தாராளவாதம் எதிர்ப்போம் - 1
- சங்கர் சீனிவாசன்
******************
"கட்சிக்குள்ளும், வெளியில் பிற புரட்சிகர இயக்கங்களோடும் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் உறுதி செய்யும் ஒரே ஆயுதம் கருத்தியல் போராட்டம் மட்டுமே. ஒவ்வொரு கம்யூனிஸ்ட் புரட்சியாளரும் இந்த ஆயுதத்தை கையில் எடுத்தாக வேண்டும்.
ஆனால், தாராளவாதம் வெவ்வேறு வகையில் தலைதூக்கி, கருத்தியல் போராட்டத்தை மறுத்து, நிலத்தில் தலை நுழைத்த நெருப்புக்கோழி போன்ற ஒரு மனோபாவத்தை வளர்த்து, அரசியல் சீரழிவை ஊட்டி வளர்க்கிறது."
- மாவோ
"தாராளவாதம் எதிர்ப்போம்" கட்டுரை
7 செப்டம்பர் 1937
****************
அங்கு சங்கு வெங்கு
அங்கு: என்ன சங்கு தோழர்.. நேத்து கமிட்டி கூட்டத்துல தோழர் வெங்கு செஞ்ச தவறுகள் எல்லாம் சொல்லி மாவட்ட செயலாளர் கண்டிச்சப்போ, மத்த உறுப்பினர்களும் கண்டிச்சாங்க. வெங்குக்கு ஒரு வாய்ப்பு குடுத்து தவறுகள் எல்லாம் சரிசெய்ய சொன்னாங்க.. ஆனா நீங்க மட்டும் பிடி குடுக்காமலே பேசுனீங்களே.. என்ன விஷயம் தோழர்?
சங்கு: அது ஒண்ணுமில்ல தோழர்.. என்னதான் இருந்தாலும் அந்த வெங்கு என் கூட படிச்சவர், எங்க ஊர்க்காரர், பக்கத்து வீடு வேற.. நாளை பின்ன மூஞ்சில முழிக்கணும் இல்லையா? எதுக்கு வம்பு?
அங்கு: அதுக்காக பிரச்சினைகளை கவனிக்கணும் இல்லையா தோழர்.. தவறுகளை கண்டிக்காம விட்டா அது அமைப்பை பாதிக்கும். வெங்குவும் தான்னோட தவறை உணர மாட்டார் இல்லையா.. அதனால யாரா இருந்தாலும் கண்டிக்க வேண்டியதை கண்டிக்கணும் தோழர்
சங்கு: (மனதுக்குள்) ரொம்ப அட்வைஸ் பண்றானே.. இந்த அங்குவுக்கும் சீக்கிரமா ஒரு பாயாசத்த போட்டுற வேண்டியது தான்.
***********
மேற்படி உரையாடலில் நாம் தெரிந்துகொள்ள வேண்டியது, தவறு செய்தவரை விட அதற்கு துணை போனவரே அதிக குற்றம் செய்தவர் ஆகிறார்.
தவறு செய்யாத மனிதர் யாரும் இல்லை. ஆனால் அதை நேர்மறையாக எடுத்துச் சொல்லி உணர்த்தும்போது, மனதுக்குள் அதை பரிசீலனை செய்து, தவறை உணர்ந்து இனி அந்தத் தவறை செய்ய மாட்டேன் என்று உறுதி எடுக்க வேண்டும். அடுத்ததாக வெளிப்படையாக சுய விமர்சனம் செய்துகொள்ள வேண்டும்.
மாறாக, தன் தவறை மறைக்க பிறர் செய்த தவறுகளை உதாரணம் காட்டுவதும் தவறு. தனக்கு நெருக்கமான தோழர்களிடம் தன் தவறுக்கு ஆதரவு தேடுவதும் தவறு.
இந்தப்போக்கு காலப்போக்கில் முதலாளித்துவக் கட்சி போல், தனக்கான ஒரு ஆதரவு வட்டத்தை உருவாக்கும். பிறகு தானும், தனது ஆதரவு வட்டமும் இல்லாமல் கட்சி வேலை எதுவும் நடக்காது என்று கட்சியின் தலைமைக்கே மறைமுகமாக சவால் விடும். உச்சகட்டமாக கட்சியை உடைத்து, தன் ஆதரவு வட்டத்தோடு வெளியேறி எதிர்ப்புரட்சிக்கு சேவை செய்யும். காலப்போக்கில் சமரசங்கள் பல செய்து எதிரிகளோடு உறவாடும்.
எனவே, தவறுகளை ஒத்துக்கொள்ளும் துணிச்சலையும், அதை சரிசெய்யும் பக்குவத்தையும், வெளிப்படையாக சுய விமர்சனம் செய்யும் புரட்சிகர நேர்மையையும் ஒவ்வொரு கட்சி உறுப்பினரும் வளர்த்துக்கொள்ள வேண்டும்.
மறுபுறம், தவறு செய்தவர் தனது நண்பர், உறவினர், ஊர்க்காரர் என யாராக இருந்தாலும் அதைப்பற்றி கண்டுகொள்ளாமல் தவறுகளை கண்டிக்க வேண்டும். அவர் தனது தவறுகளை சரிசெய்துகொள்ள வாய்ப்பை அளிக்கவேண்டும்.
இதையே வள்ளுவர் வேறு வார்த்தைகளில் கூறுகிறார் :
நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்செனறு இடித்தற் பொருட்டு.
"நட்பு என்பது சிரித்து மகிழ்வதற்காக மட்டுமல்ல; நண்பர்கள் நல்வழி தவறிச் செல்லும்பொழுது இடித்துரைத்துத் திருத்துவதற்காகும்" என்று வள்ளுவர் கூறுகிறார்.
**********
*ஒரு தோழர் தவறு செய்வது தெரிந்தும், அவர் தனது நண்பர் நெருக்கமானவர் அல்லது உறவினர் என்பதற்காக தவறை விவாதிக்காமல் விடுவது, அந்த தோழரையும் பாதிக்கும். கட்சியையும் பாதிக்கும். இது தாராளவாதத்தின் முதல் வகை."
- மாவோ
***************************
தொடரும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக