வெள்ளி, 19 டிசம்பர், 2025

மௌன சரித்திரம் - நாவல்

இது மௌன சரித்திரம். ஒருவகையில் சரித்திரத்தின் மௌனம் என்றும் சொல்லலாம். ஒரு தவறு நடக்கும்போது, அதைக் கண்டு உள்ளம் குமுறினாலும் வாய் மூடிச் சென்றால், அதுவே மௌனம். 

உள்ளம் குமுறாமலும், வாய் மூடியும் சென்றால் அது சவம். சவங்களை வரலாறு நினைவில் வைத்திருக்காமல், அதன் குப்பைக்கூடையில் எறிந்துவிட்டு மேற்ச்செல்லும். 

அந்தக் குப்பைக்கூடையில் உள்ள சவங்களில் சாமானிய பிழைப்புவாதி மனிதர்கள் மட்டும் இல்லை. பல மதத் தலைவர்களும், ஏன் மன்னர்களும் கூட காட்சியளிப்பார்கள். 

அந்தக் குப்பையை நோண்டும்போது, எனக்கு புலப்பட்ட சில மனிதர்களை, அவர்களின் மௌனங்களை, அந்த மௌனங்களின் வரலாற்று விளைவுகளை இங்கே கதையாகத் தொகுக்கிறேன். 
*****

வரலாறு விசித்திரமானது. சாம்ராஜ்யங்களின் எழுச்சியும், மன்னர்களின் சாதனைகளும் கல்வெட்டுகளில் பொறிக்கப்படுகின்றன. கட்டிய கோவில்களும் மன்னர்களின் பெருமையை பறைசாற்றுகின்றன.

ஆனால் வரலாறு மௌனங்களை உரத்த குரலில் பதிவு செய்ததில்லை. விளிம்புநிலை மக்களைப் பேசியதில்லை. அடிமைப்பட்டோரைப் பேசியதில்லை. எவனோ ஒரு மன்னன் கட்டிய பள்ளிக்கூடத்தில் படித்தவன் நான் என்று எவனும் எழுதியதில்லை. 

மக்கள் மன்னனின் அடிமைகளாக இருந்தார்கள். மன்னன் மத பீடங்களின் அடிமையாக இருந்தான். 

அதிகாரமும், உத்தரவும் தனக்கு கீழே உள்ளவர்களிடம் மட்டுமே செல்லும். தனக்கு மேலே உள்ளவர்களிடம் மௌனம் காக்கும். அந்த மௌனத்தையே இந்தக்கதை பேசுகிறது. 

அந்த மௌனத்தின் விளைவாக எத்தனையோ பேரை உயிரோடு எரித்தது நெருப்பு... 
பண்பாடு என்ற பெயரால்...

முதலிலேயே சொல்லிவிடுகிறேன். எனக்கு எந்த சாதியின் மீதும், எந்த மதத்தின் மீதும் பற்று இல்லை. நம்பிக்கை இல்லை. இந்த சமூகம் சாதியாலும், மதத்தாலும் பிளவுண்ட சமூகம். இங்கே பிறக்கும் ஒரு குழந்தை, ஏதோ ஒரு சாதியில், ஏதோ ஒரு மதத்தில் பிறப்பது இயல்பு. இதில் பெருமை எதுவும் இல்லை. 

கதைக்குள் செல்கிறேன். புனித பிம்பங்கள் சிலவற்றை தோல் உரித்து தொங்கவிடப் போகிறேன். அந்த பிம்பங்கள், உங்களின் புனிதங்கள் என்றால் அதை நான் மதிக்கிறேன். ஆனால், வரலாற்று உண்மைகள் வேறு. அதை எத்தனை கசப்பாக இருந்தாலும் ஏற்க தான் வேண்டும். 

நன்றி...

- சங்கர் சீனிவாசன்

உலகில் யாருக்கு அநியாயம் நடந்தாலும் உன்னால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால், நீயும் நானும் தோழர்கள். 
- சே குவேரா 

*** இந்தப் பக்கத்தில் கதை தொடரும். இணைப்பில் இருக்கவும் அல்லது பின் தொடரவும். 

PART I — மௌனத்தின் சிம்மாசனம்

Chapter 1 – மன்னரின் மௌனம்

காஞ்சிபுரம், கி.பி. 973

மன்னர் ஆழ்ந்த உறக்கத்துல இருக்கார். ஒரு சாம்ராஜ்ஜியத்தைக் கட்டி மேய்க்கறதுன்னா சும்மாவா? அரசவையை கூட்டணும், ஆலோசனை பண்ணனும், இளிச்சவாய் மன்னன் மேல போர் தொடுக்கணும், கப்பம் வசூலிக்கணும், வலுத்தவன் கொண்டு வந்த போரைத் தடுக்கணும், அவனோட சமாதானமா போகணும். கோயிலைக் கட்டணும், புலவர்களின் மொக்கை கவிதையை எல்லாம் ஆஹா ஒஹோன்னு புகழ்ந்து தள்ளனும்.. அப்பப்பா.. எத்தனை வேலைகள். 

சேவல் காலை முதல் தடவை கூவுன உடனே மன்னர் வழக்கமா எழுந்து வாக்கிங் போவார். ஆனா கொஞ்ச நாளா மன்னர் உடல் நலம் இல்லாம படுத்த படுக்கையா ஆயிட்டார். அவரோட மூத்த மகன் ஆதித்தனை யாரோ சதி பண்ணி கொலை பண்ணிட்டாங்க. அதுல இருந்து மன்னர் வாழ்க்கைய வெறுத்துட்டார். மன்னனா இருந்து என்ன பண்ண? பிள்ளைகளைக் காப்பாத்த முடியலையே. 

இன்னிக்கு, சேவல் மூணாவது தடவை கூவியும் மன்னர் கண்ணு முழிக்கக் கூட இல்ல. அதனால மன்னரை கவனிக்கும் பணிப்பெண் மன்னரோட படுக்கை அறைக்குள்ள வந்து மன்னரை கூப்பிட்டு பாத்தா. 

மன்னர் எந்திரிக்கல. மன்னர் அசந்து தூங்குறார், தூங்கட்டும்னு தனக்குத் தானே சொல்லிட்டு ஓரமா வெயிட் பண்ணா. அரண்மனைல தேவை இல்லாம பேசுறதை விட, கேள்வி கேக்குறதை விட நமக்கு நாமே பேசிக்குறது பாதுகாப்பானது அப்பிடின்னு அங்க வேலை பாக்குற எல்லாருமே தெரிஞ்சு வச்சிருப்பாங்க.. அவளும் தான். 

காலை வெயில் ஜன்னல் வழியா மன்னர் முகத்துல பட்டது. விடிஞ்சு ரொம்ப நேரம் ஆச்சுன்னு நினைச்ச பணிப்பெண் தயங்கிக்கிட்டே மன்னர் கிட்ட போயி பவ்யமா மன்னரைக் கூப்பிட்டா... மன்னர் அசையல. சத்தமா கூப்பிட்டு கூப்பிட்டு பாத்தா. ஒன்னும் பிரயோஜனம் இல்ல. மன்னரோட நெத்திய தொட்டுப் பாத்தா. ஜில்லுன்னு இருந்துச்சு. 

பணிப்பெண்ணுக்கு பதட்டம் எல்லாம் இல்ல. சாதாரண மனுசன் வீட்டுல இப்பிடி ஒண்ணுன்னா பயந்து அழ ஆரம்பிப்பாங்க. அரண்மனைல அப்பிடி எல்லாம் கிடையாது. அங்க எல்லாத்துக்கும் protocol உண்டு. வேலை செய்யும் எல்லாருக்கும் protocol பயிற்சி உண்டு. 

பொன்னியின் செல்வன் நாவல் மாதிரி இதைப் படிக்க வேண்டாம். 

Protocol படி, பணிப்பெண் வேகமா தலைமைப் பணிஆண் கிட்ட போயி, "நம்ம மன்னர்..."ன்னு சத்தமா ஆரம்பிக்க, "ஏய்.. மெதுவா பேசு, இங்க சுவருக்கும் காது இருக்கும். அடக்கி வாசி." ன்னான் தலைமை. 

"மன்னர் இன்னும் எந்திரிக்கல.."
"சத்தமா எழுப்பிப் பாத்தியா"
"ஆமா, எந்திரிக்கல, நெத்தில கை வச்சு பாத்தேன், ஜில்லுனு இருக்கு"
"சரி, நீ போ. நான் பாத்துக்குறேன்"

சொன்ன தலைமைப் பணிஆண், கொஞ்ச நேரத்துல அரண்மனை வைத்தியர், அரண்மனை புரோகிதர், ஜட்ஜ் மூவரையும் அழைத்துக் கொண்டு மன்னரின் படுக்கை அறைக்கு வந்தான். 

நம்ம ஊரு ஜட்ஜ் அய்யா தீர்ப்பு சொல்லுவார், ஆனா இந்த அரண்மனை ஜட்ஜ் அய்யாக்கு அந்த சுலபமான வேலை எல்லாம் கிடையாது. ஏன்னா பஞ்சாயத்து பண்றது, தீர்ப்பு சொல்றது எல்லாம் மன்னரோட வேலை. இந்த ஜட்ஜ் அய்யா அந்தத் தீர்ப்பை அமல்படுத்துவார். 

படுக்கை அறைக்கு வந்து மன்னரைப் பார்த்த வைத்தியர் ஒரு முடிவுக்கு வந்துட்டார். அதை உறுதிப்படுத்த மன்னரோட கையில pulse பாத்தார். சத்தமே இல்ல. மூச்சு இருக்கான்னு பாத்தார். இல்ல. நெத்தில கை வச்சு பாத்தார். ஜில்லுனு இருந்துச்சு. 

எந்திரிச்சு நின்னு தொண்டைய கனைச்சிட்டு சொன்னார் "நம்ம மன்னர் இரண்டாம் பராந்தகன் பூவுலக வாழ்க்கையை முடிச்சிட்டு, இறைவனடி சேர்ந்தார்".

"நல்லது. அவரும் எவ்வளவு நாள் தான் நோயோட போராடுறது.. நாம ஆகவேண்டியதை பாப்போம்.."ன்னு சொல்லிட்டே அரண்மனை மணியை அடிக்கச்சொல்லி ஆள் அனுப்பிட்டு, மன்னர் இறந்த செய்தியை அவரது மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் சொல்ல ஆள் அனுப்புனாங்க.. 

அப்புறம் ஆட்சி மாற்றம், புது மன்னர் இதை எல்லாம் மன்னர்களுக்கு மேல இருக்குற நிழல் மனுசங்க பாத்துக்குவாங்க... அதாவது, பிக்பாஸ்ல கமலோ, விஜய் சேதுபதியோ தான் நமக்கு தெரியும், ஆனா அந்த பிக்பாஸை யாருக்கும் தெரியாது. குரல் மட்டும் தான் கேட்டிருப்போம். அப்பிடி ஆட்கள் தான் அந்த அரண்மனை நிழல் மனுசங்க. 

மன்னர் இறந்த செய்திய மணி அடிச்சு உள்ளூர் மக்களுக்கு சொல்லியாச்சு. வெளியூர்ல யார் யாருக்கெல்லாம் தெரிவிக்கணுமோ அவங்களுக்கு எல்லாம் துணி மடல்ல எழுதி messengersக்கு தர, அவங்க உடனடியா குதிரைல கிளம்பிப் போனாங்க. 

இப்போ இவங்க எல்லாருக்கும் உள்ள கவலை மன்னர் இறந்தது பத்தி இல்ல.. எவ்ளோ சீக்கிரம் முடியுமோ அவ்ளோ சீக்கிரம் புது மன்னர் பதவி ஏத்தாகனும். 

இல்லன்னா, மன்னருக்கு துக்கம் கொண்டாடுற தேதி முடிஞ்ச மறுநாளே எவனோ ஒரு மன்னன் படை எடுத்து வந்துருவான். இல்லனா இளவரசர்கள் அவனுகளுக்குள்ள அடிச்சிக்கிட்டு எனக்கு தான் சிம்மாசனம்னு அக்கப்போர் பண்ணுவானுங்க. இல்லனா, இனிமேல் மாமூல் குடுக்க மாட்டோம்னு சிற்றரசர்கள் தகராறு பண்ணலாம். என்ன வேணாலும் நடக்கலாம். 
*****

ராணி வானவன் மாதேவியின் அறை. ராணி மன்னர் இறந்த செய்தி கேட்டு அழல. அமைதியா இருந்தா. கொஞ்ச காலமா இப்பிடி தான் இருக்கா. மகன் ஆதித்தனை கொலை பண்ணிட்டாங்க. கணவர் மன்னரா இருந்து என்ன பண்ண.. அவரும் மகனை நினைச்சே போய் சேர்ந்துட்டார். 

"எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனும். ஜெயலலிதாம்மா இறந்தது எப்பிடி? பதில் தெரியணும்"ன்னு OPS அண்ணே தர்மயுத்தம் பண்ணிட்டு, அப்புறம் 4 வருஷம் துணை முதல்வரா இருந்தார். ஆனா இப்போ வரைக்கும் ஜெயலலிதா இறந்தது எப்பிடின்னு அவருக்கும் தெரியல. அந்த நிலைமை தான் இந்த மன்னருக்கும். மகன் ஆதித்தன் எப்பிடி இறந்தான்னு அவருக்கும் தெரியல. தெரியாமலே போயிட்டார் பாவம். 

"இறுதிச் சடங்கை எப்போ வைக்கப் போறாங்களாம்?"ன்னு கேட்டா ராணி. 

"தெரியல ராணி.. நாட்டாமைகள் எல்லாரும் கூடி முடிவெடுப்பாங்க"ன்னு சொன்னா பணிப்பெண். "சரி, தாமதிக்கக்கூடாது"ன்னு சொன்னா ராணி. 

"ஏம்ப்பா.. ராணிக்கு எவ்ளோ மன தைரியம் பாத்தியா"ன்னு கேட்டான் பணிஆண் 1. 

"அதெல்லாம் இல்லப்பா.. Protocol க்கு நல்லா ட்ரெயின் ஆயிருக்காங்க ராணி" அப்பிடின்னான் பணிஆண் 2. 
*****

மன்னர் உடம்பை குளிப்பாட்டி, உடை மாற்றி கொண்டுவந்து படுக்க வைக்கிறாங்க. எப்பவும் மன்னரை தூரத்துல இருந்து பாக்குற ஜனங்க, இப்பவும் அப்பிடியே பாக்குறாங்க. 

நாட்டாமைகள் சபை கூடுது. Messengers கொண்டு போன கடிதம் கிடைச்சு, அப்புறம் சிற்றரசர்கள், மாமன், மச்சான், அங்காளி பங்காளி எல்லாப் பயலுகளும் வர்ற வரைக்கும் body தாங்காது. உடனடியா மன்னர் உடம்பை சுடுகாட்டுக்கு எடுத்துட்டுப் போயி ஆகுறதப் பாக்கணும். அதுக்கு முன்னாடி யாரு அடுத்த மன்னர்ன்னு முடிவு பண்ணியாகனும். 

எல்லாம் சரி.. கணவனை இழந்த அந்த ராணியம்மா வானவன் மாதேவியோட எதிர்காலம்? மன்னர் இறந்த உடனே ராணி பட்டம் பறிபோயிருச்சு. வானவன் மாதேவி இனி அவரோட இயற்பெயரால அழைக்கப்படுவார். சுப காரியங்கள்ல கலந்துக்க முடியாது. அரசவைக்கு வர முடியாது. 

அவங்களைப் பத்தி யாரும் கவலைப்பட்ட மாதிரி தெரியல. கேள்வி கேட்கவும் முடியாது. 

அரண்மனைகள் கேள்விகளை விரும்புறதில்லை.

- தொடரும் 
**************

Chapter 2 – நாட்டாமைகள் ஆலோசனை

ஆலோசனைக் கூடத்து நடுவுல நீள்வட்டமா ஒரு மர மேஜை. அதைச் சுத்தி வரிசையா வந்து உக்காருறாங்க அரண்மனை வைத்தியர், அரண்மனை புலவர், ஜட்ஜ், ஜோசியர், புரோகிதர், அமைச்சர், மிலிட்டரி ஆபீசர் அப்புறம் சொந்த பந்தம் எல்லாம். 

நிலப் பஞ்சாயத்து, கோவில் கணக்கு வழக்கு, வரி பிரிக்கிறது, குற்றச் செயல்கள், ஒரண்டை இழுக்குறது எல்லாம் இங்க வச்சு தான் பேசி முடிச்சு இறுதி தீர்ப்புக்கு மன்னர் கிட்ட போவாங்க. மன்னர் சொல்றது தான் தீர்ப்பு. அப்பீல்க்கெல்லாம் இங்க வேலை இல்ல. 

ஆனா இன்னிக்கு இங்க பேசுறது எதுவும் மன்னர் வரைக்கும் போகாது. பாவம், அவரே போய் சேர்ந்துட்டார். 

அரண்மனையின் மூத்த தாத்தா சோமதேவர் மொத ஆளா தொண்டைய கனைச்சுகிட்டு, "நம்ம மன்னர் இறந்துட்டார்.. இந்தப் பொன் மாளிகைல அவர் இறந்ததால இனிமே அவர் "பொன் மாளிகை துஞ்சிய தேவர்" என்று அன்போடு அழைக்கப்படுவார்" அப்பிடின்னு சொன்னார். 

எல்லாரும் ஆமான்னாங்க.. கூட்டத்துக்கு எப்போ தனிக்கருத்து இருந்துருக்கு? 

(((நம்ம ஊர் தேவர் குரூப்ஸ் இருக்காங்களே,  அவங்க அந்த மன்னர்கள் எல்லாம் தங்களோட சாதின்னு நினைச்சிட்டிருக்காங்க. மன்னன் என்பவன் "தேவர்களின் பிரதிநிதிகள்" அப்பிடின்னு அரசவை பார்ப்பனர்கள் கட்டிய கதை அது. மதுராந்தக தேவரையும், பொன் மாளிகை துஞ்சிய தேவரையும் நம்மாளு தேவர் சாதின்னு முடிவு பண்ணிட்டான். சந்திர வம்சம் மூவேந்தரா பிரிஞ்சு, சேர சோழ பாண்டியரா வாழ்ந்து, காலப்போக்குல கள்ளர், மறவர், அகமுடையர் அப்பிடின்னு முக்குலத்தோரா கன்வெர்ட் ஆயிட்டாங்கன்னு சொல்ற கம்பி கட்டுற கதை நிறைய இருக்கு.)))

"இப்போ அடுத்த மன்னர் யாருன்னு பேசி முடிவெடுக்கணும்"ன்னு சொன்னார் சோமதேவர்.

செட்டப் பண்ணி வச்ச மாதிரி ஒருத்தன் எந்திரிச்சு, "மன்னருக்கு வாரிசு ரெண்டு, அதுல மூத்தவன் ஆதித்தன் இறந்துட்டான், அதனால இளையவன் அருள்மொழி வர்மன் தான் அடுத்த மன்னர் ஆகணும்" அப்பிடின்னான். 

ஆதித்தன் எப்பிடி செத்தான்? நந்தினி தான் அவனைக் கொன்னுட்டான்னு இந்த பொன்னியின் செல்வன்ல படிச்சிட்டு அப்பாவியா சொல்லாதீங்க. இதுவரைக்கும் விடை தெரியாத கேள்வி அது. தான் பதவிக்கு வர்றதுக்காக அருள்மொழியே ஏன் அண்ணனைக் கொன்னிருக்கக் கூடாது? ஒரு டவுட்டு தான். பதவிக்காக அண்ணன் தம்பியை போட்டுத் தள்ளுறது அப்போ சர்வ சாதாரணமா நடக்கும். 

"தம்பி பொறுப்பா.. அருள்மொழி வர்மன் சின்னப் பையன். அவனை நம்பி நாட்டை குடுக்க முடியுமா"ன்னு கேட்டார் இன்னொரு அரண்மனைத் தாத்தா ராஜகேசரி. 

"நாம வழிநடத்துவோம்"ன்னு இழுத்தார் சோமதேவர். 

"நாம சொல்றதை எல்லாம் இந்தக் காலத்து பசங்க கேக்க மாட்டாங்கப்பா.. வேணும்னா ஒன்னு பண்ணுவோம். மூணு பேர் கொண்ட குழு ஒன்னு அமைப்போம். அவங்க அடுத்து யாரு மன்னர்ன்னு ஆலோசனை வழங்கட்டும். நாம இப்போதைக்கு மன்னரை வழி அனுப்புற வேலையைப் பாப்போம்"ன்னு சொன்னார் ராஜகேசரி. 

அதுவும் சரிதான்னு ஒத்துக்கிட்ட எல்லாரும் ஒரு மூணு பேர் கொண்ட குழுவை அமைச்சாங்க.. 

"அடுத்த மன்னர் யாரு, எப்போ பதவி ஏற்குறது, நாள் நட்சத்திரம், எந்தெந்த கோயிலுக்கு எவ்வளவு donation, எந்தெந்த பார்ப்பானுக்கு எவ்வளவு தட்சணை, விழாவுல யாரு யாரு கலந்துக்குறது, விழா நடக்குறப்போ முன்னாடி இருந்து பின்னாடி வரைக்கும் யாரு யாரு எங்கெங்க நிக்குறது இதெல்லாம் நல்லா யோசிச்சு நீங்க சொல்லுங்க.. இப்போ நீங்க கிளம்புங்க"ன்னு மூணு பேர் குழுவை அனுப்பி விட்டுட்டாங்க. 

அடுத்து மன்னருக்கு இறுதி நிகழ்ச்சிகள் செய்ய ஒரு குழு. அவங்களுக்கும் பொறுப்புகள் சொல்லி அனுப்புறாங்க. 

அப்புறம் மிலிட்ரி ஆபீசர்க்கு ஒரு முக்கியமான பொறுப்பு. என்னன்னா, அடுத்து மன்னர் ஆகுற தகுதி யார் யார்க்கு இருக்குதோ அவங்க பாதுகாப்பு ரொம்ப முக்கியம். இல்லன்னா ஆதித்தனுக்கு ஆன கதி அருள்மொழிக்கும் ஆகும். 

எதிரி நாட்டு உளவாளி, சொந்த நாட்டு துரோகி, அரண்மனைலயே எவனாச்சும் சொந்தக்காரன் எவனும் என்னவும் பண்ணுவான். சோத்துல விஷம் வைப்பான். உசுருக்கு உத்தரவாதம் கிடையாது. So, இவனுங்கள சுத்தி ஆபத்துதவிகள் கமாண்டோ படை இருக்கனும். 

"ஆபீசர்.. ஆர்மிய அலெர்ட் பண்ணுங்க. கமாண்டோ படை ரொம்ப விழிப்பா இருக்கனும். யாருக்காச்சும் ஏதாச்சும் ஆனா குடும்பத்துக்கு ஒரு லட்சம் தருவோம்னு ஊக்கப்படுத்துங்க" அப்பிடின்னார் தாத்தா சோமதேவர். 

"ஏம்பெருசு, இந்த ஒரு லட்சத்தை வச்சு நாலு மாசம் கஞ்சி குடிக்க முடியுமா? 2025 வது வருஷம் வரப்போற அரசாங்கம் கூட, குடிமக்கள் யாராச்சும் விபத்துல இறந்தா இதே ஒரு லட்சம் தான் தரப்போகுது. நீரும் அதேமாதிரி கஞ்சத்தனம் பண்றீரே" அப்பிடின்னு சொன்னான் துணை படைத்தலைவர். 

"விடுங்கப்பா.. 'மன்னர் பொது நிவாரண நிதி'யில இருந்து தாராளமாவே செய்யுவோம். போயி ஆக வேண்டியதைப் பாருங்க"ன்னு அனுப்புனாரு தாத்தா ராஜகேசரி. 

"அதெல்லாம் சரி, அடுத்து ஆகவேண்டியதை பாருங்க. இறுதிச் சடங்குல நம்ம பாரம்பரியம் கடைபிடிக்கணும், அது ரொம்ப முக்கியம்." அப்பிடின்னு அடுத்த பாயிண்ட்டுக்கு நகர்ந்தார் இன்னொரு தாத்தா விஷ்ணுகுப்தர். 

"சரி தான். மன்னர்க்கு உரிய மரியாதை செலுத்தணும். ராணியம்மா நம்ம பாரம்பரியத்துக்கு மறுப்பு சொல்ல மாட்டாங்கன்னு நினைக்கிறேன்"னார் சோமதேவர். 
***

பூ, பொட்டு, பட்டாடைகள், நகைகள் எல்லாம் போட்டு சர்வ ராஜ அலங்காரத்தோட அமைதியா உக்காந்திருந்தா ராணி வானவன் மாதேவி. 

மெல்ல நாட்டாமைகள் ராணி கிட்ட வந்தாங்க. சோமதேவர் புரோகிதர் நந்திவர்மனை கூப்பிட்டு "எல்லாம் சரியா நடக்க நீ தான் பொறுப்பு"ன்னார். சரின்னான் அவனும். 

"வேற எதுவும் யோசிக்காத நந்தி.. உனக்கு ஏதாச்சும் சந்தேகம் வந்தா நெருப்பு கிட்ட கேளு. அது தான் பதில் சொல்லும்"ன்னு பீதிய கிளப்புனான் இன்னொரு புரோகிதன் மகாதேவன்.

நந்தி மென்னு முழுங்குனான். இந்த நெருப்பு இருக்கே... அது எல்லாத்தையும் எரிச்சு சுத்தம் பண்ணும். அப்பப்போ உண்மையையும் சேர்த்தே எரிச்சிரும். 

அந்த நீள்வட்ட மர மேஜைக்கு மட்டும் வாய் இருந்தா ஒரு தமிழ்ப் புலவனைக் கூப்பிட்டு இப்பிடி சொல்லியிருக்கும். 

"டே புலவா... 
பொய்யா எழுதுறியே..
இதோ உண்மைய எழுதுடா..
இந்த தாத்தாக்கள பாரு, 
அடுத்த மன்னனை யோசிக்குறான்,
செத்துப்போன மன்னனை யோசிக்குறான், 
ஆனா ராணின்னு ஒருத்தி உயிரோட இருக்காளே,
அவளை அம்போன்னு கைவிட்டுட்டாங்க பாருங்கடா,
இதை எழுதுங்கடா"

- தொடரும்

Chapter 3 – அருள்மொழியின் மௌனம்

காஞ்சிபுரம் பொன் மாளிகைக்கு உள்ளாற வர்றான் 27 வயசு இளவரசன் அருள்மொழி. அரண்மனையோட அமைதியும், எழவு வீட்டு ஏற்பாடுகளும் அவனை என்னவோ பண்ணுது. 

நேரா போயி அப்பாவுக்கு பூ அள்ளி போட்டுட்டு, அந்த நீள்வட்ட மர மேஜைக்கு வர்றான். 

அப்பா இறந்ததுக்கு அவனுக்கு ஆறுதல் சொல்லி, அம்மாவைப் பாத்துட்டு வரச் சொல்லி அனுப்புதுங்க அரண்மனை பெருசுங்க. 
*****

ராணியம்மா வானவன் மாதேவிய பாக்க அவங்க ரூம்க்கு போனான் அருள்மொழி. அம்மாவ இந்த ராஜ அலங்காரத்துல நிறைய தடவை பாத்திருந்தாலும் இன்னிக்கு அவங்கள அப்பிடி பாக்க கஷ்டமா தான் இருக்கு. நேத்து வரைக்கும் ராணியா இருந்தாங்க.. இனி அம்மாவோட கதி என்னன்னு இவனுக்கும் புரியல. 

"வா கண்ணு.. என்ன உன்ர மூஞ்சில களையே இல்ல.. டயர்டா இருக்கியாக்கும்"ன்னாங்க ராணியம்மா. 

"ஆமாம்மா.. குதிரையிலேயே லொங்கு லொங்குன்னு ஓடி வரேன்.. என்ன பண்ண.. இங்க என்னம்மா நடக்குது.. ஆளுக்கு ஒரு பக்கம் ஓடுறாங்க, எதை எதையோ தூக்கிட்டு வாராங்க, மந்திரம் ஓதறாங்க, டொம்மு அடிக்கிறாங்க.. மனசே சரி இல்லம்மா" ன்னு அலுத்துக்கிட்டான் அருள்மொழி. 

ஜன்னல்ல வேடிக்கை பாத்துட்டே பதில் சொன்னா ராணி "இங்க பார்றா கண்ணு.. உன்ர அப்பனுக்கு இறுதி நிகழ்ச்சி நடக்கப் போகுது. நீ சாதாரண ஜனங்களோட சுடுகாட்டுக்கு போய் பாரு.. இறந்தவனோட பிள்ளைகளுக்கு மொட்டை அடிப்பான். எதுக்கு மொட்டை அடிக்கிறாங்கன்னு பிள்ளைகளுக்கும் தெரியாது. மொட்டை அடிச்சவனுக்கும் புரியாது. கேட்டா மரபு, பாரம்பரியம்னு ஏதோ சொல்லுவான். சாதாரண ஜனங்களே அப்பிடின்னா ராஜ குடும்பம்னா கேக்கவா வேணும்... என்னென்ன கொடுமைக்கு ஆளாகணுமோ தெரியல."ன்னு வேதனைப்பட்டா ராணி. 

"அம்மா.. ஆனாலும் இந்த மரபுக்கு உயிர்களையும் பலி குடிக்கணுமா"ன்னு அப்பாவியா கேட்டான் அருள்மொழி. 

"கண்ணு.. நீ போயி இதை நிப்பாட்டு பாப்போம்.. அப்புறம் உன்ர அரண்மனை உனக்கு இல்ல. உனக்கு கீழ இருக்குறவங்க மேல காட்டுறது அதிகாரம் இல்லடா கண்ணு.. உனக்கு மேல இருக்குறாங்க பாரு.. அவங்க கிட்ட தான் அதிகாரத்த காட்டணும்."

"அப்போ நீ தயாராயிட்டியாம்மா"

"வேற என்னடா பண்றது.. நாடாளும் ராஜாவா இருந்தாலும் இவிங்களுக்கு முன்னாடி நாமல்லாம் அடிமைகள் தான். என்ன பண்ண.. எல்லாம் என் தலையெழுத்து. ராஜ குடும்பமா இருந்தாலும் பொம்பளையா மட்டும் பிறக்கக்கூடாதுடா தம்பி"ன்னு புலம்ப ஆரம்பிச்சா ராணி. 

அருள்மொழி பேச முடியாம மௌனமா இருந்தான். 

"பலியாடுகள் கிட்ட அனுமதி கேட்டு யாரும் வெட்டுறதில்லடா கண்ணு.."ன்னு சொன்ன ராணி, "நீ போ.. போயி ஆக வேண்டியத பாரு"ன்னு சொல்லி அனுப்புனா.
***

இறுதி நிகழ்ச்சிக்கு எல்லாம் தயாராகிட்டு வருது. புரோகிதர்கள் எல்லா ஏற்பாடும் பன்றாங்க. மன்னருக்கு மரியாதை செலுத்திட்டு போறாங்க ஒரு பக்கம். 

வெளில வந்த அருள்மொழி horror movie பாத்த மாதிரியே மூஞ்சிய வச்சிட்டு நடக்குறான். இங்க எல்லாரும், எப்பவும் சத்தமா யாரும் பேச மாட்டாங்க. லேசான குரல் தான். பயந்த மாதிரியே தான் எல்லாரும் இருப்பாங்க. வழக்கமானது தான்னாலும் இன்னிக்கு இந்த மௌனம் கொஞ்சம் பயமா தான் இருக்கு. 

வேகமா போய்ட்டுருந்த ஜட்ஜ் அய்யாவ நிப்பாட்டி, தனியா கூட்டிட்டுப் போயி பேச்சு குடுத்தான் அருள்மொழி. 

"ஜட்ஜ் அய்யா.. இங்க என்ன நடக்குது. எனக்கு பயமா இருக்கு. சொல்லுங்க, இதை எல்லாம் நிப்பாட்ட முடியாதா..?"

"இளவரசர் அருள்மொழி, இங்க நடக்குற எதை நீங்க நிப்பாட்டுனாலும், ஏன் நிப்பாட்ட நினைச்சாலும், அது தப்புன்னு சொல்லி உங்களை overtake பண்ண ஒரு கூட்டமே இருக்கு. அவங்களைத் தாண்டி உங்களால ஒன்னும் பண்ணமுடியாது. வேணும்னா try பண்ணிப்பாருங்க."

"தப்பு தான அது"

"அப்போ எது சரின்னு நீங்க சொல்லுங்க. உங்க protocols இருக்கே.. அதுவே முதல்ல தப்பு. அப்புறம்,அடுத்த நாட்டுல போர் தொடுத்து கணக்கில்லாத கொலை பண்ணி, அந்த நாட்டு மக்களை அடிமைப்படுத்தி, அந்த நாட்டுல கொள்ளை அடிச்சு கொண்டுவந்து, வெற்றி வெற்றின்னு சொல்றது மட்டும் நியாயமா? அது தப்பு இல்லையா? 

ஒரு போர்வீரன் அடிச்ச கொள்ளைல பாதி அவனுக்கு, மீதி மன்னனுக்கு அப்பிடின்னு போரை ஊக்குவிச்சு, அதைத் தொழிலாவே ஆக்கி வச்சிருக்கீங்களே.. அது சரியா?

கரிகாலன் கல்லணை கட்டுனது தெரியும். ஆனா, யாரை வச்சு கட்டுனான்? போர்ல தோத்துப்போன நாட்டு மக்களை அடிமையா கூட்டி வந்து அவங்களை வச்சு கட்டுனான். 

ஆப்பிரிக்கால இருந்து வெள்ளையர்கள் கப்பல்ல வந்து கருப்பர்களை அடிமையாக்க போறாங்க. அதுக்கு இன்னும் பல நூற்றாண்டுகள் இருக்கு. அதை உலகமே சொல்லப்போகுது. ஆனா அவங்களுக்கு முன்னாடி நம்ம ஆளுங்க அடிமைத்தனத்தை ஆரம்பிச்சிட்டாங்களே.. இது தப்பு இல்லையா?

இந்த பொன் மாளிகை இருக்கே.. இதுக்கு தேவையான தங்கம் எல்லாம் எங்க இருந்து வந்துச்சு? அதெல்லாம் உங்க அப்பன் வீட்டு சொத்தா? நீங்களே சொல்லுங்க. இது தப்பு இல்லையா?

விளைச்சல்ல மூணுல ஒரு பங்கு வரியா வாங்குறீங்க. ஆனா, பார்ப்பான் என்ன பண்ணிக் கிழிச்சிட்டான்னு அவனுக்கு அதை அள்ளி அள்ளி குடுக்குறீங்க? அவனுக்கு மட்டும் இறையிலி நிலம் எதுக்கு தரணும்? "மன்னன் இறைவனின் பிரதிநிதி" அப்பிடின்னு அவன் சொல்லி உங்களை முட்டாளா ஆக்குறான். நீங்களும் அடிமையாத் தான இருக்கீங்க? அது தப்பு இல்லையா? 

கோவில் கட்டி கட்டி என்ன கண்டீங்க? மக்களை முட்டாளாவே வச்சிருக்கீங்க. ஒரு பள்ளிக்கூடம் நீங்க கட்டி இருக்கீங்களா? இல்ல, இனிமே கட்டப் போறீங்களா? நீங்க மட்டுமில்ல, எந்த மன்னனும் பள்ளிக்கூடம் கட்டுனதா வரலாறு சொல்லாது. இருந்தா தான சொல்லும். 

வடக்கே பாருங்க.. 5ம் நூற்றாண்டுலயே நாளந்தா பல்கலைக்கழகம் ஆரம்பிச்சிட்டான். ஆனா நம்ம ஆளுங்களப் பாருங்க. 

- இமயத்துக்கு படை எடுத்துட்டுப் போனான்
- அங்க கல் எடுத்தான்
- அந்தக் கல்லை தோத்துப்போன மன்னன் தலையில சுமக்க வச்சான்

இப்பிடின்னு வெட்டிப்பெருமை பேசுவான். எந்த தமிழ் மன்னனாச்சும் குறைந்தபட்சம் அவன் பிள்ளையையாச்சும் நாளந்தாக்கு அனுப்பி படிக்க வச்சானா?

இங்க இப்பிடி தான் நடக்குது தம்பி அருள்மொழி. நீங்க நாளைக்கு மன்னராகி, உங்களால முடிஞ்சா எல்லாத்தையும் நிப்பாட்டி காமிங்க. அப்புறம் பேசலாம்."ன்னு சொன்ன ஜட்ஜ் அய்யா கிளம்பிட்டார். 

ஜட்ஜ் அய்யா சொன்ன உண்மைகள் அவனை என்னவோ பண்ணுது. ஆனா அவனால ஒன்னும் பண்ண முடியாது.

கீ குடுத்த பொம்மைகள் மாதிரி இருக்காங்க எல்லாரும். நெருங்கிய நண்பர்கள் கிட்ட சொல்லி அழக்கூட வழி இல்ல. இளவரசர் கூட யாரு பேசனும், யாரு பேசக்கூடாது எல்லாத்துக்கும் protocol இருக்கு. நெருங்கிப் பழகி இளவரசனைக் கொலை பண்ணவும் வாய்ப்பிருக்கே. ராஜகுடும்பம் என்பது ஒரு கூண்டின் பல கிளிகள்.

ஒட்டுமொத்த மௌனமும் போர்ப்பறைய விட அதிக சத்தமா இருக்கு அருள்மொழிக்கு. 

நாளை மன்னனாகி கோவில் கட்டலாம். படை எடுத்துப்போய் பல கொலைகள் செஞ்சு, அடுத்த நாட்டைப் பிடிக்கலாம். இதை எல்லாம் பெருமைன்னு பேசவும் ஒரு கூட்டம் இருக்கு. ஆனா இப்போ கையறு நிலைல நிக்கிறானே, இதுக்கு என்ன தீர்வு? 

- தொடரும்