ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2024

ரோசி வளர்ந்துவிட்டாள் - சிறுகதை

திடீரென்று என் லுங்கியின் கீழ முனையை யாரோ பிடித்து கீழ்நோக்கி இழுப்பதை உணர்ந்து, சட்டென்று குனிந்து பார்த்தேன். அட, நம்ம சோலையம்மா.

சோலையம்மா "தெரு நாய்" என்று கேலியாக அழைக்கப்படும் பெண் நாட்டு நாய். தினமும் வரும் டீக்கடையில் டீ குடித்தபின் தம் அடிக்க ஒதுங்கும் ஒரு இடத்தின் மாடிப்படியின் கீழே உள்ள குப்பைகளுக்கு மத்தியில், குட்டிகளை ஈன்றிருந்தாள் சோலையம்மா.

நான் முதன்முதல் பார்த்தபோது ஒரே ஒரு குட்டியை தான் பார்த்தேன். அங்கு தினமும் வந்த கட்டிடத் தொழிலாளர் நண்பர்களிடம் விசாரித்தபோது, நாலைந்து குட்டிகள் பிறந்து மற்றவை இறந்து விட்டதாக அங்கிருந்தவர்கள் சொன்னார்கள். 

அப்போது சோலையம்மா மெலிந்து நோஞ்சானாகக் கிடந்தாள். மற்ற குட்டிகள் இறந்துவிட, இருக்கும் ஒரு குட்டியையாவது காப்பாற்ற விரும்பிய சோலையம்மா, உணவு தேடக் கூட செல்லாமல் குட்டியைக் காத்து வந்தாள். விளைவாக மெலிந்து பால் வற்றிப்போய் கிடந்தாள். குட்டி பசியால் அனத்திக்கொண்டே இருந்தது. 

அன்று முதல்முறை சோலையம்மாவுக்கு பிஸ்கட் பாக்கெட் வாங்கித் தந்ததை மறக்க முடியாது. பாக்கெட்டை பிரிக்கும்முன் கையைக் கவ்வினாள். அவ்வளவு பசி. காலை பிஸ்கட்டும், மாலை பரோட்டாவும் அவள் உடலைத் தேற்ற,  குட்டி பால் குடித்து அவளோடு விளையாடத் துவங்கியது. 

நான் உணவிடுவதைக் கண்ட மற்ற நண்பர்களும் கிடைத்ததை வாங்கி சோலையம்மாவுக்கு தந்தார்கள். குட்டியை விட்டு பிரியாமல் இருந்த சோலையம்மா, நாளைடைவில் நாங்கள் இருக்கும் தைரியத்தில் குட்டியை எங்களிடம் விட்டு விட்டு, தனியே வெளியில் சென்று ரிலாக்ஸ் செய்துவிட்டு வர ஆரம்பித்தது. நண்பர்கள் அதற்கு சோலையம்மா என்று பெயரிட, நான் குட்டியின் பாலினம் கண்டுபிடித்து ரோசி என்று பெயரிட்டேன்.

செவலை நிறக் குட்டி அது. அதோடு இரு கண்களின் ஓரங்களில் வெள்ளை மயிரும் சேர்ந்து குட்டி அழகாகக் காட்சியளித்தது. 
************

ஆனால் இன்று என்ன ஆனதோ தெரியவில்லை, சோலையம்மா என் லுங்கியைப் பிடித்து இழுத்து அடித் தொண்டையில் கீச்சுக்குரல் எழுப்பினாள். இந்த கீச்சுக்குரலின் அர்த்தம் எனக்கு புரிந்தது. ஏதோ விபரீதம் நடந்திருக்கிறது. "ரோசி எங்க சோலையம்மா" என்றேன். உடனே என் லுங்கியைப் பிடித்து மறுபடியும் இழுத்தாள் சோலையம்மா. 

புரிந்துகொண்டு மாடிப்படியின் கீழேயுள்ள குப்பைக்கு அருகில் சென்றேன். பகீர் என்றது. அங்கே ரோசியை காணவில்லை. குட்டி திடீரென்று காணாமல் போனதால் restless ஆக இருந்தாள் சோலையம்மா. அதற்குள் கட்டிடத் தொழிலாளர் நண்பர்களும் வந்து சேர, "என்ன சோலையம்மா, பிள்ளைய ஒழுங்கா பாத்துக்க வேணாமா?" என்று சொல்லி தலையைத் தடவி ஆறுதல் சொன்னார்கள். 

ஆனால் சோலையம்மா ஆறுதல் அடையவில்லை. வேகமாக எதிரில் உள்ள புதரை நோக்கி ஓடினாள். பின் அதே வேகத்தில் என்னருகே வந்து மீண்டும் லுங்கியை இழுத்தாள். மீண்டும் வேகமாக எதிரில் உள்ள புதரை நோக்கி ஓடினாள். பின் அதே வேகத்தில் என்னருகே வந்து லுங்கியை இழுத்தாள். 

புரிந்துகொண்டேன்... அந்தப் புதரில் குட்டியை தேடச் சொல்கிறாள். அந்த நண்பர்கள் உதவியோடு புதரில் இறங்கித் தேடினோம். ம்ஹூம். ஒன்றும் பிரயோஜனம் இல்லை. குட்டியை காணவில்லை. ஆளாளுக்கு சோலையம்மாவுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு பிஸ்கட் வாங்கி தந்தோம். எப்போதும் ஆர்வமாக தின்னும் அவள் இப்பொழுது கண்டுகொள்ளவே இல்லை. 

மாலை மீண்டும் வந்து பார்த்தபோது சோலையம்மா தனியாகக் கிடந்தாள். மனம் வலித்தது. நான் வாங்கி வந்த பரோட்டாவில் அவள் மனம் லயிக்கவில்லை. 

மறுநாள் காலையில் வந்து பார்த்தபோது, சோலையம்மா அங்கு இல்லை. மனம் மிகவும் வலித்தது. இந்தக் குப்பை மேட்டில் தான் தினமும் சோலையம்மாவுக்கு பிஸ்கட்டும் பரோட்டாவும் வாங்கித் தந்தேன். ரோசி கீச்சுக் குரலோடு என்னோடு விளையாடுவாள். அந்தப் பிஞ்சுக் கால்களை என் விரல் மீது போட்டு, மல்லாக்க விழுந்து என் விரலைக் கடிப்பாள். அந்தக் குட்டி வாலை ஆட்டிக்கொண்டே இருப்பாள். எல்லாம் இழந்தது போல் இருந்தது. 

அதன் பிறகு அங்கு வந்த போதெல்லாம் சோலையம்மாவும், ரோசியும் நினைவுக்கு வருவார்கள். ஆனாலும் சில மாதங்களில் இருவரையும் எல்லோரும் மறந்து விட்டோம். வேறென்ன செய்ய?
***********

ஒருநாள் காலை வழக்கம்போல் டீ குடித்துவிட்டு, மாடிப்படி அருகில் வந்து தம்மைப் பற்றவைத்து அமர்ந்தேன். திடீரென்று ஒரு நாயின் "யீவ்.." என்ற அடித்தொண்டை கீச்சுகுரல் கேட்டது. இது நாயின் மகிழ்ச்சிக் குரல். 

குரல் வந்த திசையை நோக்கிய எனக்கு ஆச்சர்யம்.. அட... சோலையம்மா. அவளருகில் ஒரு ஆறு மாத குட்டி ஒன்றும் நின்றது. எழுந்து "சோலையம்மா..." என்று அழைத்தபடி அவளை நோக்கி நான் நடக்க, அவள் வாலை ஆட்டியபடியே என்னருகே ஓடி வந்து என் மேல் பாய்ந்தாள். கீழே குனிந்து அவள் தலையைத் தடவிக் கொடுத்து "எங்க போன சோலையம்மா..." என்றேன். பத்து நிமிடங்கள் என் மேலே பாய்ந்து, என் முகத்தை நக்கி பாச மழை பொழிந்து விட்டாள் சோலையம்மா. 

சோலையம்மாவின் உடல் எடை கூடி இருந்தது. முகத்தில் பழைய சோர்வு இல்லை, உற்சாகமாக இருந்தாள். அந்த ஆறு மாத குட்டியை நோக்கி லேசான குரலில் சோலையம்மா குரைக்க, அந்தக் குட்டி என்னை நோக்கி ஓடி வந்தது. குட்டியின் செவலை நிறமும், இரு கண்களின் அருகிலும் இருந்த வெள்ளை மயிரும் எனக்கு குட்டி யார் என்பதை உணர்த்தியது. 

"ஏ.. ரோசி.." என்றவாறு குட்டியின் தலையின் மீது நான் கையை வைக்க, வாலை வேகமாக ஆட்டிக்கொண்டே மல்லாக்க விழுந்து, முன்பு போல் என் விரலைக் கடிக்க ஆரம்பித்தாள் ரோசி. மகிழ்ச்சியாக இருந்தது. ரோசி 6 மாதக் குட்டியாக கம்பீரமாக காட்சியளித்தாள்.
************

ரோசியை யாரோ வளர்க்க தூக்கிப் போயிருக்கிறார்கள் என்று கட்டிடத் தொழிலாளர் நண்பர்கள் மூலமாக பிறகு நான் அறிந்துகொண்டேன். சோலையம்மா பிற்பாடு ரோசியைத் தேடி ஒரு வீட்டில் கண்டடைந்தாள். பின் அந்த வீட்டார் அவளுக்கும் அடைக்கலம் அளித்திருக்கிறார்கள். 

அதன் பிறகு, சோலையம்மா இருக்கும் தெரு வழியாக நான் செல்ல நேர்ந்தால் அவளை சந்திக்கத் தவறுவதில்லை. 

ரோசி தன் தாயைப் பிரிந்து, தன் வயதையொத்த நண்பர் நண்பிகளோடு சேர்ந்து இரை தேடவும், விளையாடவும் செல்கிறாள்.

ரோசி... வளர்ந்துவிட்டாள். 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக