்னு சொல்லி குழந்தையக் குடுத்துட்டுப் போயிட்டான் சூரியன். (இப்ப எதுக்கு கவசமும் குண்டலமும்? குழந்தை வளரும்போது கவசமும் சேர்ந்து வளரப் போகுதா?)
குந்திக்கு ஒண்ணும் புரியல. விளையாட்டுக்கு மந்திரத்தை சொல்லிப் பாத்தது குத்தமாடா? உடனே வந்து குழந்தையக் குடுத்துட்டுப் போயிட்டான். எப்படான்னு காத்துக்கிட்டு இருப்பாய்ங்களோன்னு புலம்பித் தவிக்கிறா.
நேரா அவ பிரெண்ட் தத்ரி கிட்ட குழந்தைய தூக்கிட்டுப் போறா. "கல்யாணம் ஆகாதவ குழந்தையோட இருந்தா இந்த உலகம் என்ன பேசும்? அதனால பேசாம இந்தக் குழந்தைய கூடைல வச்சி ஆத்துல விட்ருவோம். சூரிய பகவான் குழந்தைய பாத்துக்குவார்"னு ஐடியா குடுக்குறா தத்ரி.
வேற வழி இல்ல. உடனே கூடைல வச்சி கங்கை ஆத்துல விட்டுட்டு வந்துடுறாங்க. அதேநேரம் ஆத்துக்கு அக்கறையில குளிச்சிட்டிருந்த திருதராட்டிரனோட தேரோட்டி அதிரதன் "சூரிய பகவானே, கல்யாணம் பண்ணி இத்தனை நாள் ஆகியும் எனக்குக் குழந்தையே இல்ல. எனக்கொரு குழந்தை குடு"ன்னு வேண்டிட்டு கண்ணைத் தொறந்த நேரம் கர்ணன் கூடையில வாரான். எப்பிடி ரெண்டும் மேட்ச் ஆகுதா? அதிரதன் கர்ணனைத் தூக்கிட்டுப்போயி வளர்க்குறான். இதுதான் பிளாஷ்பேக்கு.
*********
இப்ப குந்திய பாண்டுவுக்கு பொண்ணு கேட்டு பீஷ்மன் வரான். பீஷ்மன் வந்த விசயத்த குந்திகிட்ட சொல்லி சம்மதம் கேக்குறான் அவங்கப்பன் குந்திபோஜன். "உங்க விருப்பம்ப்பா"ன்னு குந்தி சொல்லித் தொலைச்சதால திருமண ஏற்பாடு நடக்குது.
குந்திபோஜ நாட்டு இளவரசி குந்தி, மாத்ர நாட்டு இளவரசி மாத்ரி ரெண்டுபேரையும் ஒரே ஸ்டேஜ்ல மேரேஜ் பண்றான் பாண்டு.
************
பின்குறிப்பு:
- கங்கை ஆத்துக்குப் பிறந்த பீஷ்மன்
- பராசரனோட "தவஒளி"க்குப் பிறந்த வியாசன்
- வியாசனோட "தவஒளி"க்குப் பிறந்த திருதராட்டிரன் பிரதர்ஸ்
- தத்தெடுக்கப்பட்ட குந்தி
- சூரியன் குடுத்த குழந்தை கர்ணன் இப்பிடித்தான் மகாபாரதத்துல இருக்கு.
மூணு பொண்ணுங்களுக்குப் பிள்ளைவரம் குடுத்த வியாசன் தான் இந்த அக்கப்போரை எல்லாம் கதையா எழுதித் தொலைச்சிருக்கான். அதையும் அவன் சொல்லச்சொல்ல எழுதுனது விநாயகராம். இது சாம்பிள் தான். இன்னும் இருக்கு நிறைய்ய...
மகாபாரதம்
முதல் பாகம் 13-15 - கிந்தம முனிவன் சாபம்
விசித்ரவீரியன் போய்ச் சேர்ந்ததுல இருந்து அஸ்தினாபுரத்துக்கு மன்னன் யாரும் இல்ல. வழக்கம்போல பீஷ்மன் தான் மேனேஜ்மென்ட்.
பேரப்பிள்ளைங்க வளர்ந்து ஆளாகி கல்யாணமும் பண்ணிட்டதால அவங்கள பதவி ஏற்கச் சொல்லலாமான்னு சத்யவதி பீஷ்மன்ட்ட கேக்குறா. பீஷ்மனும் சரின்னு சொல்லிட்டு பஞ்சாயத்த கூட்ட ஏற்பாடு பண்றான்.
மறுநாள் பஞ்சாயத்து கூடுது. மூணு பயலுகளும் ஒரே நாள்ல பிறந்தாலும், முந்திப் பிறந்தது திருதராட்டிரன் தான். அதனால அவனுக்கே முடி சூட்டுவோம்னு பஞ்சாயத்த கெளப்புறான் பீஷ்மன்.
அதக்கேட்டு திருதராட்டிரனுக்கு ஏக குஜால். சகுனிக்கு அதவிட. ஏன்னா அவன் அக்கா மகாராணி ஆகப்போறாளே? பாண்டுவும் கை தட்டுறான். நம்மாளுங்க தான் உடனே சாய்ஞ்சுருவாங்களே. பாண்டுவ பாத்து எல்லாரும் கை தட்டுறாங்க.
அப்ப விதுரன் எந்திரிச்சு நின்னு பீஷ்மன்ட்ட "பெரியப்பு, அண்ணன் திருதராட்டிரன் மேல எனக்கு உள்ள பாசம் வேற. ஆனா அதுக்காக மனசுல பட்டத சொல்லாம இருக்கமுடியுமா? நீரு எனக்கு சொல்லிக் கொடுத்த "ராஜ நீதி" என்ன சொல்லுதுன்னா, உடல் ஊனமுற்றவங்களுக்கு நாடாளுற தகுதி இல்லன்னு சொல்லுது. ஆனா இங்க நீரு கண்ணு தெரியாத அண்ணனுக்கு பட்டம் சூட்டணும்னு சொல்றீரே. இது ஞாயமா? சாந்தனு தாத்தாவோட அண்ணன் தேவாபி தாத்தாவுக்கு தோல் நோய் இருந்ததால அவரு மன்னனாக முடியாமப் போனது உங்களுக்குத் தெரியாதா?" அப்பிடின்னு கேக்குறான்.
இதக்கேட்ட சகுனிக்கும், திருதராட்டிரனுக்கும் விதுரன் மேல செம காண்டு. "அடே விதுரா, வேலைக்காரி மவனே, என் பொழப்ப கெடுக்குறதுக்காகவே வந்தியா"ன்னு சவுண்டு விடுறான் திருதராட்டிரன்.
"இல்லண்ணே, ஞாயத்த சொன்னேன். பாண்டு தான் மன்னனாகணும். அதுக்கு மேல பெரியவங்க விருப்பம் என்னவோ அதுபடி நடக்கட்டும்"னு விதுரன் சொன்னவுடனே பீஷ்மனுக்கும் அவன் சொன்னது பிடிச்சிப்போச்சி.
"விதுரன் சின்னப்பயலா இருந்தாலும் சரியாப் பேசுறான். பார்வை இல்லாத திருதராட்டிரனுக்குப் பதிலா பாண்டு மன்னனாகட்டும். என்னப்பா நாஞ்சொல்றது?"ன்னு கூட்டத்தப் பாத்துக்கேக்க, கூட்டத்துக்கு எப்போ தனிக்கருத்து இருந்துச்சி? வழக்கம்போல ஆமான்னு மண்டைய ஆட்டுறானுங்க.
டென்சனாகிப் போன சகுனியும், திருதராட்டிரனும் எந்திரிச்சி வெளிநடப்பு பண்ண, பாண்டுவுக்கு குருட்சேத்திர மன்னனா முடிசூட்டுறான் பீஷ்மன்.
விதுரம் பய கடைசி நேரத்துல காரியத்த கெடுத்துட்டானேன்னு சகுனியும், திருதராட்டிரனும் புலம்பிட்டே வாரானுங்க.
"மாமு, சிம்மாசனம் உங்களுக்குத் தான். கொஞ்சம் பொறுமையா இருங்க"ன்னு திருதராட்டிரனுக்கு ஆறுதல் சொன்ன சகுனி ஒரு பிளான் பண்றான்.
********
இந்தப் பாண்டுவ எதாச்சும் போர்ல இறக்கிவிட்டு, எதிரி கையால மண்டையப் போட்டான்னா அடுத்து நம்ம மாமு திருதராட்டிரன் மன்னனாகுறத யாராலயும் தடுக்கமுடியாது. திரும்பவும் அந்த விதுரம்பய வந்து எதாச்சும் சாஸ்திரம், சம்பிரதாயம்னு பீலா விட்டான்னா அவனுக்கும் ஒரு பாயாசத்த போட்டுற வேண்டியது தான்னு நினைச்சிட்டே நேரா பாண்டுவ போய்ப் பாக்குறான்.
"சின்னமாமு, நீரு மன்னரானதெல்லாம் சரிதான். ஆனா ஏற்கனவே பீஷ்மன் குடுத்த நாட்டை ஆள்றதெல்லாம் ஒரு பெருமையா? நீரு அண்டைநாட்டு இளிச்சவாயன்கள் மேல படையெடுத்துப் போயி அவனுங்க நாட்டையும் நம்ம குருட்சேத்திர நாட்டோட சேர்த்தாத்தான அது உமக்குப் பெருமை?"ன்னு மணியாட்டிட்டு வந்துட்டான்.
அதுவும் சரிதான்னு உடனே படைய ரெடிபண்ணி அக்கம்பக்க நாடுகளை எல்லாம் சண்டை போட்டு தோக்கடிச்சி குருட்சேத்திர நாட்டு எல்லைய விரிவாக்குறான் பாண்டு.
பாண்டு புகழ் பரவுது. இந்தப் பாண்டு சண்டையில சாவான்னு பாத்தா, கடேசில உலகப்புகழ் விஞ்ஞானியாகிட்டானே? இப்ப என்ன பண்றதுன்னு யோசிக்கிறான் சகுனி.
**********
அண்ணன் திருதராட்டிரனை மன்னனாக விடாம தான் மன்னனானதால, அண்ணன் தன்மேல இன்னும் காண்டுல இருக்குறது பாண்டுவுக்கு ரொம்ப வருத்தமாவே இருக்கு. மனசே சரியில்ல, கொஞ்ச நாள் காட்டுல போயி வேட்டையாடிட்டு வருவோம்னு கிளம்புறான் பாண்டு.
சிங்கம் புலிய வேட்டையாட அவன் என்ன கேணையனா? ஜோடியா மேட்டர் பண்ணிட்டிருந்த மான்கள் மேல அம்படிக்கிறான். மான் அம்படி பட்டு விழும்ன்னு பாத்தா, ஒரு முனிவன் கீழ விழுறான்.
"அடே.. நான் முனிவன்டா. எம்பேரு கிந்தமன். எம்பொண்டாட்டி ஆசைப்பட்டான்னு மானா மாறி ரெண்டு பேரும் ஜல்சா பண்ணிட்டிருந்தோம். அம்படிச்சிட்டியே"ன்னு முனிவன் சொல்றான்.
"ஏய்யா, முற்றும் துறந்த முனிவனுக்கு எதுக்கு பொண்டாட்டி? அதும்போக பொண்டாட்டி ஆசப்பட்டா பன்னு வாங்கிக்குடு, இல்ல பபுள்கம் வாங்கிக்குடு. அத விட்டுட்டு நீ மானா மாறுனது எனக்கெப்பிடிய்யா தெரியும். மன்னிச்சுக்கய்யா, தெரியாம அடிச்சிட்டேன்"னு பாண்டு சொல்ல, முனிவன் எதையும் கேக்கத் தயாரில்ல.
"உன்னை மன்னிக்கமாட்டேன். நீ எப்ப உம் பொண்டாட்டிகள் கூட ஜல்சா பண்றியோ அப்ப நீ நெஞ்சு வெடிச்சு சாவடா. இது என்ர சாபம்டா"ன்னு சொன்ன கிந்தம முனிவன் ஸ்பாட்லயே அவுட்டு.
ஒரு முனிவன் இப்பிடி எல்லாமா சாபம் குடுப்பான். ஏன்யா, இது ஒரு பெரிய மனுசன் செய்யிற காரியமா. ஒண்ணுக்கு ரெண்டா கட்டி வச்சிருக்கேன். இனி நான் எப்பிடிடா...ன்னு வருத்தமா யோசிச்சிட்டே திரும்புறான் பாண்டு.
பாண்டு படுடென்சனா அரண்மனைக்குத் திரும்புனா அங்க எல்லாரும் ரொம்ப சந்தோசமா திரியுறானுங்க. காரணம் திருதராட்டிரனோட மனைவி காந்தாரி கர்ப்பம்னு வைத்தியர் சொல்லிட்டாராம்.
நானே சாபம் வாங்கிட்டு வந்திருக்கேன். இவிங்களுக்கு சந்தோசத்த பாருன்னு யோசிச்சிட்டே நேரா பாட்டி சத்யவதிய பாத்து தன்னோட சாபக்கதைய சொல்லி அழுறான் பாண்டு.
அதுக்குள்ள விசயம் வெளில தெரிஞ்சு சகுனியும், திருதராட்டிரனும் சொல்லி சொல்லி சிரிக்கிறானுங்க. "மாமு, எதோ கவலைப்பட்டீரே. இப்ப நிலைமைய பாத்தீரா? இங்க அக்கா கர்ப்பமாகி நம்ம வம்சம் தழைக்கப்போற நேரத்துல, அந்தப்பய பாண்டு சாபம் வாங்கிட்டு வந்திருக்கான். இனி அவனுக்கு வாரிசில்லை. குருட்சேத்திர நாடே நமக்குதான். கடவுள் இருக்கான் மாமு"ன்னு ஆறுதல் சொல்றான் சகுனி.
ராத்திரி பூராவும் நம்மகூட தான படுத்திருந்தானுங்க? அதுக்குள்ள விசயம் எப்பிடிடா வெளில போச்சுன்னு யோசிச்ச பாண்டு வெறுத்துப்போய் ஒரு முடிவுக்கு வந்து நேரா பாட்டி சத்யவதிய பாக்குறான்.
"பாட்டி, சாபத்தோட நான் அரியாசனத்துல இருக்க விரும்பல. நா உடனே என் ரெண்டு பொண்டாட்டிகளையும் கூட்டிட்டு காட்டுக்குப் போயி தவம்பண்ணி என் சாபத்துக்கு பரிகாரம் தேடிட்டு வர்றேன். அதுவரைக்கும் அண்ணன் திருதராட்டிரன் நாடாளட்டும்"னு சொல்லிட்டு, பதவிய ராஜினாமா பண்ணிட்டு, மனைவிகளைக் கூட்டிட்டு காட்டுக்குப் போயி தவம்பண்ண ஆரம்பிக்குறான் பாண்டு.
"அப்பாடா, போயிட்டான்டா"ன்னு நிம்மதிப் பெருமூச்சு விடுறான் சகுனி. திருதராட்டிரன் குருட்சேத்திர நாட்டோட மன்னனாகுறான்.
மகாபாரதம்
முதல் பாகம் 16-17 - பாண்டுவின் மரணம்
ஒரு முன்குறிப்பு: சகுனியை சதிகாரன், சூழ்ச்சி செய்பவன், துரோகி, வஞ்சகன் என்று பரவலாகக் கூறப்படுகிறது. துரோகத்தை "சகுனிவேலை" என்று இன்னும் சொல்வோர் இருக்கிறார்கள்.
சகுனி மட்டும்தான் சூழ்ச்சிக்காரனா? பீஷ்மன் துவங்கி கிருஷ்ணன் வரை அத்தனை பேரின் மெகா சூழ்ச்சிகளே மகாபாரதம் என்னும் கதை, காவியம், புராணம், இதிகாசம் etc.
இதில் ஏன் சகுனியை மட்டும் பிரித்துக் காட்டவேண்டும்? கிருஷ்ணனை ஹீரோவாகக் காட்ட, வீணாக்கப்பட்ட கதாபாத்திரங்களே சகுனியும், விதுரனும். வேலைக்காரியின் மகன் என்பதற்காகவே விதுரன் கதாபாத்திரம் இருட்டடிப்பு செய்யப்பட்டாலும், அந்தக் குறையைப் போக்குவது போல் உருவாக்கப்பட்டு ஈயம் பூசப்பட்டதே விதுரநீதி etc.
இதுவரை பார்த்த கதையில் அம்பாவுக்கு பீஷ்மனும், பரசுராமனும் சேர்ந்து திட்டமிட்டே சூழ்ச்சி செய்து அநீதி இழைத்திருக்கிறார்கள். சும்மா இருந்த அம்பாவை முனிவர்கள் திட்டமிட்டே பரசுராமனிடம் அனுப்ப, பரசுராமன் பீஷ்மனை சண்டைக்கு அழைக்க இங்கிருந்தே சதி துவங்குகிறது. பீஷ்மன் தோற்றால் அம்பாவைத் திருமணம் செய்யவேண்டும். இதுதான் நிபந்தனை.
சண்டையின் இறுதியில், பிரபாச அஸ்திரத்தை எடுக்கிறான் பீஷ்மன். உடனே தன்னிடம் அந்த ஆயுதம் இல்லாததால், பீஷ்மனே வென்றதாக அறிவிக்கிறான் பரசுராமன். ஏற்கனவே முடிவை எடுத்து பின் நேரம்பார்த்து அமுல்படுத்தி, அம்பாவுக்கு அநீதி இழைத்திருக்கிறார்கள். இது சூழ்ச்சியில்லாமல் வேறென்ன? இது துவக்கம். இன்னும் நிறைய இருக்கிறது. வலிந்து உருவாக்கப்படும் ஹீரோவான கிருஷ்ணன், ஒரு கைதேர்ந்த வில்லன் என்பதைத் தொடர்ந்து படித்து அறியலாம்.
கதைய கன்டினியூ பண்ணுவோம்.
************
மானாக மாறி விளையாண்டுட்டிருந்த கிந்தம முனிவனை, மான்னு நெனச்சு அம்படிச்ச பாண்டுவ "நீ ஜல்சா பண்றப்ப நெஞ்சு வெடிச்சு சாவ"ன்னு சாபம் விட்டான் கிந்தம முனி. வெறுத்துப்போன பாண்டு, பதவிய ராஜினாமா பண்ணிட்டு திருதராட்டிரனை மன்னனாக்கிட்டு, ரெண்டு பொண்டாட்டிகளையும் கூட்டிட்டு காட்டுல தவம்பண்ண வாறான்.
காட்டுல ஆல்ரெடி தவத்துல இருந்த ஒவ்வொரு முனிவனையும் பாத்து பேசிட்டு வர்றப்போ ஒரு முனிவன் பாண்டு கிட்ட "எலே... ஒனக்கா இந்த நிலைமை? ஒங்க அண்ணி காந்தாரிக்கு நூறு குழந்தைகள் குடுப்பேன்னு சிவபெருமான் வரம் குடுத்திருக்கான். நீ என்னடான்னா சாபத்த வாங்கிட்டு இங்க வந்து நிக்க... சரி சரி கவலைப்படாம போ"ன்னு சொன்னவுடனே பாண்டுவோட கவலை இன்னும் அதிகமாகுது.
"பாத்தியா குந்தி, அங்க அண்ணிக்கு நூறு குழந்தைகளாம். நமக்கு ஒண்ணு கூட கிடையாதாம். கடவுள் ஏன் நம்மள சோதிக்கிறான்"னு புலம்புறப்போ இந்தமாதிரி சிச்சுவேஷனுக்காகவே காத்திட்டிருந்த குந்தி நேரம் பாத்து மேட்டரை ஓபன் பண்ணுறா. "கவலைப்படாதீங்க மச்சான். எனக்கு துர்வாச முனிவன் ஒரு மந்திரம் சொல்லிக் குடுத்திருக்கான். எந்த சாமிய நெனச்சி அந்த மந்திரத்த சொல்றேனோ, அந்த சாமி வந்து குழந்தை குடுக்கும்"னு சொன்ன குந்தி, ஏற்கனவே சூரியன் வந்து கர்ணனைக் குடுத்த விசயத்த மட்டும் சொல்லல.
மத்த நேரமா இருந்தா "ஏன்? என்னால முடியாதா?"ன்னு டென்சன் ஆகியிருப்பான். ஆனா கிந்தம முனி மெயின் மேட்டர்ல கை வச்சிட்டதால குந்தி சொன்ன இந்த விசயத்துக்கே ரொம்ப சந்தோசமாயிட்டான் பாண்டு.
"அப்போ உடனே டெஸ்ட் பண்ணிப் பாத்துருவோம்"னு சொன்ன பாண்டு, முனிவர்கள்ட்ட போயி இந்த நேரத்துல குழந்தை பெத்துக்கிட்டா நல்லதா, கெட்டதா? நாள் நட்சத்திரம் எப்பிடியிருக்குன்னு கேக்குறான்.
"எலே.. உனக்கு என்ன பைத்தியம் பிடிச்சுப் போச்சா? அதான் அந்தக் கிந்தம முனிவன் உன் கேபிளை கட் பண்ணிட்டானே? இப்ப எதுக்குலே குழந்தை பிறக்க நேரம் கேக்குற?"ன்னு முனிவர்ஸ் எல்லாம் பாண்டு கிட்ட கேக்குறாங்க. பாண்டுவுக்கு அவமானம் பிடுங்கித் திங்குது. எல்லாம் என் நேரம்டானு நினைச்சிகிட்டு, தயங்கித் தயங்கி துர்வாசன் குந்திக்குச் சொல்லித் தந்த மந்திரத்தைப் பத்திச் சொல்றான்.
விடுவாய்ங்களா? வானத்த பாக்குறான், பூமிய பாக்குறான், லெப்ட்ல பாக்குறான், ரைட்ல பாக்குறான். எல்லாத்தையும் பாத்துட்டு "பாண்டு, நேரம் அமோகமா இருக்கு. இந்த நேரத்துல குழந்தை பெத்துக்கிட்டா கண்டிப்பா இந்தியா வல்லரசாயிடும்"னு சொல்றாங்க ஆல் முனிவர்ஸ்.
சரின்னு குந்தி மந்திரம் சொல்ல ரெடியாகுறா. ஆனா எந்த சாமிய கூப்பிடுறது? அப்ப பாண்டு "தர்மம் தழைக்க எமதர்மனைக் கூப்பிடு"ன்னு ஐடியா குடுக்குறான். குந்தியும் எமதர்மனை நினைச்சி மந்திரம் சொல்றா.
கொஞ்ச நேரத்துல சாம்பிராணிப் புகை நடுவுல, எருமை மாட்டு மேல எமதர்மன் காட்சியளிக்குறான். "குந்தி... இந்தா இந்தக் குழந்தைய வச்சிக்க. தர்மத்தின் வடிவான என் அம்சமானதால இவனுக்கு "தர்மன்"னு பேரு வையி..."ன்னு சொல்லிட்டு கெளம்பிட்டான் எமதர்மன்.
அடடா.. ஒரு கரு உருவாகி, பத்து மாசம் வயித்துல சுமந்து, டாக்டர்ட்ட போயி ஸ்கேன் பார்த்து, சத்துள்ள ஆகாரமாத் தின்னு ஒரு பொண்ணு தன் உயிரைப் பணயம் வச்சி ஒரு குழந்தையப் பெத்தெடுக்குறா. இவிங்க என்னடான்னா "தவஒளி"ங்குறான், மந்திரம்ங்குறான். இட்லி சுடுற மாதிரி ஒரு குழந்தைய கொண்டுவந்து குடுக்குறான்.
சரி, அடுத்து எந்த சாமிய கூப்புடலாம்? சாமிக்கா பஞ்சம்? மனுசப்பயலுக மக்கள் தொகைய விட, சாமிங்க மக்கள்தொகை ஜாஸ்தி ஆச்சே? வாயு பகவானைக் கூப்பிடுவோம்னு நினைச்சி குந்தி மந்திரம் சொல்ல, வாயு பகவான் சாம்பிராணிப் புகைக்கு நடுவுல வந்து "இந்தா, இவந்தான் பீமன்"னு ஒரு குழந்தைய குடுக்குறான்.
அடுத்து இந்திரனை நினைச்சி மந்திரம் சொல்ல, இந்திரன் "இந்தா, இவந்தான் அர்ஜுனன்"னு ஒரு குழந்தைய குடுக்குறான்.
இதைப் பாத்துட்டே இருந்த பாண்டுவோட இன்னொரு மனைவி மாத்ரி "ஏம்மா குந்தி, இந்த கேம் நல்லாருக்கே. நீ மட்டும் விளையாண்டா போதுமா? நா ஒருத்தி இருக்குறது தெரியலையா"ன்னு குந்தி கிட்ட கேக்குறா.
"காசா பணமா...? துர்வாசனோட மந்திரத்தை சொல்லித் தர்றேன். எத்தனை குழந்தை வேணுமோ அத்தனையும் வாங்கிக்கோ."ன்னு சொன்ன குந்தி மந்திரத்தை மாத்ரிக்கு சொல்லித் தந்துட்டு "அஸ்வினி தேவர்கள்னு ஒரு குரூப் இருக்காய்ங்க, அவிங்கள நெனச்சு மந்திரம் சொல்லு"னு சொல்றா.
சரின்னு அதேமாதிரி மாத்ரி மந்திரம் சொல்ல, அஸ்வினி தேவர் & கோ உடனே 1+1 offerல ரெண்டு குழந்தைகளோட வராங்க. "இந்தாம்மா மாத்ரி, இவம்பேரு நகுலன். இவம் பெரிய டாக்டரா வருவான். அவம்பேரு சகாதேவன். அவன் வாஸ்து சாஸ்திரத்துலயும், ஜோசியத்துலயும் ஜோதிட சிகாமணி மெய்.மெய்யப்பனா வருவான். சுபமஸ்து"ன்னு சொல்லிட்டுக் கிளம்புறாங்க.
வாரிசே இல்லைன்னு நினைச்சிட்டிருந்த நேரத்துல அஞ்சு குழந்தைகள் கிடைச்சதுல சந்தோசப்படுறான் பாண்டு. ஆனா கர்ணன் பிறந்ததை மறைச்சிட்டோமேன்னு சங்கடப்படுறா குந்தி.
பாண்டுவோட அஞ்சு குழந்தைகள்னு சுருக்கமா "பஞ்ச பாண்டவர்கள்" அப்பிடின்னு முனிவர்ஸ் சொல்ல ஆரம்பிக்கிறாங்க. குழந்தைகளோட குதூகலமா விளையாட ஆரம்பிச்ச பாண்டு, கிந்தம முனிவனோட சாபத்தையே மறந்துட்டான்.
*********
இங்க அஸ்தினாபுரம் அரண்மனைல நிலைமை தலைகீழா இருக்கு. பாண்டுவுக்கு அஞ்சு குழந்தைகள் கிடைச்ச விசயம் தெரிஞ்சி டென்சனாகுறான் திருதராட்டிரன். டென்சனுக்குக் காரணம் காந்தாரி. 13(?) மாச கர்ப்பமா இருக்காளே ஒழிய குழந்தை பிறக்குற மாதிரி தெரியல.
நேரா காந்தாரிய போயி பாக்குறான் திருது. "பாத்தியா காந்தாரி, பாண்டுவுக்கு குழந்தையே பிறக்காதுன்னு நினைச்சேன். ஆனா ஒவ்வொரு சாமியும் வரிசையா வந்து குழந்தைய குடுத்திருக்கானுங்க. நீ என்னடான்னா 13 மாசமா கர்ப்பமா இருக்க. குழந்தை பிறக்குற மாதிரி தெரியல. உனக்கு இன்னும் ரெண்டு நாள் டைம். அதுக்குள்ள குழந்தை பிறக்காட்டி நான் வேற யாரையாவது கல்யாணம் பண்ணிக்குவேன் பாத்துக்க. யுவர் கவுன்டவுன் ஸ்டார்ட்ஸ் நவ்"னு சொல்லிட்டு வந்துட்டான்.
ரெண்டுநாள் கழிச்சு திரும்பவும் போயி "டைம் முடிஞ்சது. நீ உங்கப்பன் வீட்டுக்குப் போக ரெடி ஆயிக்கோ"ன்னு சொல்றான்.
காந்தாரிக்கு வாழ்க்கையே வெறுத்துப் போச்சி. ரூம்ல இருந்து நேரா வெளில வந்தவ உலக்கைய எடுத்து வயித்துலயே குத்துகுத்துன்னு குத்திட்டு மயங்கி விழுறா. சத்தங்கேட்டு வந்த பணிப்பெண்கள் எல்லாரும் காந்தாரிய தூக்கிட்டுப் போயி பிரசவம் பாக்க ஆரம்பிக்கிறாங்க.
பெரியாஸ்பத்திரில அதிசய ஆப்பரேசன்னு சொல்லி வயித்துல இருந்து அஞ்சு கிலோ கட்டி எடுப்பாங்களே. அப்பிடி ஒரு கட்டிய எடுக்குறாங்க காந்தாரி வயித்துல இருந்து.
சத்யவதிக்கு என்ன பண்றதுன்னு தெரில. பேசாம மகன் வியாசன்ட்ட கேப்போம்ன்னு சொல்லி அவனைக் கூப்பிடுறா. "போச்சுடா, "தவஒளி"க்கு மீண்டும் வேலையா?"ன்னு பயந்துட்டே வறான் வியாசன். வந்தவன் சூழ்நிலைய பாத்துட்டு "அம்மா, சிவன் வரம் தந்த மாதிரி காந்தாரிக்கு நூறு என்ன நூத்தியொரு குழந்தை பிறக்கும். அந்தக் கட்டிய 101 பீஸா கட் பண்ணி 101 குடத்துல போட்டு வைங்க. டெய்லி ஒரு குழந்தை பிறக்கும்"ன்னு சொல்றான் வியாசன். (நினைச்சுப் பாத்தாலே குமட்டுதே)
மறுநாள் முதல் குடத்துல இருந்து துரியோதனன் பிறக்குறான். இப்பிடி தினமும் ஒரு குழந்தையா வரிசையா பிறக்குதுங்க. 100வது ரிலீசோட பேரு சித்ரகன். 101வது குடத்துல இருந்து துச்சலைன்னு ஒரு பொண்ணு பிறக்குறா. (சாமி கூட ஆண் குழந்தைய தான் வரமாக் குடுக்குது. பேருக்கு ஒரு பொண்ணு இந்த துச்சலை.)
இன்-பெட்வீன்-கேப்ல திருதராட்டிரன் ஒரு வேலைக்காரிய கரெக்ட் பண்ணியிருந்ததால அவளுக்கும் ஒரு பையன் பிறக்குறான். மொத்தம் 100+1+1 குழந்தைகள். கடைசி 1+1 அதாவது துச்சலைங்குற பொண்ணு கவுரவர் லிஸ்ட்ல வராது. வேலைக்காரிக்குப் பிறந்ததால அந்தக் கடைசிப் பயலும் லிஸ்ட்ல வரமாட்டான்.
கங்கை ஆத்துக்குப் பிறந்த பீஷ்மன், பராசரனோட "தவஒளி"க்குப் பிறந்த வியாசன், வியாசனோட "தவஒளி"க்குப் பிறந்த திருதராட்டிரன் பிரதர்ஸ், - தத்தெடுக்கப்பட்ட குந்தி, சூரியன் குடுத்த குழந்தை கர்ணன்.
அங்க பஞ்ச பாண்டவர் யாரும் பாண்டுவுக்குப் பிறக்கலை. இங்க கவுரவர் யாரும் திருதராட்டிரனுக்குப் பிறக்கலை. இந்த பாயிண்ட் முக்கியம். பிறப்பறியாதவன்னு கர்ணனைச் சொல்லுவாங்க. இப்ப சொல்லுங்க பிறப்பறியாதவங்க யார் யாருன்னு?
*************
இந்தக் கிந்தம முனி சாபத்தால ஜல்சா ஏக்கத்துல இருந்தான் பாண்டு. என்னதான் ரெண்டு பொண்டாட்டி இருந்தாலும், சும்மாவே எத்தனை நாள் வேடிக்கை பாக்குறது? ஒருகட்டத்துல என்ன ஆனாலும் சரின்னு துணிஞ்சிட்டான்.
அதுக்கேத்த மாதிரி ஒருநாள் மாத்ரி ஆத்துல குளிச்சிட்டிருக்கா. சும்மா அந்தப்பக்கம் போன பாண்டு மாத்ரி குளிக்கிறத பாத்துட்டான். மெய் மறந்துட்டான். மெல்லப்போயி மேட்டருக்குக் கூப்புடுறான். அவளுக்கும் சாபமெல்லாம் ஞாபகமில்ல. கரெக்டா மேட்டர் ஸ்டார்ட் ஆகுற நேரத்துல கிந்தம முனி சாபம் வெப்பன் மாதிரி வந்து தாக்க, ஸ்பாட் அவுட் ஆகுறான் பாண்டு.
குந்தி ரொம்ப அப்செட் ஆகி மாத்ரிய திட்டுறா. மாத்ரி கோபத்துல பாண்டுவ எரிக்கும்போது சிதையில விழுந்து எரிஞ்சி சாகுறா.
"கண்ண மூடித் திறக்குறதுக்குள்ள என்னென்னவோ நடந்துருச்சு.
ஆனது ஆகிப்போச்சு. இனி இந்தக்காட்டுல என்ன வேலை? பேசாம அரண்மனைக்கு வாங்க. நாங்களே கூட்டிட்டுப் போறோம்"னு முனிவர்ஸ் எல்லாரும் அஞ்சு பசங்களையும், குந்தியையும் கூட்டிட்டு வந்து சத்யவதி கிட்ட ஒப்படைக்குறாங்க.
மகாபாரதம்
முதல் பாகம் 18-19 - பாண்டவர் கௌரவர் குருகுலம்
பாண்டுவும், மாத்ரியும் இறந்தபிறகு முனிவர்ஸ் எல்லாரும் பாண்டவர் அஞ்சு குழந்தைகளையும், குந்தியையும் அஸ்தினாபுரம் அரண்மனைல விட்டுட்டுப் போறாங்க.
அரண்மனை முழுவதும் கௌரவர் 102 பேர், பாண்டவர் 5 பேர்னு விளையாட்டு களைகட்டுது.
அரண்மனைக்கு ஒருநாள் திடீர்ன்னு சம்மன் இல்லாம ஆஜர் ஆகுறான் வியாசன். இவனோட "தவஒளி"க்கு வேலையே இல்லியே, இப்ப எதுக்கு வந்தான்னு யோசிக்கும்போது, வியாசன் கௌரவர் பாண்டவர் விளையாட்டைப் பாத்துட்டே நேரா சத்யவதி கிட்ட போயி "மம்மி, இந்த உருப்படாத பயலுகளால நாடு சிக்கி சீரழியப் போகுது. ஒருத்தனுக்கு ஒருத்தன் வெட்டிக்கிட்டு சாகப் போறானுங்க. வயசான காலத்துல நீ அதையெல்லாம் பாக்கவேணாம். காட்டுக்குப் போயி தவம்பண்ணி, சாமிய கீமிய கும்புட்டு புண்ணியத்த தேடு. உனக்கு ஏஜ் பார் ஆகிப்போச்சு. இனி நீ என்ன சொன்னாலும் அதை இங்க இருக்குற ஒருபயலும் கேக்கமாட்டான். நேரத்த வீணடிக்காத. அதுக்குமேல உன் இஷ்டம்"னு சொல்லிட்டுப் போயிட்டான்.
சத்யவதியும் சரின்னு காட்டுக்குக் கிளம்புறா. நாங்களும் வர்றோம்னு அம்பிகாவும், அம்பாலிகாவும் சத்யவதி கூட கிளம்புறாங்க.
************
அவங்க போனபிறகு அரண்மனை ரொம்ப பரபரப்பாகுது. அங்க ஏற்கனவே அவிங்க 100+1+1 பேரு, இவிங்க ஒரு அஞ்சு பேரு, கேக்கவா வேணும்? எப்பப் பாத்தாலும் ஒரே காட்டாகுஸ்தியா கெடக்கு. இவனுகளுக்கு சண்டைய தீர்த்து வைக்கிறதே பெரும்பாடாப் போகுது.
"இதோடா, இந்த அஞ்சு பயலுகளுக்கும் ரெண்டு அம்மா, அஞ்சு அப்பா."ன்னு கௌரவர்கள் பாண்டவர்களைக் கிண்டலடிக்க, பதிலுக்கு அவனுங்க "வந்துட்டாய்ங்கடா, குடத்துல பொறந்தவய்ங்க"ன்னு சண்டைபோட, இந்த அலப்பறைய திருதராட்டிரனால சமாளிக்க முடியல.
இவிங்கள என்னதான் பண்ணுறது? பேசாம பள்ளிக்கூடம் அனுப்புவோம். அப்பதான் வழிக்கு வருவாங்கன்னு திருதராட்டிரன் யோசிக்கிறான். இதுக்குன்னே காத்துக்கிட்டிருந்த மாதிரி அந்த நேரம் பாத்து அஸ்தினாபுரத்துக்கு துரோணன் வாறான்.
துரோணன் யாரு? ரிக் வேதத்துல ரிவிட் அடிச்சி, யஜுர் வேதத்தை அந்தரத்துல பிடிச்சி, சாம வேதத்தை சாமத்துல படிச்சி, அதர்வண வேதத்தை அக்கக்கா பிரிச்சிப் போட்டவன்.
நல்லதாப் போச்சின்னு துரோணனை வரவேற்பு குடுத்து அரண்மனைக்குக் கூட்டிட்டு வந்த திருதராட்டிரன் "குருநாதா, நீங்கதான் டீச்சரா இருந்து இந்தப் பயலுக எல்லாருக்கும் தொழில் சொல்லிக் குடுக்கணும் குருநாதா. இவிங்க அலப்பறை தாங்கமுடியல"ன்னு சொல்றான். சரின்னு "நீ ஏம்ப்பா கவலைப்படுற? எல்லாம் நான் பாத்துக்குறேன்"னு சொல்லி எல்லாப் பயலுகளையும் குருகுலத்துக்கு ஓட்டிக்கிட்டு வாறான் துரோணன்.
கவுரவர் 100 பேருக்கும், பாண்டவர் 5 பேருக்கும், துரோணன் மகன் அஸ்வத்தாமனுக்கும் ஒரேநேரத்துல ஒரேமாதிரி கிளாஸ் எடுக்க ஆரம்பிக்குறான் துரோணன். 101வதா பொறந்த துச்சலைய பொண்ணுங்கறதால அனுப்பல. 102வதா பொறந்தவன் வேலைக்காரி மகன்னு அவனையும் குருகுலம் அனுப்பல. Note the point.
அஸ்வத்தாமன் குருஜியோட மகன். அதனால சின்ன குருஜி. சமயத்துக்கு உதவுவான், காக்கா பிடிச்சி வப்போம்னு அப்பப்போ அவனுக்கு சோப்பு போட்டு வைக்கிறான் துரியோதனன்.
எல்லா வித்தையையும் எல்லாருக்கும் சொல்லிக் குடுக்கமுடியுமா? பிரம்மாஸ்திரத்தை அர்ஜுனனுக்கு மட்டும் சொல்லிக் குடுக்குறான் துரோணன். இது அஸ்வத்தாமனுக்குப் பொறுக்கல. நேரா துரோணன்ட்ட போயி "டே தகப்பா, பெத்த பிள்ளை என்னைய விட்டுட்டு, அர்ஜுனனுக்குப் போயி பிரம்மாஸ்திரம் சொல்லித் தர்றியே? இது ஞாயமா"ன்னு கேக்குறான்.
"மவனே, பிரம்மாஸ்திரம் இருக்கே அது பூமராங் மாதிரி. போயிட்டு திரும்பி வரும்போது கோட்டை விட்டுட்டா அது உன்னையே போட்டுரும். எல்லாருக்கும் கைவராது. நீ கெளம்பு"ன்னு அனுப்பிட்டான்.
வெளில வந்த அஸ்வத்தாமனை துரியோதனன் நிப்பாட்டி காதைக் கடிக்கிறான். "எலே, உங்கப்பன் பண்ற காரியத்த பாத்தியா. நம்மள விட்டுட்டு அர்ஜுனனுக்கு மட்டும் பிரம்மாஸ்திரம் சொல்லித்தரான் பாரு. நீ இப்பிடியே விட்டுறாத. இன்னொரு வாட்டி போயி அலப்பறையக் குடு. உன் அலப்பறைக்கு பயந்து உனக்கு பிரம்மாஸ்திரம் சொல்லிக் குடுத்தார்னா இன்னைல இருந்து அவரு நமக்கு அடிமை. இல்ல உன் அலப்பறைக்கு பயப்படாம எதாவது ஆயுதத்தை எடுத்து விரட்டுனார்ன்னா இன்னைல இருந்து நம்ம அவருக்கு அடிமை. பாத்து செய்யி"ன்னு அவம்பங்குக்கு அஸ்வத்தாமனை ஏத்தி விடறான் துரியோதனன்.
ஒருவழியா பிரம்மாஸ்திரத்தை அர்ஜுனனுக்கும், அஸ்வத்தாமனுக்கும் சொல்லிக் குடுக்குறான் துரோணன்.
**************
மறுநாள் குருகுலத்துக்கு கர்ணன் வாறான். வந்தவன் துரோணன்ட்ட போயி "குருநாதா, நான் கர்ணன். தேரோட்டி அதிரதனோட மகன். எனக்கும் தொழில் சொல்லிக்குடுங்க குருநாதா"ன்னு சொல்றான்.
"தம்பீ, இங்க சத்திரியர்களுக்கு மட்டுந்தான் தொழில் சொல்லிக் கொடுக்கப்படும். நீ தேரோட்டியோட மகன். அதனால தேர்தான் ஓட்டணும். படிக்கிற ஆசை எல்லாம் உனக்கு வரப்படாது. அதனால முதல்ல கிளம்பு"ன்னு பதில் சொல்றான் துரோணன்.
"என்ன குருநாதா இது? சத்ரியன், சூத்திரன் இதெல்லாம் பிறப்பால வர்றதா இல்ல குணத்தால வர்றதா? குணத்தால வர்றதுன்னா நான் சத்திரியன். அதெல்லாம் இருக்கட்டும் குருநாதா, இவ்ளோ பேசுறீரே, இந்த வித்தைய சொல்லித் தர்ற நீரு சத்திரியனா? இல்ல இப்ப உம்மகிட்ட இருந்து கத்துக்குறானே உம்ம புள்ள அஸ்வத்தாமன். அவனாச்சும் சத்திரியனா? சொல்லுங்கள் குருநாதா சொல்லுங்கள்"ன்னு கேக்குறான் கர்ணன்.
பதில் இருந்தாத்தான சொல்லுவான். வாய மூடிட்டு நிக்குறான் துரோணன். இந்த குருநாதர்கள் எல்லாருமே தன்னை விட மத்தவங்களுக்கு அறிவு குறைவா இருக்கணும்னு நினைக்கிற பயலுக.
"உலகம் பெருசு மாமே, நமக்குன்னு ஒரு அடிமை சிக்காமலா போயிருவான்"னு நினைச்சிட்டு அங்க இருந்து கிளம்புறான் கர்ணன்.
மகாபாரதம்
முதல் பாகம் 20-21 - சாபம் வாங்கிய கர்ணன்
"நீ என்ன சாதி, என்ன குலம்"னு துரோணன் கேட்டவுடனே போய்யான்னுட்டு வந்த கர்ணன், பரசுராமன் பத்தி கேள்விப்பட்டு அவனைப் பார்க்க இமயமலைக்குப் போறான்.
(இந்தப் பரசுராமனுக்கு ஏஜ் தான் என்ன? ராமாயணத்துலயும் இருக்கான், 12,96,000 வருசம் கழிச்சி இங்க பீஷ்மனுக்கும் தொழில் சொல்லிக் குடுத்தான். இப்ப பீஷ்மனே கிழ போல்டாயிட்டான். தலைவரே, இத்தனை லட்சம் ஆண்டுகளா இருக்கீங்களே. உங்க இளமையின் ரகசியம் தான் என்னவோ?)
பரசுராமன் முகத்துல ஜேசுதாசப் பாத்தவுடனே, தல தான் பரசுராமன்னு கன்பர்ம் பண்ண கர்ணன் "கும்புடுறேன் குருநாதா, எம்பேரு கர்ணன். உங்ககிட்ட தொழில் கத்துக்க வந்துருக்கேன்"னான்.
"நீ யாருலே? நான் பார்ப்பானுக்கு மட்டுந்தான் தொழில் சொல்லிக் குடுப்பேன். நீ எந்த ஊரு? என்ன சாதி? என்ன குலம்? என்ன கோத்திரம்?"னு கேக்குறான் பரசு.
இவிங்க என்னடா எப்ப பாத்தாலும் சாதி, குலம், கோத்திரம், மூத்திரம்னு கழுத்தறுக்குறாய்ங்க? துரோணனும் இதையே கேட்டு விரட்டி விட்டுட்டான். இந்தப் பெருசு பெரிய அப்பாடக்கர்ன்னாய்ங்க. இந்தாளும் இதையே கேக்குறான்னு யோசிச்ச கர்ணன், வீரியம் முக்கியமில்ல, காரியம் தான் முக்கியம், முதல்ல தொழில் கத்துக்குவோம், மிச்சத்த அப்புறம் பாப்போம், என்ன கழுத்தையா சீவப் போறான்னு நினைச்சிட்டு ஒரு பொய்ய அடிச்சி விடுறான்.
"குருநாதா, நான் ஒரு ஏழைப் பிராமணன். எங்கப்பன் கோயில்ல மணியாட்டுறான்"னு அடிச்சுவிட்டத பரசுராமனும் நம்பி நல்லபடியா தொழில் சொல்லிக் குடுக்குறான்.
அப்பால ஒருநாள் கர்ணன் மடியில தல வச்சி பரசு தூங்கிட்டிருக்கான். அப்ப இந்திரன் ஒரு வண்டா மாறி கர்ணன் தொடையில ரத்தம் வர்றமாதிரி கடிக்க, கர்ணன் வலிய தாங்கிட்டு பொறுமையா இருக்கான். ஆனா ரத்தம் பட்டு எந்திரிச்சிட்டான் பரசு.
ஒரு வண்டு கடிச்சு ரத்தம் வந்தும் கத்தாம இருக்கான்னா இவன் நிச்சயம் சத்ரியனா தான் இருக்கணும்னு நினைச்சிட்டு "எலே கர்ணா, சத்ரியன் மட்டுந்தான் எவ்ளோ அடிச்சாலும் தாங்குவான். நீயும் அதேமாதிரி தாங்குறியே. நீ சத்திரியனா? உண்மையச் சொல்லு"ன்னு கர்ணன்ட்ட கேக்குறான் பரசுராம்.
"மன்னிக்கணும் குருநாதா, நான் பார்ப்பானும் இல்ல, சத்திரியனும் இல்ல, சூத்திரன். எங்கப்பன் கோயில்ல மணியாட்டல, தேர் ஓட்டுறான்"னு சொன்னத பரசுராம் நம்பல.
"சத்திரியர்களுக்கு நான் வில்வித்தை சொல்லித்தரக் கூடாதுன்னு விரதத்துல இருந்தேன். நீ என் விரதத்தைக் கலைச்சிட்டியே"ன்னு சத்தம் போடுறான் பரசுராம்.
"நான் சத்திரியன் இல்ல குருநாதா"ன்னு கர்ணன் எவ்வளவோ சொல்ல அதை நம்பாத பரசுராம் "எலே, பொய் சொன்னதால நீ கத்துக்கிட்ட தொழில் எல்லாம் முக்கியமான நேரத்துல மறந்துடும்"னு சாபம் விடறான். "என் முகத்துல முழிக்காத, ஓடிப்போ"ன்னு விரட்டி விட்டுட்டான்.
"அங்க துரோணன் சத்ரியனுக்கு மட்டுந்தான் சொல்லித் தருவேன்னு சொன்னான். இந்த பரசுராம் சத்ரியனுக்கு மட்டும் கத்துத்தர மாட்டேன்னு சொல்றான். அப்பிடியே இருந்தாலும் நான் சத்திரியன் இல்லியே. ஆளாளுக்கு terms & conditions வச்சிட்டு பாடாப் படுத்துறாய்ங்களே. இதுல சாபம் வேற விட்டுட்டான்"னு புலம்பிட்டே போறான் கர்ணன்.
போற வழில ஆக்சிடன்ட் பண்ணி ஒரு பார்ப்பான் வளர்த்த பசுமாட்டை தேர் ஏத்தி கொன்னுட்டான் கர்ணன். கடுப்பான அந்த பார்ப்பான் "முக்கியமான நேரத்துல தேரோட ஆக்ஸில் உடையட்டும்"னு சாபம் விடுறான். (என்னங்கடா சாபமா விடுறீங்க?)
சரி, இந்த இந்திரம் பய ஏன் வண்டா மாறி கர்ணனைக் கடிக்கணும்? ஏன்னா குந்திகிட்ட இந்திரன் குடுத்த குழந்தை தான் அர்ஜுனன். அதனால கர்ணனை பரசுராம்ட்ட போட்டுக் குடுத்தா அவனுக்கும் சாபம் கிடைக்கும். அது மூலமா பின்னாடி அர்ஜுனனுக்கும் நன்மை கிடைக்கும் இல்லியா. அதுக்குதான். (சகுனி மட்டுந்தான் சூழ்ச்சிக்காரனா?)
மகாபாரதம்
முதல் பாகம் 22-23 - கர்ணன் முடிசூட்டுதல்
பரசுராமன்ட்ட தொழில் கத்துக்கிட்ட கர்ணன், தன்னை பார்ப்பான்னு பொய் சொன்னதுக்காக அந்தாளு கிட்ட ஒரு சாபத்தையும், தேர் ஏத்தி பசுமாட்டைக் கொன்னதுக்காக பசுமாட்டு ஓனர் பார்ப்பான் கிட்ட இன்னொரு சாபத்தையும் வாங்கிட்டு வீட்டுக்குப் போறான்.
(இங்கிட்டு கட் பண்ணிட்டு, அங்கிட்டு துரோணன் வீட்டுல கேமராவ போகஸ் பண்றோம்)
துரோணனைப் பாக்க ஒரு வேட்டைக்காரன் வர்றான். வந்தவன் "கும்புடுறேன் குருநாதா, ஊருக்குள்ள என்னைய ஏகலைவன்னு கூப்புடுவாங்க. கமல்ஹாசன் மட்டும் ஏலகைவன்னு சொல்லுவாரு. எனக்கு தொழில் சொல்லிக்குடுங்க குருநாதா."ன்னு மனுத்தாக்கல் பண்றான்.
"தம்பீ, இங்க சத்ரியர்களுக்கு மட்டுந்தான் சர்வீஸ். நீ என்ன சாதி? என்ன குலம்? என்ன கோத்திரம்?"னு வழக்கம்போல முக்கியமான நரம்புல கை வைக்கிறான் துரோணன்.
"உழைக்கிற சாதி குருநாதா. நான் வேட்டைக்காரன்"ன்னு வெள்ளந்தியா சொல்றான் ஏகலைவன்.
"தம்பீ... நீ இடம் மாறி வந்துட்ட... கிளம்பு"ன்னு விரட்டிட்டான்.
***********
கொஞ்ச நாள் கழிச்சி, காட்டுல டேரா போடுறது எப்பிடின்னு பாண்டவருக்கும், கவுரவருக்கும் சொல்லிக்குடுக்க அவங்களை அழைச்சிட்டு காட்டுக்குள்ள போறான் துரோணன். கூடாரம் போடுற நுணுக்கங்கள் எல்லாம் பியர் கிரில்ஸ் மாதிரி சொல்லித் தாறான்.
அங்க காட்டுல இன்னொரு பக்கம் வில் அம்பு வேட்டைன்னு பட்டையக் கெளப்புறான் ஒருத்தன். யாருன்னு போயி பாத்தா அதே ஏகலைவன். "குருநாதா, எனக்கு தொழில் சொல்லித்தர மாட்டேன்னு சொன்னீங்களே. பாத்திங்களா தினமும் உங்களைப் பாத்து நானே கத்துக்கிட்டேன்"னு ஆச்சரியப்படுத்துறான் ஏகலைவன்.
"எலே, என்கிட்ட இருந்து என் அனுமதி இல்லாம நீயா எப்பிடிலே கத்துக்கலாம்? மரியாதையா என்னோட காப்பிரைட்டுக்கு ராயல்டி குடு"ன்னு கேக்குறான் துரோணன்.
"என்ன வேணுமோ கேளுங்க குருநாதா"ன்னு ஏகலைவன் சொல்ல, "உன் வலதுகை கட்டை விரலை வெட்டிக் குடுலே"ன்னு துரோணன் கேட்டவுடனே அவனும் வெட்டிக் குடுக்குறானாம்.
(இவிங்களே கைய வெட்டிட்டு, அவனாத்தான் வெட்டுனான்னு கதையளப்பாய்ங்களே. ஆக, ஒரு சூத்திரப்பயலுக்கு வித்தை கத்துக்குற தகுதி கிடையாது. அவன் முயற்சியில அவனாக் கத்துக்கிட்டாலும் அதையும் கெடுத்துக் குட்டிச் சுவராக்குவோம். அதை நியாயப்படுத்தவும் செய்வோம். இதாம்லே இன்னிக்கு வரைக்கும் நடக்குது?)
(எந்த ஒரு போரா இருந்தாலும் முன்வரிசைல நின்னு சண்டை போட்டது சூத்திரன் தானே? சத்திரியன் திருமலை நாயக்கனுக்காக இந்தப் பக்கமும், சத்திரியன் திருவாங்கூர் மன்னனுக்காக அந்தப்பக்கமும் சண்டைபோட்டு உயிர்த்தியாகம் பண்ணது சூத்திர மறவர் சாதிக்காரன் தானே? இன்னிக்கு பஞ்சம் பொழைக்க ஆந்திராவுக்கும், கேரளாவுக்கும் போற பயலுகள நிப்பாட்டி பேச்சுக்குடுங்க. ஆண்ட பரம்பரைன்னு முண்டா தட்டுவான் முட்டாப்பய. நீ இப்பிடி முட்டாளா இருந்தாத்தாம்லே அவம் பொழைக்க முடியும்)
*******
ஒருவழியா டிரெய்னிங் முடிஞ்சது. எல்லாத் தொழிலையும் கத்துக்கிட்ட பாண்டவர் அஞ்சு பேரையும், கவுரவர் நூறு பேரையும் ஓட்டிக்கிட்டு அஸ்தினாபுரம் அரண்மனைக்கு வந்த துரோணன், அவங்கள திருதராட்டிரன் கிட்ட ஒப்படைக்கிறான்.
"ரொம்ப நன்றி குருநாதா, இந்த உருப்படாத பயலுகள வச்சிக்கிட்டு என்ன பண்றதுன்னு தெரியாம இருந்தேன். நல்லவேளையா நீங்க தொழில் சொல்லிக் குடுத்தீங்க"ன்னு சொன்ன திருதராட்டிரன், அரங்கேற்றத்துக்கு ஏற்பாடு பண்றான்.
அரங்கேற்றம்னா இந்த 105 பயலுகளும் அவனவன் கத்துக்கிட்டதை டெமோ பண்ணிக் காட்டணும். அரங்கேற்றத்துக்கான நாட்டாமைகள் பீஷ்மன், துரோணன் & கிருபாச்சாரி (நீ யாருலே கிருபா, புதுசா இருக்க?)
************
அரங்கேற்றம் நடக்குது. 105 பேரும் ஒவ்வொருத்தனா வந்து அவன் கத்துக்கிட்ட வித்தையெல்லாம் டெமோ காட்டுறான். அர்ஜுனன் அப்பிடி டெமோ காட்டிட்டிருக்கும்போது குறுக்கால வாறான் கர்ணன்.
"ஏம்ப்பா, உலகத்துல நீங்க மட்டுந்தான் தொழில் கத்துக்கிட்டீங்களா? இந்த பில்டப் எல்லாம் எனக்கும் தெரியும். இந்தா பாரு"ன்னு கர்ணனும் டெமோவ ஆரம்பிக்குறான்.
விடுவாய்ங்களா? கிருபாச்சாரி வர்றான். "தம்பி, திடீர்னு சம்மன் இல்லாம ஆஜர் ஆகுறியே? யாரு நீயி? நாங்க நாட்டாமைங்க இங்க எதுக்கு இருக்கோம்?"
"நான் கர்ணன் குருநாதா"
"அது யாருக்கு வேணும்? இவிங்கள்லாம் சத்திரிய இளவரசய்ங்க. நீ யாரு? என்ன சாதி? என்ன குலம்? என்ன கோத்திரம்?"ன்னு கிருபாச்சாரி கேக்க, பதில் சொல்லத் தெரியாம நிக்கிறான் கர்ணன். ஏற்கனவே பொய் சொல்லிட்டு சாபத்த வாங்கிருக்கான்.
இந்த நேரத்துல சுதாரிக்குறான் சகுனி. பக்கத்துல இருக்குற துரியோதனன் காதைக் கடிக்கிறான். "மாப்ள.. இந்தக் கர்ணன் உனக்கு வாய்த்த சிறந்த அடிமை. விட்டுறாத. பிரயோஜனப்படுவான்"னு துரியோதனன் கிட்ட சகுனி சொல்ல, விசயத்தைப் புரிஞ்சிட்ட துரியோதனன் படக்குனு எந்திரிச்சி கிருபா கிட்ட வாறான்.
"ஓய் கிருபாச்சாரி, உமக்கென்ன அவன் சத்திரியனா இருக்கணும், அவ்வளவுதான? அந்தக் கர்ணனை நான் என் ஆளுகைக்குட்பட்ட "அங்க தேசத்து" அரசனாக்குறேன். இப்ப அவனும் சத்ரியன் தான்"னு சொல்லி ஸ்பாட்லயே கர்ணனுக்கு "அங்க தேசத்து" அரசனா முடிசூட்டுறான். So இப்ப கர்ணன் சத்ரியனாயிட்டான்.
சமயத்துல மானத்தைக் காப்பாத்துன துரியோதனனுக்கு நன்றி சொன்ன கர்ணனும் டெமோவ கன்டினியூ பண்றான்.
*****************
(சாமீ, எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும். அதாவது இப்போ குருட்சேத்திர நாட்டு அரசனா இருக்குறவன் திருதராட்டிரன். இந்த பாண்டவர், கவுரவர் 105 பேரும் இளவரசர்கள். இப்பதான் தொழில் கத்துக்கிட்டு டெமோ காட்டிட்டு இருக்குறாய்ங்க.
திருதராட்டிரனுக்குப் பிறகு யார் மன்னனாகப் போறது? பாண்டவர்கள்ல ஒருத்தனா இல்ல கௌரவர்கள்ல ஒருத்தனா அப்பிடிங்குற காட்டாகுஸ்தியே இனிமே தான் ஆரம்பிக்கப் போகுது.
அதுக்குள்ள எந்த நாட்டுக்கும் அரசனா இல்லாத துரியோதனன், எப்பிடிய்யா "அவன் ஆளுகைக்கு உட்பட்ட அங்க தேசத்து" அரசனா கர்ணனுக்கு முடிசூட்ட முடியும்?)
மகாபாரதம்
முதல் பாகம் 24-25 - அரசாட்சி யாருக்கு?
அரங்கேற்றம் முடிஞ்சி எல்லாப் பயலுகளும் அரண்மனைக்குத் திரும்புறாங்க. துரோணனும் அவிங்களோடயே அரண்மனைல செட்டில் ஆகுறான். ஆனாலும் அரண்மனை அமைதியா இல்ல. குழாய்ல தண்ணி வரலன்னாக் கூட கௌரவருக்கும், பாண்டவருக்கும் சண்டை நடக்கும். கரைச்சல் தாங்கமுடியல. இவிங்களோட காட்டாகுஸ்தி எல்லைமீறிப் போற ஒருநேரத்துல, ரெண்டு பயலுகளையும் கூப்புடுறான் துரோணன்.
"தம்பிகளா... நானும் அரண்மனையிலயே தங்கிட்டேன். ஊருக்குப் போயி வேல வெட்டிய பாக்கவேணாமா? நான் கிளம்புறேன். அதுக்கு முன்னாடி எனக்கு சேரவேண்டிய குருதட்சணையக் குடுங்க"ன்னு கேக்குறான் துரோணன்.
"உங்களுக்கு இல்லாததா.. என்ன வேணும்னு சொல்லுங்க குருநாதா"ன்னு சொல்றானுங்க பாண்டவரும் கௌரவரும். "எனக்கு காசெல்லாம் வேணாம். நான் ஒருத்தனைப் பழிவாங்கணும். அதுக்கு நீங்க உதவணும்"னு நேரம் பார்த்து கோர்க்குறான் துரோணன்.
"யாருன்னு சொல்லுங்க குருநாதா"
"பாஞ்சால மன்னன் துருபதனைத் தூக்கிட்டு வாங்க. அவனோட நான் ஒரு பழைய கணக்கை முடிக்கணும்"னு சொல்றான் துரோணன்.
(துருபதன் ஞாபகமிருக்கா? அம்பாவுக்கு முருகன் ஒரு முத்துமாலையக் குடுத்து, இதை அணிஞ்சிட்டுப் போயி சண்டை போட்டா பீஷ்மனை ஈசியாப் போட்டுத் தள்ளலாம்னு முருகன் குடுத்த மாலைய அம்பா பாஞ்சால நாட்டு மன்னன் துருபதன் கிட்ட குடுத்துட்டு வந்தா ஞாபகமிருக்கா? அந்த துருபதன்)
அந்த துருபதனும், துரோணனும் துரோணனோட அப்பன் பரத்வாஜன்ட்ட தொழில் கத்துக்கிட்ட தோஸ்த்துங்க. பின்னாடி துருபதன் பாஞ்சால மன்னனாகுறான். அப்ப அவன்ட்ட போன துரோணன் அவன்ட்ட ஒரு ஹெல்ப் கேக்குறான். ஆனா துரோணனை மதிக்காம, ஹெல்ப் பண்ணாம விரட்டியடிச்சிட்டான் துருபதன். இதுக்கு இப்ப இவிங்கள வச்சி பழிவாங்கணும்னு ஆசை துரோணனுக்கு. எப்பிடி? நேரா பாஞ்சாலம் போயி சண்டைபோட்டு துருபதனைத் துக்கிட்டு வரணும்.
குருநாதர் குடுத்த முதல் அசைன்மென்ட் ஆச்சே? கவுரவர், பாண்டவர் ரெண்டு பயலுகளும் ஒண்ணா சேர்ந்துபோயி சண்டைபோட்டு துருபதனைத் தூக்கிட்டு வந்து துரோணன்ட்ட ஒப்படைக்கிறானுங்க.
"டே துருபதா, பெரிய கில்பாவா நீ? பாத்தியா என் பசங்கள? தூக்கிட்டே வந்துட்டானுங்க. இனியாவது பழசை மறக்காம ஒழுங்கா இரு. போ"ன்னு சொல்லி துருபதனை விரட்டியடிக்கிற துரோணன், அஸ்தினாபுரம் அரண்மனையில இருந்து கிளம்புறான்.
*************
Camera focus to பாஞ்சாலம்
இங்க துருபதனுக்கு ஒரு மண்ணும் புரியல. இந்த கௌரவரும் பாண்டவரும் ஏன் இங்க வந்தானுங்க? ஏன் தூக்கிட்டுப் போனானுங்க? அப்புறம் ஏன் துரோணன் விரட்டியடிச்சான்? ஒண்ணும் புரியல. ஆனா நடந்த அவமானத்துக்குப் பழிக்குப் பழிவாங்க ரெடியாகுறான்.
ஏற்கனவே பாஞ்சாலத்தோட சில பகுதிய பாண்டு சண்டைபோட்டு புடுங்கிட்டான். இவிங்க இம்சையே வேணாம்னு ஒதுங்குனா இந்த பாண்டவரும், கவுரவரும் தேடிவந்து குடைச்சல் குடுக்குறானுங்க. இதுல இருந்து எப்பிடி தப்பிக்குறது?
பேசாம இவிங்க கால்லயே விழுந்துட்டா என்ன? குறிப்பா பாண்டவர் அஞ்சு பயலுகளையும் வளைச்சுப் போடணும். அதுக்கு அவனுக யாருக்காச்சும் பொண்ணு குடுத்து சொந்தக்காரனாகணும். அதுக்கு முதல்ல ஏஞ்சலினா ஜோலி மாதிரி ஒரு பொண்ணு வேணும். அப்புறம் கௌரவர்களை சமாளிச்சு சண்டைபோட ஜான் சீனா மாதிரி ஒரு பையன் வேணும்.
பொண்ணும் வேணும், பையனும் வேணும். என்ன பண்ணலாம்? இனிமே ஆரம்பிச்சி, பொண்ணு பொறந்து அது வளர்ந்து வாலிபமாகி அப்புறமா பாண்டவர்ல யாருக்காச்சும் கட்டிக்குடுக்குற முன்னாடி அவனுங்க பேரப்பிள்ளையையே கொஞ்ச ஆரம்பிச்சிருவானுங்க. என்ன பண்ணலாம்னு யோசிச்ச துருபதன், முனிவர்கள் எல்லாரையும் வரச்சொல்றான்.
Infertility center, செயற்கை கருவூட்டல் மையம் போறதுக்கு அவன் என்ன கிறுக்கனா? இந்த முனிவர்ஸ் எல்லாம் வெட்டியாத்தான திரியுறானுங்க. அவனுங்கள்ட்ட கேட்டா எதாவது விபரீத ஐடியா கிடைக்கும்.
முனிவர்ஸ் எல்லாம் வந்தானுங்க. புதுசா சொல்ல என்ன இருக்கு? யாகம் பண்ணுங்க மன்னா அப்பிடின்னு ஐடியா சொல்றானுங்க.
(நம்ம ஊர்ல பாருங்க, இங்க மழை பெய்யாட்டி யாகம் பண்ணுறான். ஆனா பிள்ளை இல்லாட்டி யாகம் பண்ணுறானா? அப்ப மட்டும் டாக்டர்ட்ட போவான்)
யாகம் நடக்குது. யாகம் முடிஞ்சவுடனே யாக குண்டத்துல இருந்து ஜான் சீனா மாதிரி ஒரு மகனும், ஏஞ்சலினா ஜோலி மாதிரி ஒரு மகளும் வெளில வராங்க. (எவ்ளோ சுலபம் பாத்தியா)
ஜான் சீனாவுக்கு திஷ்டத்துய்மன்னு பேருவச்ச துருபதன், ஏஞ்சலினா ஜோலிக்கு துருபதின்னு பேரு வைக்கிறான். துருபதிக்கு திரவுபதின்னு இன்னொரு பேரு. பாஞ்சால நாட்டு இளவரசிங்குறதால பாஞ்சாலி.
***********
Again camera focus to அஸ்தினாபுரம் அரண்மனை
குருட்சேத்திர நாட்டின் மன்னனா திருதராட்டிரன் இவ்ளோ காலம் குப்பை கொட்டியாச்சு. இனிமேல் அடுத்த தலைமுறைக்கு வழிவிட்டு ஒதுங்குறதுதானே மரியாதை? இதுபத்தி பேசலாம்னு அரண்மனைல இருக்குற அம்புட்டு கிழடு கட்டைகளையும் கூப்பிட்டுப் பேசுறான் திருதராட்டிரன். எல்லாப் பெருசுகளும் மன்னனுக்கும், கௌரவர்களுக்கும் ஜால்ரா அடிக்க விதுரன் மட்டும் பாண்டவருக்கு ஆதரவாப் பேசுறான்.
"மூத்தவர் திருதராட்டிரனா இருந்தாலும் கண் தெரியாதுன்ற காரணத்தால முடிசூட்ட முடியாது. அதனால பாண்டு மன்னனானான். ஆனா அவன் கிந்தம முனி கிட்ட சாபம் வாங்குனதால வனவாசம் போனான். திரும்பி வர்றவரைக்கும் டெம்பரரி மன்னனா தான் திருதராட்டிரனை நியமிச்சிட்டுப் போனான். ஆனா பாண்டு காட்டுல இறந்ததால திருதராட்டிரனே மன்னனா கன்டினியூ பண்றான். அவ்ளோ தான். இதை நீங்க புரிஞ்சிக்கணும். இப்போ பாண்டவர்கள் வளர்ந்துட்டதால அவங்கள்ல மூத்தவன் தர்மன் தான் மன்னனாகணும். அவன் கிட்ட குருட்சேத்திர நாட்டோட ஆட்சியை ஒப்படைக்குறது தான் தர்மம்"னு சொல்றான் விதுரன்.
இதக்கேட்டு துரியோதனன் டென்சனாகுறான். "சித்தப்பு, எங்கப்பா திருதராட்டிரன் தான் மூத்தவர். நீங்க அவரை கண்ணு தெரியாதவன்னு சொல்லி பாண்டுவை மன்னனாக்குனீங்க. அதுவே தப்பு. இவ்ளோ நாளா மன்னனா இருந்தது எங்கப்பா தான். அவர் தான் மூத்தவர். அதனால அவருக்குப் பிறகு நான்தான் மன்னனாவேன்"னு சொல்றான் துரியோதனன். இவிங்க அக்கப்போரே இங்க இருந்துதான் ஆரம்பிக்குது.
பெருசுங்க எல்லாருக்கும் கொஞ்சம் குழப்பம் தான். வெரி டெலிகேட் பொசிசன். ரெண்டு தரப்பு நியாயத்தையும் அலசாம உடனே எப்பிடி தீர்ப்பு சொல்றது?
இந்த நேரம் இந்த விசயத்தை கொஞ்சம் ஒத்திப்போடுவோம்ன்னு நினைச்ச திருதராட்டிரன் பாண்டவர்கள்களை கூப்பிட்டு "பக்கத்து ஊர்ல கரகாட்டம் நடக்குது. போயி ஜாலியா பாத்துட்டு வாங்க. நாங்க பெரியவங்கள்லாம் ஆலோசனை பண்ணி வைக்கிறோம்"னு சொல்லி பாண்டவரை அங்க அனுப்பி வைக்கிறான்.
************
பக்கத்து ஊர் கரகாட்டம் பாக்க பாண்டவரும், குந்தியும் அங்க போறதுக்குள்ள இவிங்கள போட்டுத்தள்ள ஏற்பாடு பண்றான் துரியோதனன். இதை விதுரன் பாண்டவருக்குச் சொல்ல எப்பிடியோ தப்பிச்சிப் போய் சேர்றாங்க.
கரகாட்டம் முடிஞ்சது. இப்ப அரண்மனைக்குத் திரும்புனா இந்த துரியோதனன் எதாச்சும் சதி பண்ணுவானோன்னு பயந்துட்டு, கங்கையத் தாண்டி ஒரு காட்டுக்குள்ள என்ட்ரி ஆகுறானுங்க பாண்டவர் & கோ. இவிங்க தப்பிச்ச விசயம் விதுரன் தவிர வேற யாருக்கும் தெரியாது. ஒழிஞ்சான் தர்மன்னு ஏக ஜாலியா இருக்குறான் துரியோதனன்.
அங்கிட்டு காட்டுக்குள்ள போன பாண்டவர் & கோ.வை மோப்பம் பிடிச்ச இடும்பன்ங்குற ஒரு அரக்கன்(?), அவன் தங்கச்சி இடும்பிய(!) கூப்புடுறான். "மனுச வாடை அடிக்குது. போயி மனுசப் பயலுக யாரா இருந்தாலும் தூக்கிட்டு வா, பசிக்குது"ன்னு எதோ ஹோட்டல்ல மசால் தோசை ஆர்டர் பண்றமாதிரி சொல்றான். உடனே இடும்பியும் கிளம்புறா.
வந்தவ பீமனைப் பாத்தவுடனே KILL MODEஐ கைவிட்டு LOVE MODEக்குப் போயிட்டா. அதனால அண்ணன் இடும்பனைப் பத்தி சொல்லி அவங்கள தப்பிச்சிப் போகச் சொல்றா.
"அதெல்லாம் முடியாது. உன் அண்ணன் வரட்டும். ஒரு கை பாக்குறேன்"னு பீமன் சொல்ல கொஞ்ச நேரத்துல வந்து சேருறான் இடும்பன். இடும்பன் Vs பீமன் மேட்ச் ஸ்டார்ட் ஆக, இடும்பனைக் கொன்னு பீமன் ஜெயிக்கிறான்.
அண்ணன் இடும்பன் செத்துட்டான். அதனால இனி நான் எங்க போக? பீமன்தான் என்னைக் கல்யாணம் பண்ணனும்னு சொல்றா இடும்பி. இவ்ளோ நடந்தாலே உடனே வியாசன் வந்துருவானேன்னு யோசிக்கிறதுக்குள்ள கரெக்டா வந்துட்டான் வியாசன்.
"மம்மி, பீமனுக்கும், இடும்பிக்கும் கல்யாணம் பண்ணி வைப்போம்"னு குந்தி கிட்ட சொல்றான். அந்தம்மா என்ன மாட்டேன்னா சொல்லப் போகுது? இந்த வியாசன் எங்க இருந்து வர்றான், எதுக்கு வாறான்னு தெரில. ஆனா வரவேண்டிய நேரத்துல கரெக்டா வந்து யாருக்காச்சும் கல்யாணம் பண்ணி வச்சிட்டுப் போயிடுறான் இல்லாட்டி பிள்ளை வரம் குடுத்துட்டுப் போயிடுறான்.
பீமனுக்கும் இடும்பிக்கும் கல்யாணம் நடந்து கடோத்கஜன் பிறக்குறான். ஒரு இனிய காலைப் பொழுதில் இடும்பியையும், கடோத்கஜனையும் காட்டுக்குள்ள அம்போன்னு விட்டுட்டு, குந்தியும் பாண்டவர் & கோவும் ஏக சக்கர நகரத்துக்குக் கிளம்புறாங்க.
**************
மக்களே, இவிங்க ஏன் அடிச்சிக்கிறாய்ங்க, எதுக்கு காட்டாகுஸ்தி போடுறாய்ங்கன்னு ஒரு எழவும் புரியாமலே முதல் பாகம் முடிஞ்சது.
ஆனா ஒன்னு, குழந்தை வேணும்னா இனி டாக்டர்ட்ட போகவேணாம். யாகம் பண்ணுங்க இல்லாட்டி மந்திரம் சொல்லுங்க. உடனே பாப்பா கிடைக்கும். ஆயுஷ்மான் பவ...
இரண்டாம் பாகத்துல மீட் பண்ணுவோம்.
மகாபாரதம்
இரண்டாம் பாகம் - ஒரு முன்னோட்டம்
வேலை மெனக்கெட்டு ஏன் மகாபாரதத்தை வியாக்கியானம் பண்ணனும்?
நேற்று ஜெய் ஸ்ரீராம் சொல்லச்சொல்லி அடித்தே கொன்ற ரவுடிகள், நாளை ஜெய் ஸ்ரீகிருஷ்ணாவைக் கையிலெடுப்பார்கள். இல்லாவிட்டால் ஜெய் முருகன், ஜெய் பிள்ளையார், ஜெய் எலி பகவான், ஜெய் புலி பகவான் என்று அவர்கள் நம்பிக்கையைக் குலைக்காத அளவுக்கு கடவுளர்களின் எண்ணிக்கை உள்ளது. இந்துமத மடத்தனங்களே இந்த மடையர்களின் மூலதனமாக உள்ளது.
எந்த நாத்திகனும் இதுவரை கோயிலை உடைத்ததில்லை. சிலைகளைக் களவாடியதில்லை. மூலஸ்தானத்தில் ஜல்சா பண்ணியதில்லை. மதுரை ஆதீன மடத்தைக் கைப்பற்ற நித்யானந்தா முயற்சித்தபோது அதை முறியடித்ததும் நாத்திகர்களே. மதுரை மீனாட்சி கோயில் தீ விபத்தின் போது, அதைக்காக்க போராடியதும் நாத்திகர்களே.
மத நம்பிக்கை என்பது ஆளும் வர்க்கத்தின் கொலைக் கருவி. தன் இருத்தலைக் காக்க மதங்களும், நம்பிக்கைகளுமே கைகொடுத்தன. அது இன்றுவரை தொடர்கிறது. ஒரு தண்ணீர் பஞ்சத்திற்கே யாகம் செய்து, தன்மீது வரவேண்டிய மக்கள் கோபத்தை கடவுள் மீது திருப்புகின்ற மட மந்திரிகள், நாளை உணவுப் பஞ்சம் வந்தால் என்ன செய்வார்கள்? அந்தளவு சுயநல அரசியல்வாதிகள் நம்மை ஆள்கிறார்கள். அவர்களை வாழவைப்பதும் மதங்களே. இதை முறியடிக்க மதங்களின் கையாலாகாத்தனம் அம்பலப்படுத்தப்பட வேண்டும்.
இதுவரை பார்த்த மகாபாரதம் முதல் பாகத்தில் என்ன தெரிந்து கொண்டோம்?
கங்கை நதிக்கு பீஷ்மன் பிறக்கிறான். பராசர முனிவனின் "தவஒளி"க்கு வியாசன் பிறக்கிறான். வியாசனின் "தவஒளி"க்கு பாண்டுவும், திருதராட்டிரனும், விதுரனும் பிறக்கிறார்கள். பாண்டவர்கள் பாண்டுவுக்குப் பிறக்காதவர்கள். கௌரவர்கள் திருதராட்டிரனுக்குப் பிறக்காதவர்கள். பாஞ்சாலி யாககுண்டத்திலிருந்து குமரிப்பெண்ணாக பிறக்கிறாள்.
இன்று இந்த இதிகாசங்களுக்கு விளக்குப் பிடிப்போர், இதுபோல் தங்களுக்குப் பிறக்க யாகம் செய்வார்களா?
ஒன்றுமில்லாத ஒரு சிறிய பகையை ஊதிப் பெரிதாக்கி தர்மம், அதர்மம், புனிதம் என்ற சல்லாத் துணிகளால் அதை வெட்டி ஒட்டி இதிகாசம், புராணம் என்று காலாகாலமாக படம் ஓட்டி வருகிறார்கள். அந்த சல்லாத் துணிகளைக் கிழித்தெறிந்து, மதங்களின் பிடியிலிருந்து சாதாரண மக்களை மீட்டால் மட்டுமே மனிதம் தழைக்கும்.
எனது இந்தத் தொடரின் நோக்கமும் அதுவே...
*********
தகவலுக்காக:
ஒரு கிரைம் நாவல் போல் மகாபாரதம் படிக்கமுடியாது. கதை, கதைக்குள் கதை, அதற்குள் பல ட்விஸ்ட்டுகள் என்று எதோ கஞ்சா போதையில் இருப்பவன் எழுதினால் எப்படி இருக்குமோ அப்படிதான் இருக்கும். நான் முக்கிய கதையை மட்டும் எடுத்துக் கொண்டு, தேவையற்ற அம்புலிமாமா கதைகளைத் தவிர்த்து, சாரத்தை மட்டும் எடுத்து அதை என் ஸ்டைலில் முன்வைக்கிறேன்.
நீங்களும் படிக்கலாம். அவசியம் படியுங்கள். அப்பொழுது தான் பார்ப்பனிய சாதிய மேலாண்மை, மக்களின் மனதை மழுங்கடிக்க எழுதி வைக்கப்பட்ட பாவ புண்ணியக் கதைகள், பாலியல் வக்கிரங்கள் என எல்லாவற்றையும் நீங்கள் அறியமுடியும்.
மெய்ப்பொருள் காண்பதறிவு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக