"ஏதோ ஒரு பாட்டு.. என் பாடல் கேட்டு.. கேட்கும் இசை எல்லாம்..."
வைகை எக்ஸ்பிரஸ்சின் வேகமும், தடக் தடக் தாலாட்டும் கண்ணை சொக்க வைக்க, எப்போது தூங்கினேன் என்றே தெரியவில்லை. தூங்கியும் தூங்காத அந்த அரைத் தூக்க கனவில் அந்தப் பாடலும், ஒரு இசையும் ஒலித்தது.
ராஜபார்ட் ரங்கதுரை படம் பார்த்திருக்கிறீர்களா? டேபிள் டென்னிஸ் மட்டையை போல இரண்டை விரலிடுக்கில் வைத்துத் தட்டி "அம்மம்மா.. தம்பி என்று நம்பி அவர் உன்னை வளர்த்தார்.. அவர் உனக்காக வாழ்ந்த உள்ளம் அல்லவா.." என்று சிறுவயது சிவாஜி உருக்கமாக பாடி ரயிலில் பிச்சை கேட்பாரே.. அந்த டேபிள் டென்னிஸ் இசை தான் இப்போது ரயில் பயண கனவில் ஒலித்தது.
சிவாஜி நடிப்பின் இமயம் என்பதில் எனக்கு உடன்பாடில்லை.. அவர் உருப்படியாக நடித்ததே சில படங்கள் தான். மூன்று தெய்வங்கள், தங்கப்பதக்கம், நெஞ்சிருக்கும் வரை, சவாலே சமாளி, ராஜபார்ட் ரங்கதுரை இப்படி விரல்விட்டு எண்ணிவிடலாம். மற்றவை எல்லாம் சொதப்பல்கள்.
ராஜபார்ட்டில் அதே பாடலை, தன் தம்பி ஸ்ரீகாந்த் பழைய வாழ்க்கையை மறந்து, வளர்த்த தன்னை மறந்து பணக்கார வீட்டில் செட்டில் ஆன சுயநலத்தையும், மனித உறவுகளை விட பணத்திற்கு மதிப்பு தரும் போலித்தனத்தையும் பாடி தன் நடிப்பால் தோலுரிப்பார் சிவாஜி. அதைக் கேட்டு தம்பி ஸ்ரீகாந்த் குற்ற உணர்வால் தலை குனிவார். TMS ன் அந்தக்குரல் சிவாஜியின் நடிப்பிற்கு மெருகேற்றும்.
கடந்த தலைமுறை சினிமாவின் தலைசிறந்த வில்லன் ஸ்ரீகாந்த். ராஜபார்ட்டில் சிவாஜிக்கு பிழைப்புவாதி தம்பியாகவும், தங்கப்பதக்கத்தில் அதே சிவாஜிக்கு தறுதலை மகனாகவும் வாழ்ந்திருப்பார். இரண்டு படங்களிலும் சிவாஜிக்கும், ஸ்ரீகாந்த்துக்கும் நடிப்பு போட்டியே நடக்கும்.
காசே தான் கடவுளடா படத்தில் காமெடியிலும் கலக்கியிருப்பார். இப்போதைய நடிகர்கள் ஸ்ரீகாந்திடம் கற்றுக்கொள்ள நிறையவே இருக்கிறது.
*****
"சார்.. கொஞ்சம் தள்ளிக்கோங்க.." என்று என் தோளில் தட்டியப்படி வழி கேட்டார் பக்கத்து சீட் நண்பர். தூக்கம் கலைந்து திடுக்கென்று கண் விழித்து பார்த்தால் எனக்கு முன் பத்து சீட் தள்ளி உண்மையிலேயே ஒரு பெண் டேபிள் டென்னிசை ரிதம் தவறாமல் தட்டியபடி பாடிக் கொண்டிருந்தாள். ஆக கனவில்லை.
பார்க்க இந்தி பேசும் வடக்கு மாநிலத்தை சேர்ந்தவள் போல தெரிந்தாள். ஆனால் தமிழில் அழகாக "ஏதோ ஒரு பாட்டு..." பாடிக்கொண்டிருந்தாள். அடுத்து அதே பாட்டை, அதே மெட்டில் இந்தியில் பாடினாள். இந்திக்காரி தான். விதி அவளை தமிழ்நாட்டிற்கு விரட்டி அடித்திருக்கிறது. சிவாஜி நிழல். இவள் நிஜம்.
ரிதம் தவறாமல் வாசித்தும், பாடியும் வந்த அவள் யாரிடமும் பிச்சை கேட்கவில்லை. பயணிகள் கொடுத்ததை அவள் மகள் போல.. ஒரு சிறுமி வாங்கிக் கொண்டிருந்தாள்.
"சிறுமியை பிச்சை எடுக்க வைக்கிறாங்க பாருங்க" என்றார் பின் சீட் நண்பர். அது அவள் பிரச்சினை. அவள் பிச்சை எடுத்தால் அதற்கு யார் காரணம்? எல்லாம் இருந்தால் அவள் ஏன் அடுத்த மாநிலத்தில் ரயிலில் பாடிககொண்டிருக்கப் போகிறாள்? அவள் என்ன சூப்பர் சிங்கரா?
பிச்சைக்காரர்களை ஊக்குவிக்க கூடாது. ஆனால் இவள் அவளது திறமையை வெளிக்காட்டி சன்மானம் பெறுகிறாள். நடிகர்களும் அதைத்தானே செய்கிறார்கள். கணக்கு பார்த்தால், சினிமா டிக்கெட் கூட நாம் நடிகர்களுக்கு தரும் பிச்சை தானே.
டேபிள் டென்னிஸ் ஒலி என் காதுகளை அருகில் கடந்த அந்தக் கணத்தில், பாக்கெட்டில் இருந்து 50 ரூபாயை எடுத்து அந்த சிறுமியிடம் நீட்டினேன். 50ஐ பார்த்த இந்திக்காரி பாட்டையும், டேபிள் டென்னிஸ் ரிதத்தையும் நிறுத்தாமல் சற்று குனிந்து சைகையால் நன்றி சொன்னாள். எனக்கு தான் கூச்சமாக இருந்தது.
அந்த டேபிள் டென்னிஸ் மட்டையொலி, சுயநல மனிதர்களின் போலித்தனங்களை தோலுரித்தபடியே கடந்து சென்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக