மகாபாரதம்
2ம் பாகம் 26-27 - நாடு இரண்டாகிறது
பாண்டவர்கள் பக்கத்து ஊர் கரகாட்டம் பாக்கப் போன நேரத்துல அவங்கள போட்டுத்தள்ள துரியோதனன் முயற்சி பண்ணான். அதுல இருந்து தப்பிச்சு காட்டுக்குப் போறாங்க பாண்டவர்கள். காட்டுல இடும்பனைப் போட்டுத் தள்ளுன பீமன், அவன் தங்கச்சி இடும்பிய கல்யாணம் பண்ணி கடோத்கஜனைப் பிள்ளையாப் பெத்துட்டு, அவங்க ரெண்டு பேரையும் காட்டுல அம்போன்னு விட்டுட்டு ஏகசக்கர நகரத்துக்குப் போறாங்க பாண்டவர்களும், குந்தியம்மாவும்.
ஊர் எல்லையில குழிதோண்டி கையில இருந்த கத்தி கபடா எல்லாத்தையும் மறைச்சி வச்சிட்டு, பார்ப்பான் மாதிரி வேஷம் போட்டு ஊருக்குள்ள நுழையுறாங்க.
அங்க பகாசுரன்னு ஒரு அசுரன் ஒருநாளைக்கு ஏழு வண்டி சோறும்(?), சைட் டிஷ்ஷா ஒரு மனுசனயும் அப்பளம் மாதிரி கடிச்சித் திம்பானாம். பீமன் அவனோட சண்டைபோட்டு அவனையும் போட்டுத் தள்ளிட்டு, அங்க இருந்து பாஞ்சால நாட்டுக்குப் போறாங்க.
(இந்த பீமன் மொத்தம் எத்தனை பேரைப் போட்டுத் தள்ளுறான்னு ஒரு நோட்டுல தனியா எழுதி வச்சிக்கங்க. முதல்ல இடும்பன், இப்ப பகாசுரன், இன்னும் வரும்.)
*********
பாஞ்சால நாட்டுல குந்தியம்மாவ ஒரு இடத்துல தங்கவச்ச பாண்டவர்கள், அரண்மனையில நடக்குற சுயம்வரத்துக்குப் போறாங்க. நோ.. சுயம்வரத்துல கலந்துக்க இல்ல. பசிக்குது. சுயம்வரம் முடிஞ்சி சோறு போட்டா நாமளும் தின்னுட்டு அம்மாக்கும் வாங்கிட்டு வருவோம்னு போறானுங்க. நிலைமையப் பாத்தீங்களா? இதே பாஞ்சால நாட்டு மன்னன் துருபதனைத் தூக்கிட்டுப் போயி, துரோணனுக்கு குருதட்சணையாக் குடுத்தவிங்க இப்போ சோத்துக்கு அங்கபோயி மாறுவேசத்துல நிக்குறானுங்க.
அரண்மனைல பாஞ்சாலிக்கு சுயம்வரம் ஏற்பாடு பண்ணி எல்லா நாட்டு இளவரசன்களுக்கும் அழைப்புக் குடுக்குறான் துருபதன். அதுக்காக துரியோதனன், கர்ணன் துவங்கி வேலைவெட்டி இல்லாத எல்லாப் பயலுகளும் வந்திருக்கானுக. பிராமண வேஷத்துல இருந்த இந்த குரூப்பையும் அவிங்க கவனிக்கல. ஆனா அவிங்கள இவிங்க கவனிச்சி வைக்கிறானுங்க.
"சுயம்வர நாட்டாமையா பங்கெடுக்கணும்"னு துருபதன் ஓலை அனுப்புனதால கரெக்டா வந்துட்டான் நம்ம கிருஷ்ணன். (ஏய்யா கிருஷ்ணா, first half முடிஞ்சி பாப்கார்ன் திங்குற வரைக்கும் நீ வரலயே..)
சுயம்வரம் ஸ்டார்ட் ஆகுது. வில்லைக் கையால தூக்கணும். அப்புறம் மேலே கயிறு கட்டி வட்டமா சுத்திட்டிருக்குற ஒரு மீனை, கீழே இருக்குற தண்ணில பாத்துக்கிட்டே மேல்நோக்கி அம்படிக்கிற பய எவனோ, அவனுக்கு பாஞ்சாலி மாலை போடுவா. இதுதான் கன்டிசன். (கல்யாணம் பண்றதுக்கும் மீன் மேல அம்படிக்கிறதுக்கும் என்ன சம்பந்தம்?)
போட்டிக்கு வந்த அரசர்கள், இளவரசர்கள் யாராலயும் அந்த வில்லையே தூக்கமுடியல. (ராமாயண ஞாபகம் வருதா? Same screenplay)
துரியோதனனாலயும் தூக்கமுடியாத வில்லை கர்ணன் தூக்குறான். அவன் அப்பிடி தூக்கி அம்பை மாட்டுனவுடனே கிராஸ் ஆகுறா பாஞ்சாலி. "கர்ணா, சூத்திரனான நீ அம்படிச்சாலும் நான் உன்னைக் கல்யாணம் பண்ண மாட்டேன்"னு சொல்றா. காரணம் பாஞ்சாலி ஏற்கனவே அர்ஜுனன் மேல ஒரு கண்ணு வச்சிட்டதால, ஒரு காரணம் சொல்லி கர்ணனை விரட்டி விடுறா.
கர்ணன் அவமானத்துல வாய மூடிட்டிருக்குற கேப்புல சரியா என்ட்ரி ஆகுறான் பார்ப்பான் வேசத்துல இருந்த அர்ஜுனன். "ஏன்டா நீ சோத்துக்குத் தான வந்த.. உன் சாதி? உன் குலம்? உன் கோத்திரம்?"ன்னு ஒரு நாட்டாமையும் இப்ப கேக்கல. ஏன்னா பார்ப்பன வேஷம் பக்காவா பொருந்துது.
வில்லை எடுத்து சரியா அம்படிக்கிறான் அர்ஜுனன். பிராமண வேஷம் போட்டதால அவன் பிராமணன் தான்னு நம்புறாளாம் பாஞ்சாலி. உடனே மாலையப் போட்டுட்டா.
அர்ஜுனனுக்கு பாஞ்சாலிய கல்யாணம் பண்ணி அனுப்பி வைக்கிறான் துருபதன். மணமக்கள் அர்ஜுனன்-பாஞ்சாலி ரெண்டு பேரும், பாண்டவர்ல நாலுபேரும் ஒண்ணா குந்தியம்மா தங்கியிருந்த வீட்டுக்கு வராங்க. வெளில நின்னுக்கிட்டே "அம்மா, நாங்க என்ன கொண்டு வந்திருக்கோம் பாரு"ன்னு கூப்புடுறானுங்க.
என்ன பெருசா கொண்டு வந்திருக்கப் போறானுங்க. சுயம்வரத்துக்கு சோத்துக்குத் தான போனானுங்க. தின்னுட்டு நமக்கும் கொண்டு வந்திருப்பாங்க. பசியில்லன்னு நினைச்சிட்டு "நீங்களே பிரிச்சி எடுத்துக்கங்கப்பா"ன்னு சொல்லிட்டே வெளில வந்தவ அப்பதான் யாருன்னு பாக்குறா.
இத வெளில மறைஞ்சிருந்து பார்த்த பாஞ்சாலியோட அண்ணன் திஷ்டத்துய்மன் (பேரு வாயில நுழையுதா பாரு) அவங்கப்பன் துருபதன்ட்ட போயி "நைனா, பிராமண வேஷம் போட்டவிங்க தான் பாண்டவர்கள். கன்பர்ம் பண்ணிட்டேன்"னு சொல்றான். எப்பிடியோ நம்ம பிளான்படி யாகத்துல ஒரு குமரிப்பொண்ணை செஞ்சி அதுக்கு பாஞ்சாலின்னு பேரும் வச்சி, நாம நெனச்ச மாதிரியே பாண்டவர்ல ஒருத்தன் தலையிலயும் கட்டியாச்சு. இனி இவிங்களால எந்த இம்சையும் இல்லைன்னு யோசிச்ச துருபதன், பாண்டவர்களை அரண்மனைக்கு வரவைக்கிறான்.
**************
பாண்டவர்ஸ் எல்லாரும் பாஞ்சாலியையும் கூட்டிட்டு அரண்மனைக்குப் போறாங்க. அங்க துருபதன் கிட்ட ஒரு கோரிக்கை வைக்கிறான் அர்ஜுனன் "மாமு, நாங்களாம் தாயைக் காத்த தனயங்க. தாய் சொல்லைத் தட்டாதவிங்க. எங்கம்மா அஞ்சு பேரையும் பிரிச்சி எடுத்துக்கச் சொன்னதால, நாங்க அஞ்சு பேரும் சேர்ந்து பாஞ்சாலிய கல்யாணம் பண்ணலாம்னு இருக்கோம்"னு சொல்றான்.
என்னடா குடும்பம்டா இது? அஞ்சு பயலுக சேர்ந்து ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணப் போறோம்னு கொஞ்சம் கூடக் கூச்சமில்லாம சொல்றானுகன்னு யோசிச்ச துருபதன், இதுக்கு ஒத்துக்க முடியாதுன்னு சொல்றான்.
என்னடா கல்யாணப் பேச்சு அடிபடுது. இன்னும் இந்த வியாசனைக் காணோமேன்னு நினைக்கிற நேரத்துல கரெக்டா அவனும் வந்துட்டான்.
வந்தவன் நேரா துருபதன்ட்ட போயி "துருபதா, பாஞ்சாலி போன ஜென்மத்துல சிவன்ட்ட அஞ்சு வித திறமைகள் உள்ள கணவன் வேணும்னு வரம் கேட்டா. அதுக்கு சிவன், வாய்ப்பில்லம்மா, நா என்ன ஸ்பைடர்மேனையா கட்டிக்கச் சொல்வமுடியும்? ஒவ்வொருத்தனுக்கும் அது இருந்தா இது இல்ல. இது இருந்தா அது இல்ல. அதனால உனக்கு 5 திறமைகள் உள்ள 5 கணவர்கள் அடுத்த ஜென்மத்துல கிடைப்பாங்கன்னு சிவன் வரம் குடுத்துட்டான். அதனால இந்த ஜென்மத்துல கரெக்டாத்தான் வந்திருக்காய்ங்க. கட்டி வை"ன்னு சொல்றான் வியாசன். (ஒவ்வொன்னுக்கும் ஒரு லாஜிக்கு.)
வேற வழியில்லாம பாண்டவர் அஞ்சு பேருக்கும் பாஞ்சாலிய கட்டி வைக்கிறான் துருபதன். வந்த விசயம் முடிஞ்சதும் வியாசன் கிளம்புறான். கல்யாணம் பண்ணிவச்ச கையோட அஸ்தினாபுரத்துக்கு தகவல் தரான் துருபதன்.
*************
அஸ்தினாபுரம்
குந்தியம்மாவும், பாண்டவரும் உயிரோட இருக்குற சேதியும், பாண்டவருக்குக் கல்யாணமான சேதியும் தெரிஞ்ச உடனே அவங்கள கூட்டிட்டு வர விதுரனை அனுப்புன பீஷ்மன் நேரா திருதராட்டிரன்ட்ட போறான்.
"பாத்தியாப்பா, உன் பசங்க பாண்டவர்கள போட்டுத் தள்ள அடியாள்லாம் அனுப்பிருக்கானுங்க. பாண்டவர்களும் உம் பசங்க இம்சை தாங்கமுடியாம ஊர் ஊராப் போயி இப்ப பாஞ்சால நாட்டுல இருக்காங்க. இவ்ளோ நடந்தப்புறம் இனி நீங்க ரெண்டுபேரும் ஒன்னா இருக்கமுடியாது. பாண்டவர்கள் அஸ்தினாபுரம் வந்தவுடனே, பேசாம நாட்டை ரெண்டாப் பிரிச்சி பாண்டவருக்கு ஒரு பாகத்தைக் குடுத்து அனுப்பிவிடு. அதை அவங்க ஆளட்டும். இன்னொரு பாகத்தை நீயும், உனக்கப்புறம் உம் பசங்க கௌரவர்களும் ஆளட்டும்"ன்னு சொல்றான். திருதராட்டிரனுக்கும் இது நல்ல ஐடியாவாத் தோணுது. சரிங்குறான்.
பாண்டவர் & கோ அஸ்தினாபுரம் அரண்மனைக்கு வந்தவுடனே தர்மனைக் கூப்பிட்டான் திருதராட்டிரன். "குருட்சேத்திர நாட்டோட ஆட்சில உங்களுக்கும் உரிமையிருக்கு. எங்களுக்கும் உரிமையிருக்கு. உங்க தாத்தா பீஷ்மன் சொன்னபடி நாட்டை ரெண்டா பிரிப்போம். அஸ்தினாபுரத்தை எனக்கடுத்து துரியோதனன் ஆளுவான். காண்டவப் பிரஸ்தம் பகுதியை நீ எடுத்துக்கோ. மன்னனா ஆண்டுக்கோ"ன்னு சொல்றான். எல்லாரும் இதை சுமூகமா ஏத்துக்குறதால, குருட்சேத்திரத்தை ரெண்டாப் பிரிச்சி காண்டவப் பிரஸ்தம் பகுதியை பாண்டவர்ஸ்க்கு குடுத்து அனுப்பிவிடுறான் திருதராட்டிரன்.
**************
மகாபாரதம் கூறும் வாழ்க்கைத் தத்துவங்கள்(?)
கௌதம முனிவனின் மனைவி அகலிகை மீது ஆசைகொண்ட இந்திரன், கௌதமன் போல் வேடமிட்டு அவளோடு கூடுகிறான். விசயம் தெரிந்த கௌதம முனி இந்திரனையும், அகலிகையையும் சபிக்கிறான்.
(புதுமைப்பித்தன் இதை "அகல்யை" எனும் சிறுகதையாக எழுதியிருப்பார். அதில் கௌதமன் அகலிகையை சபிக்காமல் மன்னிப்பான். காரணம் தவறுக்குக் காரணம் இந்திரன் தான் என்பதால். அதேபோல் இந்திரனையும் சபிக்காமல் "அப்பா இந்திரா, பூலோகத்துப் பெண்களையாவது விட்டு வையப்பா" என்று திட்டி விரட்டி விடுவான் கௌதமன்.)
இந்திரன் மனைவி இந்திராணி விஷ்ணு மீது ஆசைகொள்ள, "நான் கிருஷ்ணனாக அவதரிக்கிறேன். நீ ராதையாக வா" என்று அவளை ராதையாக வரவழைத்த விஷ்ணு அவளோடு கிருஷ்ணனாக வாழ்ந்தது தனிக்கதை.
கிருபாச்சாரி
மேற்படி கௌதம முனியின் மகன் சரத்வாணனின் விவ்வித்தையைக் குட்டிச் சுவராக்க நினைத்த (அதே) இந்திரன், ஜாலவதி என்னும் தேவபத்தினி(?)யை அனுப்புகிறான். டூ பீஸ் ஆடையுடன் வந்த ஜாலவதியைப் பார்த்தவுடன் அவனுக்கு விந்து அவுட்டாக, அதிலிருந்து இரண்டு குழந்தைகள் தோன்றுகிறார்கள். வேட்டையாட வந்த மன்னன் சாந்தனு குழந்தைகளை எடுத்துச்சென்று வளர்க்கிறான். அந்தக் குழந்தைகள் தான் கிருபாச்சாரி மற்றும் கிருபி. அந்தக் கிருபியை துரோணன் மணந்து தொலைக்கிறான். கௌதமன் அரண்மனைக்குச் சென்று கிருபாச்சாரிக்கு வில்வித்தை கற்றுக் கொடுக்கிறானாம்.
துரோணன்
பரத்வாஜ முனிவன் கங்கைக்குக் குளிக்கச் செல்ல, அங்கே கிருதாசி என்ற பெண் குளித்துக் கொண்டிருக்கிறாள். ஓரக்கண்ணால் அவள் ஆடை விலகுவதைப் பார்க்கிறான் பரத்வாஜன். உடனே விந்து அவுட்டாகி குடத்தில் விழ, குடத்திலிருந்து பிறக்கிறான் துரோணன். துரோணனின் மகன் பிறந்தவுடன் குதிரையைப் போல் கணைத்தானாம். அதனால் அஸ்வத்தாமன் என்று பேராம்.
இந்த வாழ்க்கைத் தத்துவங்களை மொத்தமாச் சொன்னா குமட்டல் ஏற்படும் என்பதால் அவ்வப்போது தொட்டுக் கொள்ளப்படும்.
**************
மகாபாரதம்
2ம் பாகம் 28 - பாண்டவர் பூமி
குருட்சேத்திர நாட்டை ரெண்டாப் பிரிச்சி அஸ்தினாபுரத்தை கவுரவர்கள் எடுத்துட்டு, காண்டவப் பிரஸ்தத்தை பிரிச்சு பாண்டவர்கள் கையில குடுத்து அனுப்பிவிடுறான் திருதராட்டிரன். (காண்டவ பாண்டவ மேட்ச் ஆகுதே). சரின்னு அங்க போறாங்க பாண்டவர், குந்தியம்மா & பாஞ்சாலி. போற வழில கிருஷ்ணனும் சேர்ந்துக்குறான்.
இந்தக் கிருஷ்ணம் பய யாரு? எதுக்கு பாண்டவரோட சேருறான்? கேட்டா தர்மம்பாய்ங்க. அதெல்லாம் ஒரு மண்ணும் இல்ல. அவனும் இந்தக் கதையில ஒரு கேரக்டர். அவ்ளோதான். சகுனிய விட அதிக சூழ்ச்சி பண்ணவன் இவந்தான்.
காண்டவப் பிரஸ்தம் வந்தாச்சு. இங்க ஒரு தலைநகரை உருவாக்க நினைக்கிறாங்க பாண்டவர். உடனே இந்திரன் வந்து ஒரு நகரை உருவாக்குறான். அதனால அந்த ஊருக்கு இந்திரப்பிரஸ்தம்னு பேரு வைக்கிறாங்க (ஒருவேளை எமன் வந்து நகரை உருவாக்கியிருந்தா எமப்பிரஸ்தம்னு பேரு வச்சிருப்பாய்ங்களோ?)
தலைநகர் ரெடி, அரண்மனை ரெடி, அரியாசனம் ரெடி, அன்ட் ஆல் பர்னிச்சர்ஸ் ரெடி. அடுத்து மன்னன் பதவியேற்க வேண்டியது தான். பாண்டவர்கள்ல மூத்தவன் தர்மன் இந்திரப்பிரஸ்தம் (காண்டவப் பிரதேசம்) மன்னனா பதவியேற்குறான்.
பொறுப்பேத்த உடனே முதல் கெஸ்ட்டா நாரதன் வாறான். "பாண்டவர்களே, பாஞ்சாலியால நீங்க பிரிஞ்சிடக் கூடாது. ஒத்துமையா இருக்கோணும்"னு அட்வைஸ் பண்ணிட்டுப் போறான் நாரதன். (அய்யா முத்தம் உணர்ந்த நாரத முனி, நீரு குடும்பப் பஞ்சாயத்தும் பண்ணுவீரா?)
***********
நிஜ பாண்டவர் பூமி
பாண்டவர்கள் ஒவ்வொருத்தனும் பாஞ்சாலி கூட ஒரு வருசம் இல்லற வாழ்க்கையில் ஈடுபடலாம். வரிசை முறைப்படி ஒருத்தன் பாஞ்சாலி கூட வாழும்போது, இன்னொருத்தன் கிராஸ் ஆனா அந்த இன்னொருத்தன் ஒரு வருசம் காட்டுக்குள்ள இருக்கணும். இதுதான் ஜென்டில்மேன் அக்ரிமெண்ட். (ஒருத்தன் ஒரு வருசம் வாழ்ந்துட்டு, அடுத்த ரவுண்டுக்கு நாலு வருசம் காத்திருக்கணுமே?)
"இதுக்கு நான் ஒத்துக்குறேன். ஒருவருசம் ஒருத்தன் கூட குடும்பம் நடத்திட்டு, அடுத்தவருசம் இன்னொருத்தன் கூட குடும்பம் நடத்த ஆரம்பிக்கும்போது சும்மா போகமாட்டேன். தீக்குள்ளாற இறங்கி என்னைய புனிதப்படுத்திட்டுத் தான் போவேன்"னு சொல்றா பாஞ்சாலி. (தீக்குள்ளாற இறங்குனா புனிதமா? ஒவ்வொரு வருசமும் தீக்குள்ளாற இறங்குனா உடம்பெல்லாம் தீக்காயம் ஆகாதா?)
டெஸ்டிங் வைங்கடா இவிங்களுக்கு. முதல் வருசம் தர்மன் கூட குடும்பம் நடத்துறா பாஞ்சாலி. அப்ப ஊருக்குள்ள ஒரு பார்ப்பன பெருசு, அர்ஜுனன் கிட்ட போயி தன்னோட பசு மாட்டையெல்லாம் ஒரு களவானிக் கும்பல் ஓட்டிட்டுப் போகுது, என்னன்னு பாருய்யான்னு சொன்னவுடனே அர்ஜுனன் வில், அம்பு எடுக்க பாஞ்சாலி இருக்குறதை மறந்து தர்மனோட வீட்டுக்குள்ள என்ட்ரி ஆகுறான். பசு மாடாச்சே, அதோட சொன்னது பார்ப்பன பெருசாச்சே, சும்மா இருக்க முடியுமா?
வெப்பன்ஸ் எடுத்துட்டுப் போயி பசுமாட்டை எல்லாம் மீட்டுக் குடுத்த அர்ஜுனன், நேரா தர்மன்ட்ட போயி உண்மைய சொல்றான். "அண்ணே, அக்ரிமென்ட்டை மீறி நீ இல்லாத நேரம் வீட்டுக்குள்ளாற போனதால, நானே ஒருவருசம் காட்டுக்குள்ள போயிட்டு வாறேன்"னு சொல்லிட்டுக் கிளம்பிட்டான். (அவ்ளோ நல்லவனா நீ..?)
வெப்பன்ஸ் எல்லாம் வீட்டுக்குள்ளயா வப்பாங்க..? வேற எடமே இல்லையா?
**************
Focus to துவாரகை
அர்ஜுனன் காட்டுக்குள்ள இருக்குற நேரத்துல ஒரு மாஸ்டர் பிளான் பண்றான் கிருஷ்ணன். அவன் தங்கச்சி சுபத்திராவ துரியோதனன் பொண்ணு கேட்டு வரப்போறதா தகவல் வருது. அதைத் தவிர்க்க நேரா காட்டுக்குள்ள போயி அர்ஜுனனை துவாரகைக்குக் கூட்டிட்டு வந்து, அவன் தங்கச்சி சுபத்திரா கிட்ட பழகவிடுறான். அங்க சுபத்திராவுக்கும், அர்ஜுனனுக்கும் ஃபயர் ஆக அர்ஜுனன் கிருஷ்ணன்ட்ட சுபத்திராவ பொண்ணு கேக்குறான். எண்ணிய காரியம் ஈடேறியது.
"அர்ஜுனா, துரியோதனன் சுபத்திராவ பொண்ணு கேட்டு வரப் போறான். நீ பேசாம சுபத்திராவ கூட்டிட்டு ஓடிப்போய் கல்யாணம் பண்ணிக்கோ"ன்னு கிருஷ்ணன் சொல்றான்.
அர்ஜுனன் அதெல்லாம் முடியாதுன்னு சொல்ல "சுபத்திரா, நீ அர்ஜுனனை கூட்டிட்டு ஓடிப்போய் கல்யாணம் பண்ணிக்கோ"ன்னு சொல்றான். ரெண்டும் ஒன்னு தான? கல்யாணம் முடிஞ்சது.
பாண்டவர் அஞ்சு பேருக்கும் பாஞ்சாலி மூலமா ஆளுக்கு ஒரு பையன் பிறக்குறாங்க. அர்ஜுனன் சுபத்திரா தம்பதிக்கு அபிமன்யு பிறக்கிறான்.
(ஒரு பொண்ணை அஞ்சுபேருக்கு கல்யாணம் பண்ணி வைக்க ஒரு லாஜிக்கு... அந்த அஞ்சுபேருல ஒருத்தனுக்கு இன்னொரு பொண்ணைக் கட்டிவைக்க அதுக்கொரு லாஜிக்கு. இப்பிடி லாஜிக்குகள் சூழ் உலகு மக்களே...)
மகாபாரதம்
2ம் பாகம் 29 - நாகாஸ்திரம்
அர்ஜுனன் சுபத்திரா திருமணம் முடிஞ்சு அபிமன்யு பிறந்தபிறகு இந்திரப்பிரஸ்தம் அரண்மனைக்கு வந்து சேருது இந்த குரூப்பு. எப்பிடி காந்தாரிக்கு கல்யாணம் ஆனவுடனே காந்தாரியோட தம்பி சகுனி அஸ்தினாபுரம் அரண்மனைக்கு வந்து டேரா போட்டானோ, அதேபோல சுபத்திரா கூடவே வந்து இந்திரப்பிரஸ்தம் அரண்மனைல டேரா போடுறான் கிருஷ்ணன்.
பொழுது போகல... ஒருநாள் காட்டுக்கு வேட்டையாடப் போறாங்க கிருஷ்ணனும், அர்ஜுனனும். அப்ப அங்க வர்றான் வேலையத்த அக்னி பகவான் (காத்துக்கு ஒரு பகவான், அக்னிக்கு ஒரு பகவான், மழைக்கு ஒரு பகவான்... எத்தனை பகவான்ஸ்?)
வந்த பகவான் பசியில வரான். அக்னி பகவானுக்கு பசி எடுத்தா எதை இரையாப் போடுறது? இந்தக் காண்டவக் காட்டை எரிச்சு தின்ன அர்ஜுனன் கிட்ட அனுமதி கேக்குறான் அக்னி. (காட்டை எரிச்சா புகையும் சாம்பலும் தான் வரும். வயிறு எப்பிடி நிறையும்?)
எரிக்கணும்னா எரிக்க வேண்டியது தான? அனுமதி வாங்கிட்டு தான் எரிப்பானாம். அப்ப அனுமதிய மன்னன் தர்மன்ட்ட தான வாங்கணும்? ஏன் அர்ஜுனன்ட்ட கேக்குறான்? அந்த பகவான் பெர்மிசன் கேக்க இவனும் சரிங்குறானாம். சரி, எரிச்சித் தொலை.
இந்த இந்திரம் பய சும்மா இருக்காம வருண பகவானை அனுப்பி மழைபெய்ய வச்சா என்ன பண்றது? மழைய மீறி தீயெரிய அக்னி பகவானுக்கு வீரியம் இல்ல. வீரிய விருத்திக்கும் வழி இல்ல. அதனால காட்டுக்கு மேல கூரையப் போடச் சொல்றான் அக்னி. உடனே அர்ஜுனன் வில்லை எடுத்து வரிசையா அம்படிச்சு கூரைய உண்டாக்குறானாம். (இதெல்லாம் கிரேக்க காவியங்கள்ல படிச்சா மாதிரி தெரியுதா?. சரி, இதையும் நம்ப ஒரு கூட்டம் இருக்கே? என்ன பண்ண.)
காட்டை அழிச்சு வயிறு நெறைஞ்ச அக்னி, அர்ஜுனனுக்கு காண்டீபத்தைப் பரிசாக் குடுக்குறான். காண்டீபம்னா வில்லு. இதை இவிங்களே செய்ய முடியாதா? என்ன ஓட்டு ஓட்டுறானுங்க..?
*************
காண்டவக் காடு எரிஞ்சபிறகு அங்க வந்த பாம்பு ஒன்னு, தன்னோட குட்டிங்க எல்லாம் கருகிப்போயி கிடக்குறத பாக்குது. இதுக்குக் காரணம் அர்ஜுனன் தான்னு தெரியவருது. (பாம்புகிட்ட யாரு சொல்லிருப்பாங்க?)
உடனே அந்தப்பாம்பு தன்னோட தலைமைப் பாம்பு நாகராஜன்(?) கிட்ட போயி கம்ப்ளைண்ட் பண்ணுது. "தலைவா, அந்த அக்னி பகவான் என் குடும்பத்தையே அழிச்சிட்டான். இதுக்கெல்லாம் காரணம் அனுமதி குடுத்த அர்ஜுனம் பய தான். அவனைப் பழிக்குப்பழி வாங்கணும் தலைவா"ன்னு சொல்லுது பாம்பு.
அதுக்கு "அதெல்லாம் உடனே நடக்காது. நீ கர்ணன்ட்ட போயி ஒரு நாகாஸ்திரமா மாறி அவன்கூட இரு. எப்பிடியும் இந்த ரெண்டு உருப்படாத பயலுகளும், ஏன் எதுக்குன்னு தெரியாமலே வெட்டிகிட்டு சாகத்தான் போறானுக. அந்தநேரம் நீ கர்ணன் மூலமா அர்ஜுனன் கிட்ட வெறியைத் தீர்த்துக்கோ. இப்ப கிளம்பு"ன்னு சொல்லி அனுப்பிவிடுறான் நாகராஜன்.
சரின்னு வெளில வந்த பாம்பு அட்ரஸ் தேடிக் கண்டுபிடிச்சி கர்ணன்கிட்ட போகுது. "அண்ணே, அர்ஜுனன் மேல காண்டுல இருக்கீங்களாண்ணே?"ன்னு கர்ணன்கிட்ட கேக்குது. அவன் ஆமாங்குறான்.
காண்டுக்கு என்ன காரணம்னு அவனுக்கே தெரியாது. அப்பப்போ ரெண்டு பயலுகளும் "அக்னி நட்சத்திரம்" பிரபு கார்த்திக் மாதிரி ஏன் எதுக்குன்னு தெரியாமலே கொடூரமா முறைச்சிப் பார்ப்பானுக. அவ்வளவுதான். அதுதான் காரணம். வேறென்ன காரணம் வேணும்?
"அண்ணே, நா அவம்மேல கொலவெறில இருக்கேன். நான் நாகாஸ்திரமா மாறுறேன். நீங்க மூணுமுறை பயன்படுத்தி அந்த அர்ஜுனம்பயல கொல்லலாம்"னு சொல்லுது பாம்பு. (இவன் ஏண்டா அவன கொல்லணும்?)
பாம்போட டீலுக்கு கர்ணனும் ஓகே சொல்ல, பாம்பு நாகாஸ்திரமா மாறி அம்பராத்தூணியில படுத்துக்குது. (அது ஏன் கர்ணனுக்கு அர்ஜுனன் மேல மட்டும் கோவம்? துரியோதனனுக்கு பீமன் மேல மட்டும் கோவம்?)
நாகாஸ்திரத்தோட லாஜிக் இதுதான் மக்களே.
கர்ணனை அட்ரஸ் தேடிக் கண்டுபிடிச்சு நாகாஸ்திரமா மாறி எப்பவோ பழிவாங்குறதுக்கு, இப்பவே அட்ரஸ் தேடிக் கண்டுபிடிச்சு அந்த அர்ஜுனம் பயல போட்டுத் தள்ளலாம்ல?
நல்லவேளையா நாகாஸ்திரம் மட்டுந்தான் கர்ணனுக்குக் கிடைச்சது. காடு எரிஞ்சா பாம்பு மட்டுமா அழியும்? எல்லாமுந்தான் அழியும். தப்பிச்ச மான், கரடி, சிங்கம், புலி, குருவி, கரப்பான் பூச்சி எல்லாம் இதேமாதிரி வஞ்சம் வச்சு பழிவாங்க ஆரம்பிச்சா அப்புறம் மானாஸ்திரம், கரடியாஸ்திரம், சிங்காஸ்திரம், புலியாஸ்திரம், குருவியாஸ்திரம், கரப்பான் பூச்சியாஸ்திரம் எல்லாம் வரும். அப்புறம் எல்லாத்தையும் வைக்க அம்பறாத்தூணியில இடம் இல்லையே? எல்லாம் இடப் பற்றாக்குறை தான் மக்களே.
இப்படியாக அப்பிடிக்கா அக்னி பகவான் அர்ஜுனனுக்கு காண்டீபத்தைக் குடுக்குறான். இப்பிடிக்கா பாம்பு வந்து கர்ணனுக்கு நாகாஸ்திரத்தைக் குடுக்குது. சுபமஸ்து.
மகாபாரதம்
2ம் பாகம் 30 - ஜராசந்தன்
மிஸ்டர் அக்னி காண்டவக் காட்டை எரிச்சதால செத்துப்போன ஒரு பாம்புக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பாம்பு தப்பிச்சு நாகாஸ்திரமா மாறி கர்ணன் கிட்ட ரெஸ்ட் எடுக்குது.
இன்னொரு பக்கம் தீயில இருந்து மாயாசுரனை அர்ஜுனன் காப்பாத்துறான். பதிலுக்கு மாயாசுரன் இந்திரபிரஸ்தத்துல ஒரு மாயாஜால் அரண்மனை கட்டித் தர்றான்.
அந்த மாயாஜால் அரண்மனைக்கு ஒருநாள் நாரதன் வாறான். "தர்மா, நீதிநெறி எல்லாம் கோடு போட்டு நீ ஆட்சி செய்யுற லட்சணத்தைப் பாத்து நான் வியக்கேன். நான் மட்டுமா, ஒலகமே உன்னப்பாத்து வியக்குது. இது இப்பிடியே கன்டினியூ ஆகணும்னா நீ உடனே ராஜசூய யாகம் பண்ணனும்"னு சொல்றான். (அஸ்தினாபுரமே தம்மாத்துண்டு, அதுல பாதி இந்திரப்பிரஸ்தம். இருக்குற இடமே தெரியாது. இதை இவிங்க ஆளுற லட்சணத்தை உலகமே வியக்குதாமே?)
நாரதன் சொல்ற ராஜசூய வேள்வி பத்தி கிருஷ்ணன் கிட்ட கேக்குறான் தர்மன். கிருஷ்ணனும் "தர்மா, என்ன எளவோ பண்ணிக்கோ. ஆனா இந்த வேள்வியத் தடுக்க மகத நாட்டு மன்னன் ஜராசந்தன் வருவான். நானே அவன் இம்சை தாங்காம தான் மதுரால இருந்து துவாரகைக்குப் போயிட்டேன். மொதல்ல நானும், பீமனும், அர்ஜுனனும் மகதநாட்டுக்குப் போயி அந்த ஜராசந்தனைப் போட்டுத் தள்ளிட்டு வாறோம்"னு சொல்ல அவனும் சரிங்குறான்.
கிருஷ்ணன், பீமன், அர்ஜுனன் மூணு பயலுகளும் கோயில்ல மணியாட்டுற பார்ப்பானுங்க மாதிரி வேசம் போட்டு மகதநாட்டு அரண்மனைக்குப் போறானுங்க. மணியாட்டுற சாமின்னு எல்லாரும் மரியாதையா உள்ள அனுப்ப, அங்க ஜராசந்தனைப் பாத்தவுடனே மாறுவேசத்த கலைக்கிறானுங்க.
கிருஷ்ணனைப் பாக்குறான் ஜராசந்தன் "எலே கிருஷ்ணா, என்னலே வேசம் இது? நீதான் என்கிட்ட சண்டைக்கு வந்து தோத்துப்போயி மதுராவ விட்டே ஓடிட்டியே? தோத்துப் போன பயதானலே நீ.? இப்ப இங்க எதுக்கு வந்த? யாரு இவிங்க, இவிங்கள எதுக்குக் கூட்டிட்டு வந்த?"ன்னு கேக்குறான்.
"நீ என்னைய விரட்டிட்ட.. அதனால இவிங்கள கூட்டிட்டு வந்தேன். நீ இவிங்களோட சண்டைபோடு"ன்னு கிருஷ்ணன் கோர்த்து விடுறான்.
"நா ஏம்ப்பா தேவையில்லாம இவிங்களோட சண்டை போடணும்?"
"அதெல்லாம் கிடையாது. நீ சண்டை போடணும். மக்கள் எதிர்பார்க்குறாங்க"ன்னு சொன்னவுடனே பீமனும், ஜராசந்தனும் சண்டைக்குத் தயாராகுறானுங்க. 13 நாள் குஸ்தி நடக்குது. (எங்கயாச்சும் 13 நாள் குஸ்தி போடுவானுங்களா? 13 நிமிசத்துக்கே மூச்சு வாங்கும், அப்பப்போ energy drinks குடிச்சி refresh ஆகணும்)
கடைசியா, ஜராசந்தன் உடம்பை ரெண்டாப் பிரிச்சி மேயுறான் பீமன். ஆனா கொஞ்ச நேரத்துல உடம்பு ஒண்ணா சேர்ந்து திரும்பவும் சண்டைக்கு வரான். கிருஷ்ணன் அப்போ பீமனுக்கு ஒரு சிக்னல் குடுக்குறான். ஒரு புல்லைப் பிரிச்சி எதிர்எதிரா போடுறான். புரிஞ்சிக்கிட்ட பீமன் ஜராசந்தன் உடம்பைப் பிரிச்சி எதிர்எதிர் திசையில போட, ஜராசந்தன் செத்து பீமன் ஜெயிக்கிறான். (தம்பி கிருஷ்ணா, இதை நீயே செஞ்சிருக்கலாமே? ஏன், நீ ஒரு டம்மி பீஸுன்னு உலகத்துக்குத் தெரியணுமா?)
ஜராசந்தனைக் கொன்னபிறகு, இந்திரபிரஸ்தம் திரும்பி வந்து ராஜசூய வேள்விக்கு நாள் குறிக்கிறானுங்க (எத்தனை எத்தனை கொலைகளடா...)
யாகத்துல கலந்துக்க துரியோதனன், கர்ணன், சிசுபாலன், சகுனி, ஜெயத்ரதன், துருபதன் எல்லாப் வெட்டிப் பயலுகளும் வாறானுங்க.
***********
கொஸ்டின் நம்பர் ஒண்ணு - இந்த வேலையத்த நாரதன் ஏன் அடிக்கடி கிராஸ் ஆகுறான்?
ரெண்டு - தம்மாத்தூண்டு இந்திரபிரஸ்தம் ஆட்சி ஆஹா ஓஹோன்னு நாரதன் ஏன் கூவுறான்?
மூணு - இந்த ஆஹா ஓஹோ கன்டினியூ ஆகணும்னா ஏன் ராஜசூய யாகம் பண்ணச் சொல்றான்?
நாலு - சொல்லி வச்ச மாதிரி உடனே அந்த யாகத்துக்கு ஜராசந்தனால ஆபத்து வரும்னு ஏன் கிருஷ்ணம்பய கிளப்பி விடுறான்? பாண்டு & கோவும், திருதராட்டிரன் & கோவும் நெறைய யாகம் பண்றானுங்க. அப்பல்லாம் வராத ஜராசந்தன் ஏன் ராஜசூய யாகத்துக்கு வந்து டிஸ்டர்ப் பண்ணப்போறான்?
அஞ்சு - ஜராசந்தன்ட்ட தோத்துப்போன கிருஷ்ணன், அவன் யாகத்த கெடுக்கப் போறான்னு பொய்சொல்லி மாறுவேசத்துல ரெண்டுபேர கூட்டிட்டுப் போயி ஜராசந்தன போட்டுத் தள்ளுறான். இதுல ஒன்னும் பெருமை இல்லியே.
ஆறு - மகதப் பேரரசு வரலாறைப் பாத்தா, அங்கிட்டு எவனும் ஜராசந்தன்ங்குற பேருல மன்னனாவே இல்லியே? இவிங்க காலம் வேற. அவிங்க காலம் வேற.
அளவில்லாம காதுல பூ சுத்துறீங்கடா...
மகாபாரதம்
2ம் பாகம் 31 - சிசுபாலன்
ஜராசந்தனைப் போட்டுத் தள்ளுன பிறகு, ஹிட் லிஸ்ட்ல அடுத்து வர்றவன் சிசுபாலன்.
இந்திரப்பிரஸ்தம் மாயாஜால் அரண்மனை
தர்மன் நடத்தப்போற ராஜசூய யாகத்துல கலந்துக்கிட்டு விழாவை சிறப்பிக்க வாரானுங்க வேலையத்த துரியோதனன், கர்ணன், சகுனி, ஜெயத்ரதன், துருபதன், சிசுபாலன் etc.
இந்த சிசுபாலன் கிருஷ்ணனோட அய்த்தை மகன். பொறக்கும்போதே நாலு கையோடயும், சிவன் மாதிரி மூணு கண்ணோடயும் பொறந்தானாம். இவம்பொறந்த நேரத்துல "யாரு சிசுபாலனைத் தூக்குறப்போ அவனோட ஒரு கண்ணும், ரெண்டு கையும் மறையுதோ அவன் கையால தான் இவனுக்கு சாவு"ன்னு அசரீரி கேட்டுச்சாம். பொறந்தவுடனே போட்டுத்தள்ள நாள் குறிச்சிட்டானுங்க.
ஒரு தபா கிருஷ்ணன் சிசபாலனைத் தூக்கும்போது, அவனோட ஒரு கண்ணும் ரெண்டு கையும் மறைஞ்சது. உடனே அய்த்தை வந்து அழுது ஒப்பாரி வச்சி "கிருஷ்ணா, அவன கொன்னுடாதடா"ன்னு கெஞ்ச, "அய்த்தை, நான் அவன நூறு தடவை மன்னிப்பேன். நூத்தியோராவது தடவை கொன்னுடுவேன்"னு கிருஷ்ணன் வாக்குக் குடுக்குறான். (கொலை பண்றதுக்கு எத்தனை லாஜிக்கு?)
ஏற்கனவே நூறு தடவை மன்னிச்சிட்டான் கிருஷ்ணன். கவுன்ட்டிங் எல்லாம் கன் மாதிரி இருக்கும். இனி நேரடியா போட்டுத்தள்ளல் தான்.
இந்த நேரத்துல ராஜசூய யாகம் முடிஞ்சது. எல்லாரும் கிளம்புறதுக்கு முன்னாடி ஒவ்வொருத்தருக்கும் மரியாதை செய்யணும். ரைட்டு. முதல் மரியாதை யாருக்குப் பண்றது?
கிருஷ்ணனுக்குத் தான் முதல் மரியாதை பண்ணுவேன்னு சொல்றான் தர்மன். "அது நியாயமில்ல. இங்க பெருசுங்க நிறையபேரு இருக்காங்க. அவங்கள்ல யாருக்காச்சும் முதல் மரியாதை பண்ணுங்க"ன்னு சொல்றான் சிசுபாலன்.
இது போதாதா, கிருஷ்ணன் கையில இருந்து சக்கராயுதம் கிளம்பி சிசுபாலனைப் போட்டுத் தள்ளுது. (தம்பி கிருஷ்ணா, உன் கிரைம் ரேட் கூடிட்டே போகுதுப்பா.)

பெரியவங்களுக்கு மரியாதை பண்ணனும் தான சொன்னான் சிசுபாலன். இதுல என்ன தப்பு இருக்கு? போட்டுத் தள்ளுற அளவுக்கு இது ஒன்னும் கிரைம் இல்லியே? கேட்டா இதுக்கும் ஒரு லாஜிக் சொல்லுவாய்ங்களே?
மகாபாரதம்
2ம் பாகம் 32-33 - பாண்டவர் வனவாசம்
இந்திரபிரஸ்தம் அரண்மனைக்கு ராஜசூய யாகத்துக்கு வந்த அத்தை மகன் சிசுபாலனைப் போட்டுத் தள்ளுறான் கிருஷ்ணன்.
******
ஒருவழியா ராஜசூய யாகம் முடிஞ்சது. முடிஞ்சவுடனே ஊரப்பக்கம் போகாம , மாயாஜால் அரண்மனைலலயே டேரா போடுறானுங்க துரியோதனன் & கோ. பொழுது போக வேணாமா? அரண்மனைய சுத்தி வாறான் துரியோ. ஒரு இடத்துல கீழ தண்ணி கெடக்குன்னு நினைச்சி காலை வைக்க, அது தண்ணியில்ல தரைதான்னு அப்புறமாத்தான் தெரியுது. துரியோ சுதாரிச்சதைப் பாத்த பாஞ்சாலி "ஏய்யா, உங்கப்பனுக்குத் தான் கண்ணு தெரியாதுன்னா உனக்குமா?" அப்பிடின்னு சொல்லி சிரிச்சிட்டா.
இது போதாதா? ஏற்கனவே ஒரண்டை இழுக்க வழி தேடுனவிங்களுக்கு இந்தக் காரணம் போதுமே? கடுப்புல சொல்லாமக் கொள்ளாமக் கிளம்பிட்டான் துரியோ. இப்பிடியெல்லாம் விருந்தினர்களை அவமதிக்கக் கூடாதுன்னு தர்மன் பாஞ்சாலிய கோவிக்கிறான்.
இந்தநேரம் ஜோதிட திலகம் சகாதேவன் ஒரு மேட்டரோட தர்மன்ட்ட வாறான். "அண்ணே, நமக்குக் கெட்டநேரம் ஸ்டார்ட் ஆயிடுத்து. விதி வலியதுண்ணே. நம்ம அஞ்சுபேரோட ஜாதகமும் அதைத்தான் சொல்லுது"ன்னு சொல்லிட்டு, ஜாதக கட்டத்தையெல்லாம் அக்குவேறு, ஆணிவேறா பிரிச்சி மேயுறான்.
இதுவே 21ம் நூற்றாண்டா இருந்தா இந்நேரம் பஞ்சபாண்டவர்களுக்கும் பரிகாரம் பண்ணக் கிளம்பிருப்பானுங்க நம்ம ஊர் மெய்.மெய்யப்பன்ஸ். என்னென்ன பரிகாரம் பண்ணனும்? எப்பிடி பண்ணனும்? மணியாட்டிப் பார்ப்பானுக்கு எவ்ளோ தரணும்? மந்திரம் ஓதுற தலைமை பார்ப்பானுக்கு என்னென்ன கிப்ட் தரணும்? கேட் கீப்பருக்கு எவ்ளோ சம்திங்? டோட்டல் பட்ஜெட் எவ்ளோ? இந்தப் பரிகாரம் பண்ணியும் ஒரு ஆணியும் புடுங்க முடியாட்டி, அடுத்ததா காசி டூர், ராமேஸ்வர டூர் expense எல்லாத்தையும் கம்ப்யூட்டர்ல அடிச்சிக் குடுத்திருப்பானுங்க. பாவம் சகாதேவ், அவனுக்கு அந்தக் கொடுப்பினை இல்ல.
*************
அஸ்தினாபுரம்
இந்திரப்பிரஸ்தம் போயி யாகத்துல கலந்துட்டு அஸ்தினாபுரம் திரும்பி வந்த துரியோதனன், பாஞ்சாலி கேலி பண்ணதை எல்லார் கிட்டயும் சொல்றான்.
"ஆமாப்பா துரியோ, சுயம்வரத்துல என்னையும் சூத்திரன்னு சொல்லி அவமானப்படுத்துனா அந்த பாஞ்சாலி. அவளை விடக்கூடாது. ஓய் சகுனி, எதாவது ஐடியா சொல்லும் ஓய்."னு கர்ணன் சகுனிகிட்ட சொல்ல, சகுனியும் பிளான் பண்றான்.
"மாப்ள, எதையாச்சும் சொல்லி அவிங்கள இங்க வரவச்சி, நேரம் பாத்து தாயக்கட்டை விளையாட்டு ஏற்பாடு பண்ணுவோம். பந்தயம் கட்டி விளையாட்டுல தோக்கடிச்சி அவிங்க சொத்து பத்தையெல்லாம் எழுதிவாங்கிட்டு நடுத்தெருல விட்டுருவோம். போதுமா"ன்னு சகுனி துரியோ கிட்ட சொல்லி சமாதானப் படுத்துறான்.
திருதராட்டிரன் கிட்ட நேரம் பாத்து பெர்மிசன் வாங்கி, பாண்டவர்களை அஸ்தினாபுரம் வரவைக்க ஏற்பாடு பண்றான் துரியோ. விதுரன் தர்மன்ட்ட தூதுபோயி, இப்பிடிக்கா பிளான் பண்றானுங்க, நீ அஸ்தினாபுரம் பக்கம் வந்துறாதன்னு சொல்றான். இந்தப் பயலுக கேட்டாத் தான? "சித்தப்பு, நாங்கள்லாம் பெரியவிங்க பேச்சை தட்டவே மாட்டோம்"னு சொல்லி கிளம்பி அஸ்தினாபுரம் வந்து சேர்ந்துட்டாய்ங்க பாண்டவர்ஸ், பாஞ்சாலி & குந்தி.
அவிங்களும் என்னதான் பண்ணுவாய்ங்க? அரண்மனையவே எவ்ளோ நேரம் அடைகாக்க முடியும்? வேலை வெட்டின்னு எதும் கிடையாது.
வந்த எடத்துல தாயம் ஆடுவோம் வான்னு தர்மனைக் கூப்புடுறான் துரியோ. சரி, விளையாட்டு தானன்னு நம்பி வாறான் தர்மன். தாயம் ஸ்டார்ட் ஆகுது. துரியோவுக்கு ப்ராக்ஸியா சகுனி ஆடுறான்.
கஜானா பணத்தைக் கொஞ்ச கொஞ்சமா பந்தயம் வச்சி விளையாடுறான் தர்மன். பிதாமகன் சூர்யா மாதிரி சகுனி கட்டைய உருட்டி உருட்டி வரிசையா தர்மனோட கஜானா, ஆடுமாடு, இந்திரபிரஸ்த நாடு, நாலு தம்பிங்க எல்லாத்தையும் ஜெயிக்குறான். அப்புறம் தர்மன் அவனையே பணயம் வச்சி தோக்குறான். கடைசியா பாஞ்சாலியையும் தோக்குறான். பிதாமகன் லைலா நிலைமை தர்மனுக்கு.
(என்னதான் பிராடு பண்ணாலும் தொடர்ந்து ஒருத்தன் சூதாட்டத்தில ஜெயிக்கமுடியாது. மகாபாரத நிஜ வில்லன்ஸ் யாருன்னா கிருஷ்ணனும், அர்ஜுனனும் தான். ஆனா சகுனி, துரியோதனன் ரெண்டு பயலுகளையும் வில்லனாக் காட்டி கிருஷ்ணனை ஹீரோவாக்குறானுங்க லூஸ் பயலுக. கொஞ்சம் கூட யோசிக்காம "கிருஷ்ணரு வந்தாரு, தர்மத்தை வாழவைக்க வந்தாரு, அவரு வர்றவரைக்கும் தர்மம் குப்புறக்கா விழுந்து கெடந்துச்சி"ன்னு பட்டிமன்றத்துல பொளந்து கட்டுவானுங்க நம்மஊரு சூத்திர அடிமைகள். சிவனின் வரத்தால் பிறக்கும் கவுரவர்களை அதர்மவாதிகளா சித்தரிக்குற வைணவ காவியம்தான மகாபாரதம்?)
சூதாட்டம் முடிஞ்சது. பாண்டவர்ஸ் எல்லாரும் மணிமுடியை கழட்டியாச்சு. போய் பாஞ்சாலிய இழுத்துட்டு வரச்சொல்லி ஆளனுப்புறான் துரியோதனன்.
"நா வரமாட்டேன். தர்மன் தன்னையே அடமானம் வச்சி தோத்தபிறகு, என்னை எப்பிடி வச்சி விளையாடமுடியும்? வரமுடியாதுன்னு சொல்லு"ன்னு அனுப்பிவிடுறா பாஞ்சாலி.
கடுப்பான துரியோ அவந்தம்பி துச்சாதனனைக் கூப்புட்டு, போயி அந்தத் திமிரு பிடிச்சவள இழுத்துட்டு வாடான்னு சொல்லி அனுப்பிவிடுறான்.
***************
துச்சா போயி பாஞ்சாலி முடிய பிடிச்சி இழுத்திட்டு வாறான். "தம்பி துச்சா, இவ நம்மளோட அடிமை. அடிமைக்கு எதுக்கு ஆடம்பர உடை? கழட்டு"ன்னு துரியோ சொல்ல, துச்சா பாஞ்சாலி சேலைய உருவப் போறான்.
எல்லாப் பயலுகளும் வேடிக்கை பார்க்க, துரோணன் மட்டும் எழுந்து "பசங்களா, போதும் விடுங்கப்பா"ன்னு சொல்ல அவனை off பண்றான் சகுனி. "துரோணரே, நீரு அஸ்தினாபுரத்துல தான் பென்சன் வாங்கிண்டிருக்கீர். செத்த மூடும்"னு சொல்ல துரோணன் வாய மூடுறான்.
அடுத்து வாறான் துரியோ தம்பி விகர்ணன். "அண்ணே, இது தப்புண்ணே"ன்னு சொல்றான். "தம்பி, அஞ்சு பேரை கல்யாணம் பண்ணவடா இவ. இவள நீ ஏன் சப்போர்ட் பண்ற"ன்னு சொல்லி விகர்ணனை off பண்றான் கர்ணன்.
"தம்பி துச்சா, போயி அவ சேலைய கழட்டு"ன்னு துரியோ சொல்ல, பாஞ்சாலியோட சேலைய உருவுறான் துச்சா. (இந்த இடத்துல அந்த கிருஷ்ணம்பய வந்து அருள் பொழிஞ்சவுடனே சேலை வளர்ந்துட்டே போகும்னு படிச்சிருப்பீங்களே? அப்பிடித்தான் எழுதி வச்சிருக்காய்ங்க. ஆனா அது எப்பிடி சாத்தியம்? அவமானப்படுத்தணும்னு முடிவு பண்ணவிங்க பெரும்பான்மையா ஒரு சபையில இருக்குறப்போ, சேலையத் தான் கழட்டணுமா, அவிங்களுக்கு வேற option இல்லியா என்ன?)

அம்புட்டு நேரம் வாய மூடிட்டிருந்த திருதராட்டிரன், நிலைமை கைமீறிப் போறதை உணர்ந்து சத்தம் போட்டு எல்லாரையும் off பண்றான். பாஞ்சாலிய கூப்புடுறான் "அம்மா, இந்த உருப்படாத பயலுக பண்ண காரியத்துக்கு நான் sorry கேட்டுக்கறேன். எதோ நடந்தது நடந்துபோச்சு. நீங்க எல்லாரும் கிளம்புங்க. உனக்கு என்ன வேணுமோ கேளு, நான் தர்றேன்"னு சொல்றான்.
பாஞ்சாலி உடனே சூதாட்டத்துக்கு முன்னாடி நாங்க எப்பிடி இருந்தோமோ, அப்பிடி எங்களை அனுப்பி வச்சா போதும்னு சொல்றா. சரின்னு திருதராட்டிரன் பாண்டவர்களையும், பாஞ்சாலியையும் அனுப்பி "திரும்பவும் இந்திரபிரஸ்தம் போங்க. அது உங்க நாடுதான். நீங்க இழந்த எல்லாத்தையும் எடுத்துக்கங்க. இங்க வர்றதுக்கு முன்னாடி எப்பிடி இருந்தீங்களோ அப்பிடியே போங்க"ன்னு சொல்லி அனுப்பி வைக்கிறான்.
***********
மக்களே, அவனே போகச் சொல்லிட்டான். போகலாம்ல? எல்லா அக்கப்போரையும் பாண்டவர்கள் பண்ணிட்டு கௌரவர்கள் தான் அதர்மவாதிகள்னு சொல்லுவாய்ங்க.
அஸ்தினாபுரத்துல இருந்து இந்திரபிரஸ்தம் கிளம்புறானுங்க பாண்டவர் & கோ. அவிங்ககிட்ட திரும்பவும் போயி சூதாட்டத்துக்கு கூப்புடுறான் துரியோ. மறுக்குறது சத்திரிய தர்மமில்லைனு சொல்லி சரின்னு ஒத்துக்குறானுங்க பாண்டவர்ஸ். (போருக்கு மறுப்பது சத்திரிய தர்மமில்லைன்னு சொல்லுவானுங்க, இவிங்க அதை சூதாட பயன்படுத்துறானுங்க ராஸ்கல்ஸ்)
திரும்பவும் பாருங்க, இழந்ததை எல்லாம் கையில குடுத்து அவன் போகச் சொல்லிட்டான் திருதராட்டிரன். இனி திரும்பவும் விளையாடி இழந்தா அதுக்கு யார் பொறுப்பு?
இந்த வாட்டி பந்தயம் என்னன்னா, பாண்டவர்ஸ் தோத்துட்டா இந்திரபிரஸ்த நாட்டை இவிங்க கிட்ட குடுத்துட்டு காட்டுக்கு 12 வருசம் வனவாசம் போகணும். அப்புறம் ஒரு வருசம் அஞ்ஞாத வாசம். முடிச்சபிறகு வந்து நாட்டை வாங்கிக்கலாம்.
இப்பவாச்சும் சுதாரிக்க வேணாமா? சரின்னு விளையாடுறான் தர்மன். திரும்பவும் தோத்துட்டான். இனி வனவாசம் தான். சூர்யா லைலாவுக்கு வாட்ச்சை திருப்பிக் குடுக்குற மாதிரி துரியோதனன் தர்மனுக்குக் குடுப்பானா என்ன?
தோத்தது கன்பர்ம் ஆயிருச்சி. ஆட ஆரம்பிச்சுட்டா பாஞ்சாலி. முடிய அவுத்துப் போட்டுட்டு "துரியோ, துச்சா ரெண்டு பயலுக ரத்தத்தையும் என் கூந்தல்ல தேய்க்குறவரைக்கும் முடிய கட்டமாட்டேன்"னு சத்தியம் பண்றா. (ஏம்மா, விளையாண்டு தோத்தது உம் புருசன் தான? நீ அவன் ரத்தத்தைத் தான உன் கூந்தல்ல தேய்க்கணும்?)
"அந்த சூத்திரப்பய கர்ணனைக் குடலை உருவி மாலை போடுவேன்"னு டெர்ரரா சத்தியம் பண்றான் அர்ஜுனன். (அவன் குடலை நீ ஏன்டா உருவணும்?)
"சகுனி மகன் உலூகனைப் போட்டுத் தள்ளுவேன்"னு சத்தியம் பண்றான் நகுலன் (அவனுக்கும் உனக்கும் ஒரு சம்பந்தமும் இல்லியேடா பக்கி)
"சகுனிய போட்டுத் தள்ளுவேன்"னு சத்தியம் பண்றான் சகாதேவ் (அடே.. ஒரு ஜோதிட சிகாமணி பேசுற பேச்சா இது)
"துரியோவ பொளந்து கட்டுவேன்"னு சத்தியம் பண்றான் பீமன். (நீ பொளந்து கிழிச்சது போதும் போ.. சூதாட வேணாம்னு அட்வைஸ் பண்றதுக்கு துப்பில்ல., அவன பொளந்து கட்டுவானாம்)
தர்மன் மட்டும் சத்தியம் பண்ணல.
சத்தியம் பண்ற எபிசோட் முடிஞ்சவுடனே பாண்டவர்ஸ் + பாஞ்சாலி எல்லாரும் காட்டுக்குக் கிளம்புறாங்க...
*********
- முதல்ல அஸ்தினாபுரத்துக்கே போகவேணாம்னு தடுக்குறான் விதுரன். மீறிப்போயி விளையாடுறானுங்க...
- திருதராட்டிரன் மன்னிப்பு கேட்டு அனுப்புன பிறகு, துரியோ ரெண்டாவது சூதாட்டத்துக்கு கூப்புடுறான். இப்பவாச்சும் வேணாம்னு சொல்லிட்டு ஊரப்பக்கம் போயிருக்கலாம்ல?
- வான்ட்டடா வந்து வலையில மாட்டிட்டு இப்ப குய்யோ முய்யோன்னு கத்துறானுங்களே. என்னவோ போங்கடா.
மகாபாரதம்
2ம் பாகம் 34-36 - ஊர்வசியின் சாபம்
சூதாடி எல்லாத்தையும் தோத்துப்போன பாண்டவர்களைக் கூப்புட்டு, எல்லாத்தையும் கையில குடுத்து அனுப்புறான் திருதராட்டிரன். போய்த் தொலைய வேணாமா? திரும்பவும் சூதாடி தோத்துப் போயி காட்டுக்கு வனவாசம் போறானுங்க பாண்டவர் & கோவும் பாஞ்சாலியும். போறவிங்க நம்ம ஈரோடு பக்கம், தூத்துக்குடி பக்கம் இருக்குற சரஸ்வதி நதி காட்டுக்குள்ளாற போயி செட்டில் ஆகுறானுங்க.
இந்தக் கிருஷ்ணம்பய சும்மா இருப்பானா? அவங்களத் தேடி வாறான். வந்தவன் அர்ஜுனன் கிட்ட "அர்ஜுனா, பெரிய போரே வரப்போகுது. நீ கைலாசத்துக்குப் போயி சிவன்ட்ட பாசுபதாஸ்திரத்தை வாங்கிட்டு வா. கெளம்பு"ன்னு எதோ வெத்தல பாக்கு வாங்கிட்டு வரச்சொல்ற மாதிரி சொல்லி கெளப்பி விடுறான்.

கைலாசம் போயி அர்ஜுனன் சிவனை நோக்கி தவம் பண்றான். சாம்பிராணிப் புகையோட சிவன் வந்து டெஸ்டிங் எல்லாம் பண்ணி பாசுபதாஸ்திரத்தைக் அர்ஜுனன் கையில குடுக்குறான். அத்தோட விட்டானா? இந்திரம்பயல கூப்புட்டு "அர்ஜுனனுக்கு எல்லா அஸ்திரத்தையும் கையில குடுத்து அப்பிடியே அவனுக்கு டான்ஸ், மியூசிக் எல்லாம் சொல்லிக்குடு"ன்னு சொல்றான் சிவன்.
டான்ஸ், மியூசிக்கா? இந்த சிவனுக்கு என்ன மண்டையில மரை கழண்டுபோச்சா? "எதுக்கு டான்ஸ் மியூசிக்?"னு இந்திரன் கேக்க "எலே, சொன்னதைச் செய்யுலே"ன்னு சிவன் சொல்றான். சரின்னு அர்ஜுனனைக் கூப்புட்டு தேவலோகம் போறான் இந்திரன்.
தேவலோகத்துல ஊர்வசிய வரச்சொல்லி அர்ஜுனனுக்கு டான்ஸ், மியூசிக் எல்லாம் சொல்லித் தரச்சொல்றான் இந்திரன். அவளும் சொல்லித் தர்றா. அதை மட்டுமா சொல்லித் தந்தா? கடைசியா அர்ஜுனன் கிட்ட தன்னைக் கண்ணாலம் கட்டிக்கச் சொல்றா.
கணக்குப் பார்த்தா அர்ஜுனன் பேமிலில, அவனோட கொள்ளுத் தாத்தாவோட கொள்ளுத் தாத்தா புரூருவனோட பொண்டாட்டி தான் ஊர்வசி. அதை அவகிட்ட சொன்ன அர்ஜுனன் "என் கொள்ளுப் பாட்டியோட கொள்ளுப் பாட்டியே, உன்னை நான் எப்பிடி கண்ணாலம் பண்ணமுடியும்?"னு ஒரு ட்விஸ்ட்டு வைக்கிறான்.
"இங்க பாருப்பா, நான் தேவ கன்னிகை. கற்பு போனாலும் நாங்க திரும்ப வாங்கிருவோம். எங்களுக்கெல்லாம் வயசே ஆகாது. மரியாதையா கல்யாணம் பண்ணு. இல்ல பாத்துக்கோ"ன்னு பைட் பண்றா ஊர்வசி.
"இல்லாட்டி என்ன பண்ணுவ?"ன்னு அர்ஜுன் கேக்க "ஏண்டா, நானும் பாத்துட்டே இருக்கேன். பயபுள்ள பேசிட்டே போறியே? அடே, நீ ஆண்மை இல்லாத திருநங்கையாப் போவடா"ன்னு சபிக்கிறா ஊர்வசி.
கரெக்டா அந்தநேரம் பாத்து ஓடியாறான் இந்திரன். "யம்மா ஊர்வசி, சபிச்சிட்டியா? இவன் அம்மா குந்திக்கு துர்வாசன் குடுத்த வரப்படி என்னை நினைச்சிட்டு அவ மந்திரம் சொன்னதால இந்த அர்ஜுனம்பய பொறந்தான். நீ பாட்டுக்கு பொசுக்குன்னு சாபம் குடுத்துட்ட? சரி சரி, நடந்தது நடந்துபோச்சி. உன்னால சாப விமோசனமும் தரமுடியாது. இவன் இப்பவே திருநங்கை ஆனா குடும்பத்துல பொழப்பு தளப்ப பாக்கவேணாமா? இந்த 12 வருச வனவாசத்துல உன் சாபம் அவனை ஒன்னும் பண்ணக்கூடாது. வேணும்னா ஒரு வருசம் அஞ்ஞாத வாசம் இருப்பாம் பாரு. அப்ப வேணா அவன் திருநங்கையா இருக்கட்டும். உன் சாபத்துல இந்த சேஞ்ச் மட்டும் பண்ணிக்கோ"ன்னு சொல்றான் இந்திரன். சரின்னு சேஞ்ச் பண்றா ஊர்வசி.
*********
ரைட்டு, டிரெயினிங் முடிஞ்சது. அர்ஜுனனைக் கூப்புட்டு பாண்டவர்கள் இருக்குற காட்டுக்கு வந்த இந்திரன், அவனை தர்மன்ட்ட ஒப்படைக்கிறான். "தர்மா, அர்ஜுனுக்கு ஈசன் பாசுபதாஸ்திரம் குடுத்துருக்கான். நல்லா சண்டைபோட்டு நாசமாப் போங்க. அப்புறம் ஊர்வசி இவனுக்கு டான்சும், மியூசிக்கும் சொல்லிக் குடுத்திருக்கா. பரத வம்ச அர்ஜுனனுக்கு ஊர்வசி சொல்லிக் குடுத்ததால இனி அவனோட டான்ஸ் "பரத நாட்டியம்" அப்பிடின்னு வருங்கால வரலாறு கூறட்டும். அப்புறம் இன்னொரு ஹேப்பி நியூஸ். ஊர்வசி அர்ஜுனனுக்கு விட்ட சாபப்படி, அர்ஜுனன் அஞ்ஞாத வாசத்தப்போ திருநங்கையா மாறிருவான். கண்டுக்காதீங்க"ன்னு சொல்லிட்டு எஸ் ஆகுறான் இந்திரன்.
--- பரத நாட்டியத்துக்கு இங்க ஒரு லாஜிக் சொல்றானுங்க. பரத முனிவர் கண்டுபிடிச்சதால "பரத நாட்டியம்"னு இன்னொரு டீம் இன்னொரு லாஜிக் சொல்லும்.
--- போர் வரப்போகுது, போர் வரப்போகுதுன்னு ஆரம்பத்துல இருந்தே பில்டப் குடுக்குறான் இந்த கிருஷ்ணம்பய. 12+1 13 வருசம் கழிச்சி வரப்போற போரை முன்கூட்டியே அறியுறவன் முதல்லயே சொல்லி இந்த சூதாட்டத்தையே தடுத்திருக்கலாம்ல? கேட்டா அவதார நோக்கம் நிறைவேறணும்னு சொல்லுவாங்க பெரியவா எல்லாரும்.
மகாபாரதம்
2ம் பாகம் 37-41 - ஜெயத்ரதன்
பாண்டவா எல்லாரும் வனவாசம் இருக்கறச்சே ஒரு நாள் பொழுது போகாத பீமன் காட்டுக்குள்ளாற போகும்போது, பாரஸ்ட் ஆபீசர் ரேஞ்சுக்கு உக்காந்துட்டிருந்த குரங்கைப் பாக்குறான்.
"குரங்கே... வாலை எடு"ன்னு சொன்னானாம். ஏண்டா, குரங்கைத் தாண்டிப் போ, இல்ல சுத்திப் போன்னு சொல்றீங்களா? அங்கதான் இருக்கு ஒரு ட்விஸ்ட்டு. சாஸ்திரப்படி உயிரினங்களைத் தாண்டி நடக்கக் கூடாதாம் (உயிர்க் கொலை எல்லாம் இந்த லிஸ்ட்ல வராது) சரி, சுத்திப் போகலாம்ல?
"தம்பி, நேக்கு வயசாயிடுத்து. அதனால வாலை நீயே எடுத்துப்போட்டு போ"ன்னுச்சாம் அந்தத் தமிழ்/சமஸ்கிருதக் குரங்கு. சரின்னு இவனும் வாலைத் தூக்கிப் பாக்குறான், ம்ஹும்... முடியல.
முடியலன்னா மடார்னு கால்ல விழணும்ங்குற வழக்கப்படி குரங்கு கால்ல விழுறான் பீமன். குரங்கும் உடனே "தம்பி, நாந்தேன் அனுமன். நான் வாயுதேவனுக்குப் பொறந்தா மாதிரி நீயும் வாயுதேவனுக்குப் பொறந்த. நாமள்லாம் ஒண்ணுக்குள்ள ஒண்ணு. போர் வர்றப்போ அர்ஜுனனுக்கு நான் ஹெல்ப் பண்றேன்"னு சொல்லி அனுப்புறான் அனுமன்.

ராமாயணக் கேரக்டரான அனுமன் எதுக்கு 12 லட்சம் வருசம் கழிச்சு மகாபாரதத்துல வாறான்? வர்றவன் ஏன் போர்ல ஹெல்ப் பண்றேன்னு சொல்றான்? எதுக்கு போர் போர்னு அக்கப்போர் பண்றானுக? ஒரு எழவும் புரியல..
***********
- ராமாயணத்து அனுமன் எபிசோட் முடியுது
- அடுத்து காட்டுக்குள்ளாற சோத்துக்கு என்ன பண்ணுவாய்ங்கன்னு கேப்போம்ன்னு தெரிஞ்சே பாஞ்சாலி கிட்ட அட்சய பாத்திரத்தைக் குடுத்து வச்சிருக்கானுங்க. அதை வச்சி துர்வாசனோட ஒரு எபிசோட் ஓடுது. துரியோதனன் துர்வாசனை பாண்டவர்ஸ் கிட்ட அனுப்பி, பாஞ்சாலியோட அட்சய பாத்திரத்தை டெஸ்ட் பண்றாப்டி. இந்த துர்வாசன் தான் சின்னப் பொண்ணா இருந்த குந்திக்கு "குழந்தை மந்திரம்" கத்துக் குடுத்த பய.
- அப்புறம் துரியோதனன் & கோ டீம் மெம்பர்ஸ் எல்லாரும் கந்தர்வர்கள்(?) கிட்ட ஒரண்டை இழுக்குறானுங்க. விசயம் தெரிஞ்ச பாண்டவர் & கோ உடனே "என்ன இருந்தாலும் நம்ம பயலுக"ன்னு கந்தர்வர்கள் கிட்ட போயி பேச்சுவார்த்தை நடத்தி கவுரவர்களை மீட்டுட்டு வாரானுங்கன்னு ஒரு அம்புலி மாமா கதை ஒன்னு தனியா ஓடுது
**********
கந்தர்வர்கள் கிட்டயிருந்து மீண்டு வந்த பின்னாடி ஒருநாள், கர்ணன் துரியோதனன்ட்ட "ஏம்பா, ராஜசூய யாகம்ன்னு ஒண்ணு பண்ண பின்னாலதான் பாண்டவர்ஸ்க்கு பேரும் புகழும் கிடைச்சது. நீயும் அதையே காப்பியடிச்சா என்ன"ன்னு சொல்றான்.
சம்மன் இல்லாம ஆஜர் ஆகுற விதுரன் துரியோதனன்ட்ட "மவனே, ராஜசூய யாகத்த பண்ணனும்னா பல நாட்டு மன்னர்கள் உன் தலைமையை ஏற்கணும். பாண்டவர்ஸ் அப்பிடிதான் பண்ணானுங்க. நீயும் போயி பக்கத்து நாட்டு மன்னர்களை ஒரண்டை இழுத்து சண்டைபோட்டு ஜெயிச்சிட்டு வா. அப்பதான் ராஜசூய யாகம் பண்ணமுடியும்"னு ரூல்ஸ் அன்ட் ரெகுலேசன் சொல்றான் விதுரன்.
சரின்னு துரியோதனன் கர்ணனை சண்டைக்கு அனுப்புறான். கர்ணனும் போயி அக்கம் பக்கத்து ஆண்ட பரம்பரைகளை எல்லாம் சண்டைபோட்டு ஜெயிச்சி அஸ்தினாபுரத்தோட சேர்க்குறான். இனி ராஜசூய யாகம் பண்ணலாம்ல?
ம்ஹும், பண்ணமுடியாதுன்னு சொல்றானுங்க மந்திரம் ஓதுற பார்ப்பான் எல்லாரும். தர்மன் வீட்டுல அவங்கப்பன் இல்ல. தர்மன் தான் பெரியவன். அதனால அவன் பண்ணான். உங்க வீட்டுல பெரியவர் திருதராட்டிரன் இருக்கும்போது துரியோதனன் பண்ணக்கூடாது. வேணும்னா வைஷ்ணவ யாகம் பண்ணுங்கோன்னு சொல்றானுங்க பார்ப்பன டெக்னீஷியன்ஸ்.
அதென்னங்கடா வைஷ்ணவ யாகம்? ஏன் சைவ யாகம்லாம் பண்ணமாட்டீங்களா? வைஷ்ணவ யாகம்ன்னா தங்கத்துல ஏர் செஞ்சு மந்திரம் ஓதி, அப்பால அந்த ஏரால நிலத்தை லேசா உழுது திரும்பவும் மந்திரம் ஓதுவானுங்க. பத்திரமா அந்தத் தங்க ஏரை பார்ப்பன மணியாட்டிஸ் எல்லாரும் ஆளுக்குக் கொஞ்சமா பிச்சி எடுத்துட்டுப் போயிடுவானுங்க. இதுதான் வைஷ்ணவ யாகம்.
யாகம் முடிஞ்சது. ஆனாலும் ராஜசூய யாகம் பண்ணுங்கோ, சிறப்பா வருவேள்னு மணியாட்டிஸ் எல்லாரும் திரும்பவும் துரியோட்ட சொல்லிட்டுப் போறானுங்க. துரியோ சிறப்பா வந்தானோ இல்லியோ, உனக்கு சிறந்த கவனிப்பு தான் குடுமி.
துரியோ கர்ணன்ட்ட "நண்பா, பாண்டவர்களை நாம போர்ல கொன்னபிறகு நீதான் ராஜசூய யாகம் பண்ணனும்"ங்குறான். (அவிங்கள ஏன்டா நீங்க கொல்லணும்? இன்னும் வனவாசத்துல தானடா இருக்கானுங்க. இந்தா கந்தர்வர்கள் கிட்ட இருந்து காப்பாத்துனாங்க. ரெண்டு பயலுகளும் கொலவெறியோட தான் திரியுறானுங்க)
உடனே கர்ணனும் "பாண்டவர்களை கொல்ற வரைக்கும் தண்ணியடிக்க மாட்டேன். நான்-வெஜ் திங்கமாட்டேன். அதோட இல்லைன்னு வர்றவங்களுக்கு இல்லைன்னு சொல்லமாட்டேன்"னு சபதம் பண்றான். (எதுக்குடா இந்தக் கொலவெறி?)
கர்ணன் தர்மபிரபுவா ஆன கதை இதுதான்.

********
இவிங்களோட இந்த சபத எபிசோட், தர்மனுக்கும் தெரியவருது. (யாரு சொல்லிருப்பாங்க?)
"அந்தக் கர்ணம்பய கவச குண்டலத்தோட பொறந்தவன். அவன ஜெயிக்க முடியாதே"ன்னு தர்மன் யோசிக்கிறப்போ வியாசன் வந்து சேருறான்.
எப்பவும் வியாசன் பிள்ளைவரம் குடுக்கதான் வருவான். இப்ப அதுக்கு வேலையில்லையே? அதனால வந்தவன் தர்மன்ட்ட "தர்மா, கர்ணனைப் பத்தி கவலைப்படாத. அர்ஜுனனை உடனே இந்திரனை நோக்கி தவம் பண்ணச்சொல்லு"ன்னு சொல்லிட்டு எஸ்ஸாயிட்டான். (ஏம்பா, இப்பத் தான அர்ஜுனன் தவம் பண்ணி சிவன் வந்து இதே இந்திரன் கூட அனுப்பி வச்சான். போனவன் ஊர்வசி சாபத்தோட திரும்பி வந்தான். இப்ப திரும்பவும் ஏன்டா இந்திரனோட கோர்த்து விடுற?)
தவம் பண்ணனும், இல்ல எவனையாவது போட்டுத் தள்ளணும் அப்பிடிங்குற ஆகம விதிப்படி அர்ஜுனன் இந்திரனை நோக்கி தவம்பண்ணி பொழுதைப் போக்குறான்.
**********
பாண்டவர் வனவாசம் 12வது வருசத்துல இங்கிட்டு வாறான் ஜெயத்ரதன். இவன் சிந்து நாட்டு அரசனாம். கவுரவர் சிஸ்டர் துச்சலையோட புருசன்.
வந்தவன் பாஞ்சாலிய பாக்குறான். உடனே கிட்ட போயி "காந்தக் கண்ணழகி.. உனக்கு நான் மினிஸ்ட்ரில இடம் பாக்குறேன்"னு சொல்லி ஒரண்டை இழுக்க, பாஞ்சாலி "அய்யய்யோ, பாத்துட்டான் பாத்துட்டான்"னு சத்தம்போட்டு ஊரக் கூப்புடுறா.
உடனே நம்பியார் ஜெயலலிதாவ தூக்கிட்டுப் போற மாதிரி பாஞ்சாலிய தூக்கிட்டு குதிரை வண்டில எஸ்கேப் ஆகுறான் ஜெயத்து. விசயம் கேள்விப்பட்டு வந்த பாண்டவர்ஸ், போயி அவள காப்பாத்திட்டு, ஜெயத்துக்கு அடிய குடுத்து வெரட்டுறானுங்க.
ஓடிப்போன ஜெயத்ரதன் அங்கிட்டு தனியாப் போயி உக்காந்து சிவனை நோக்கி தவம் பண்ண, சாம்பிராணிப் புகையோட சிவன் வர்றான். "தம்பி ஜெயத்து, நீ நல்லா தம் கட்டி தவம் பண்ண. உனக்கு என்ன வரம் வேணும்னு கேளு."ன்னு சிவன் கேக்குறான்.
"மை லார்ட், அந்த வீணாப்போன பாண்டவர்ஸ் அஞ்சுபேரும் என்னைய அவமானப் படுத்திட்டானுங்க. அதனால போர் நடக்கும்போது அந்த அஞ்சு பயலுகளையும் நான் தோக்கடிக்கணும்"னு மனுப் போடுறான் ஜெயத்து (ஏன்டா போர் போர்னு அக்கப்போர் பண்றீங்க)
சிவன் யோசிக்குறான். இவம் பாஞ்சாலிய தூக்கிட்டுப் போனதால தான அவிங்க வந்து இவன அடிச்சு வெளுத்தானுங்க? இந்தப்பய அடிய வாங்கிட்டு ஓடாம நம்ம கிட்ட தம் கட்டி தவம் பண்ணிருக்கான். அந்த தவத்துக்கும் மரியாதை குடுக்கணும், என்ன பண்றது? சரி சமாளிப்போம். "தம்பி ஜெயத்து, அந்த அர்ஜுனம் பய தவம் பண்ணி என்கிட்ட இருந்து பாசுபத அஸ்திரத்தைப் புடுங்கிட்டுப் போயிட்டான். அதனால அவன விட்டுட்டு மீதி நாலு பயலுகளையும் செமத்தியா கவனிச்சுக்க"ன்னு வரம் குடுத்திட்டு சிவன் எஸ் ஆகுறான். (இதுக்கு ஏன்டா தவம் பண்ணனும்? இப்பிடியே திரும்பிப் போயி அவிங்கள அடிச்சி வெளுக்க வேண்டியது தான? இவிங்க அக்கப்போர் தாங்க முடியலப்பா?)
தப்பே பண்ணாலும் தவம் பண்ணா வரம் கிடைக்கும். தட் இஸ் லாஜிக்.
மகாபாரதம்
2ம் பாகம் 42-44 - முடிந்தது வனவாசம்
பாண்டவர் வனவாசம் எபிசோட் 12 வருசம் முடியப்போகுது. அடுத்ததா அஞ்ஞாத வாசம் ஒரு வருசம். அஞ்ஞாத வாசம்ன்னா, ஒரு பய கண்ணுலயும் தட்டுப்படாம ஒரு வருசத்த ஒப்பேத்தணும். மீறி எவனாவது வடிவேலு மாதிரி "அய்யய்யோ பாத்துட்டான் பாத்துட்டான்"னு பிராது குடுத்துட்டா திரும்பவும் 12 வருசம் வனவாசம், ஒரு வருசம் அஞ்ஞாத வாசம். இதுதான் காமெடி டீல்.
அஞ்ஞாத வாசத்துக்காக அம்புட்டு உருப்படாத பயலுகளும் காட்டுல இருந்து கிளம்பி அடர்ந்த காட்டுக்குள்ளாற போறானுங்க(?).
போன எடத்துல தர்மன் தண்ணி இல்லாம நாக்குத்தள்ள, சகாதேவனை தண்ணி பிடிச்சிட்டு வரச்சொல்லி அனுப்புறான். (அட்சய பாத்திரத்துல தண்ணி வராதோ?)
போனவன் போனவன்தான். ஆளைக் காணோம். அவனைத் தேடி ஒவ்வொரு தம்பியா நாலு பேரையும் அனுப்புறான். நாலு பயலுகளும் திரும்பி வரல. அப்புறம் நாலு பேரைத்தேடி தர்மன் போயி பாக்குறான். ஒரு குளத்துல நாலு பயபுள்ளகளும் செத்துக் கெடக்குறானுங்க.
பதறியடிச்சி என்னன்னு போய்ப் பாத்தா ஒரு யட்சன்(?) வர்றான். "தம்பி நில்லு, முதல்ல நான் வைக்குற குவிஸ் போட்டியில ஜெயிச்சுக் காட்டு. மத்தது எல்லாம் அப்புறம்"னு யட்சன் சொல்லிட்டு கேட்ட கேள்விக்கெல்லாம் தர்மன் பதில் சொல்லிட்டான்.

அதனால சந்தோஷப்பட்ட யட்சன் "தம்பி, நாந்தேன் எமதர்மன். சும்மா உனக்கு டெஸ்டிங் வைக்க வந்தேன்"னு சொல்லி அந்த நாலு பயபுள்ளகளுக்கும் உயிர்குடுத்து அனுப்பிட்டான்.
(கதைக்கும், இந்த எபிசோடுக்கும் சம்பந்தமே இல்லியே?)
************
ரொம்ப ஹேப்பியா அஞ்ஞாத வாசம் போக மத்சய(?) நாட்டுக்குள்ளாற இருக்குற விராட நகரத்துக்குள்ள போறானுங்க. அர்ஜுனம்பய ஊர்வசி சாபத்தால திருநங்கையா மாறிட்டான். ஒன் இயர் கழிச்சித்தான் ரெகவர் ஆவான்.
போய்ச் சேர்றதுக்குள்ள துரியோதனன் அனுப்புன 800 ஜேம்ஸ்பாண்ட் உளவாளிங்களை போட்டுத் தள்ளுறான் பீம்பாய். இந்தப்பயலோட கிரைம் ரேட் தான் இப்பவரைக்கும் டாப் மோஸ்ட்.
மத்சய நாட்டு மன்னன்ட்ட போயி வேறவேற பேரைச் சொல்லி வேலைக்கு சேர்ந்து பொழுதை ஒப்பேத்துறானுங்க நம்ம பாய்ஸ்.
ஒரு வருசம் முடிய இன்னும் ரெண்டு மாசம் இருக்கும்போது, மத்சய நாட்டு ராணியோட அண்ணன் கீசகன் பாஞ்சாலி மேல கைய வைக்க, பிளான் பண்ணி நைட்டோட நைட்டா அவன் சோலியயும் முடிக்கிறாங்க நம்ம பாய்ஸ்.
இவனுங்க இங்க இருக்குறதை மோப்பம் பிடிச்ச துரியோ & கோ, மத்சய நாட்டு மேல படை எடுத்து வர, பாண்டவர் & கோ எல்லாப் பயலுகளும் சேர்ந்து சண்டை போட்டு விரட்டியடிக்கிற நாள்ல ஒரு வருச அஞ்ஞாத வாசமும் முடியுது. இந்தப் பயலுக தான் பாண்டவர்ஸ்னு தெரிஞ்ச மத்சய நாட்டு மன்னன் அவனோட மகளை அர்ஜுனம்பய மகன் அபிமன்யுவுக்கு கட்டி வைக்கிறான்.
***********
அதாகப்பட்டது வனவாசம், அஞ்ஞாத வாசம் ரெண்டும் முடிஞ்சது. இப்பிடியே நேரா அஸ்தினாபுரம் போயி சூதாட்டத்துல தோத்துப் போன எல்லாத்தையும் கேட்டு வாங்குவோம்னு முடிவு பண்ணி, விராடபுரத்து அரண்மனைலயே மீட்டிங்க போடுறானுங்க பாண்டவர்ஸ். பைனலா ஒரு தூதனை அனுப்பி நம்ம நாட்டைக் கேக்கலாம்னு முடிவு பண்றானுங்க. (எலே.. நேரா போயி கேக்க வேண்டியது தான?)
இவன் மீட்டிங் போடுறத கேள்விப்பட்டு துரியோவும் ஒரு மீட்டிங்க போடுறான். "மாப்ள.. இந்த கிருஷ்ணம் பயல கைக்குள்ள போட்டுக்கணும். ஒரு எட்டு அவனப் போயி பாத்துட்டு வாயேன்"னு துரியோவ துவாரகைக்கு கிளப்பி விடுறான் சகுனி.
கேள்விப்பட்டிருப்பீங்களே.. துவாரகைல கிருஷ்ணன் தூங்குறான். அவன் கால்மாட்டுல அர்ஜுனனும், தலமாட்டுல துரியோவும் வெயிட் பண்றானுங்க. எந்திரிச்சுப் பாத்த கிருஷ்ணன் கிட்ட "மாப்ள.. எங்க ரெண்டு பேருக்கும் போர் வரப்போகுது. நீ எனக்கு தான் சப்போர்ட் பண்ணனும்"னு ரெண்டு பயலுகளும் கேக்குறாங்களாம்.
"என் போர்ப்படை இருக்கு. அது வேணுமா? இல்ல ஆயுதமில்லாம நான் மட்டும் இருக்கேன். நான் வேணுமா?"ன்னு கிருஷ்ணன் கேக்க, படைய துரியோ கேக்குறான். கிருஷ்ணன் தேரோட்டணும்னு அர்ஜுனன் கேக்குறானாம்.
அப்பிடியே கிருஷ்ணனும் அர்ஜுனனும் பாண்டவர்ஸ் கிட்ட வந்து நடந்ததைச் சொல்லி தௌமிய முனிவரை தூதரா அஸ்தினாபுரம் அனுப்புறானுங்க.
*******
இப்பத்தான் தூதரையே அனுப்புறானுங்க. அதுக்கு முன்னாடியே ஏன் போர் வரும், போர் வரும்னு அக்கப்போர் பண்றானுங்க?
மகாபாரதம்
2ம் பாகம் 45-47 - போர் ஆரம்பம்
தௌமிய முனிவன் பாண்டவர்ஸ் தூதரா அஸ்தினாபுரத்துக்கு போயி பாண்டவரோட நாட்டைக் கேக்குறான். ஒன்னும் முடியல. பிறகு கௌரவர்ஸ் சஞ்சயனை தூதரா அனுப்பி "நாடெல்லாம் கிடையாது. வேணா ஆளுக்கு நாலு புரோட்டா வாங்கித் தாறோம்"னு சொல்லச் சொல்றானுங்க.
கடைசியா கிருஷ்ணன் பாண்டவர்ஸ் தூதரா அஸ்தினாபுரம் வர்றான். பேச்சுவார்த்தை நடக்குது. ஆனா முன்னேற்றம் இல்ல, "பொண்டாட்டிய பந்தயம் வச்சு தோத்தவன் நாடு கேக்குறானாக்கும்"னு கர்ணன் சொல்ல "டே சூத்திரப்பயலே.. இது எங்க பேமிலி மேட்டர். நீ வாய மூடு"ன்னு கர்ணனை off பண்றான் பீஷ்மன்.
பாண்டவர்ஸ்க்கு நாடெல்லாம் தர முடியாதுன்னு துரியோ ஓவரா துள்ளுறான். அவனை விதுரன் off பண்ண பாக்குறான். "யோவ் சித்தப்பு, நீரும் சூத்திரன் தான? வேலைக்காரிக்குப் பிறந்தவர் தான நீரு. வாய மூடும்"னு சொல்ல, டென்சனான விதுரன் அவன் கையில இருந்த விஷ்ணு தனுசை உடைச்சு ஏறியுறான். பேச்சுவார்தை தோல்வி அடையுது.
"வா வா ஏரியாண்ட வா, ஏரியாண்ட வா"ன்னு சொல்லிட்டு கிளம்புறான் கிருஷ்ணன்.
*********
சண்டை போட்டு நாசமாப் போறது தான் வழின்னு முடிவுக்கு வந்து பாண்டவர் கௌரவர் ரெண்டு பயலுகளும் அடியாள் படைய பெருக்குறானுங்க.
கர்ணன் படத்துல வர்றமாதிரி இந்திரம்பய வந்து கர்ணனோட கவச குண்டலத்த வாங்கிட்டுப் போறான். அப்புறம் குந்தி கர்ணன்ட்ட போயி அர்ஜுனனைத் தவிர வேற யாரையும் அடிக்காதன்னும், அர்ஜுனன் மேல நாகாஸ்திரத்த ஒருதடவைக்கு மேல அடிக்காதன்னும் சத்தியம் வாங்கிட்டு வர்றா.
அங்கிட்டு அப்பிடின்னா இங்கிட்டு பாண்டவர்ஸ் படைக்கு பீஷ்மனைத் தலைமை ஏற்கச் சொல்லுறான் துரியோ. தாத்தா யோசிக்குறார் "பேராண்டி துரியோ.. உங்கள மாதிரி அந்தப் பயலுகளும் எனக்குப் பேரன்ங்க தான்டா.. அதனால அவங்கள நான் ஒன்னும் பண்ண மாட்டேன். ஆனா அவங்க படையில சண்டை போடுற போர் வீரர்கள் ஒரு பத்தாயிரம் பேரை தினமும் கொல்லுவேன்"னு சொல்றான் பீஷ்மன். (கூலிக்கு சண்டை போட வர்றவனை கொல்லுவானாம்)
அடியாள் படை ஒவ்வொன்னுக்கும் ஒவ்வொரு தாதா நியமிச்சாச்சு. கர்ணன் சூத்திரன்னு அவனை கண்டுக்காம விட்டுட்டான் பீஷ்மன். கடுப்பான கர்ணன், பீஷ்மன் போர்க்களத்துல செத்தபிறகு தான் வருவேன்னு சொல்லிட்டுப் போயிட்டான்.
அம்பா அடுத்த ஜென்மத்துல திருநங்கையா மாறி பீஷ்மனைக் கொல்லப் போறேன்னு சொன்னது ஞாபகமிருக்கா? பஞ்சாப் மன்னன் துருபதனுக்கு மகனாப் பிறந்து அதே சிகண்டிங்குற பேர்ல திருநங்கையா மாறியிருக்குறதால, ஒருவேளை பாண்டவர்ஸ்க்கு ஆதரவா சிகண்டி சண்டை போட வந்தா தன்னோட கதி அதோகதின்னு நினைச்சு, சிகண்டி கூட மட்டும் சண்டை போட மாட்டேன்னு துரியோ கிட்ட சொல்றான் பீஷ்மன்.
அத்தோட போர் வீரர்களுக்கு ரூல்ஸ் அன்ட் ரெகுலேசன் சொல்லித் தந்த பீஷ்மன், நாளைக்கு அக்கப்போரை ஆரம்பிக்குறோம்னு சொல்லிட்டுக் கிளம்புறான்.
அங்கிட்டு அஸ்தினாபுரம் அரண்மனைக்கு வந்த வியாசன், ஒரு லைவ் கேமராவ போர்க்களத்துல மாட்டி, சஞ்சயனோட கண்ணு ரெண்டுக்கும் கனெக்சன் குடுத்து, திருதராட்டிரனுக்கு லைவ் கமென்டரி தரச் சொல்றான். ஒரு முடிவோட தான் இருக்கீங்கடா...
**********
விடிஞ்சது (கிழிஞ்சது)
அக்கப்போரை சங்கு ஊதி ஆரம்பிக்கலாமான்னு கேக்குறான் கிருஷ்ணன். ஆனா அர்ஜுனன் மூட்அவுட்ல இருக்கான். "அங்காளி பங்காளி மாமன் மச்சான் இவிங்களோட சண்டை போடணுமா"ன்னு கேக்குறான் அர்ஜுனன்.
"எலே.. அவிங்கலாம் பங்காளின்னு இப்பதான் தெரியுதா? வந்து சண்டை போடுலே.."ன்னு சொன்ன கிருஷ்ணன் கர்ணன் படத்துல வர்றமாதிரி "மரணத்தை எண்ணிக் கலங்கிடும் விஜயா" அப்பிடின்னு லிரிக்ஸ்ஸோட பாட்டு பாடுன உடனே இவன் இம்சை தாங்கமுடியாம "சரி சரி சங்கு ஊது"ங்குறான் அர்ஜுனன்.
ரெண்டு பயலுகளும் சங்கு ஊதுன உடனே அக்கப்போர் ஆரம்பிக்குது.

(போர்க்களத்துல அர்ஜுனனுக்கு உபதேசம் பண்ணது தான் பகவத் கீதையாம். இந்தக் கிருஷ்ணம்பய சொல்லச் சொல்ல எழுதுனவன் எவன்? அந்த பகவத் கீதைய படிச்சி முடிக்கிறதுக்குள்ள மண்டை கழண்டு மெண்டலாயிரும். அவ்வளவு உபதேசத்தையும் தம் கட்டி சொல்லி முடிக்கவே ஒரு மாசம் ஆகும். இதுல இவன் சொன்னானாம், அவன் கேட்டானாம்.)
மகாபாரதம்
2ம் பாகம் 48-50 - பீஷ்மன் வதம்
போர்ல ரெண்டு பயலுகளும் வெட்டிகிட்டு சாகுறானுங்க.. பீஷ்மன் பாண்டவர்களைக் கொல்ல மாட்டேன்னு சொன்னாலும், இந்தப் பயலுக அதைக் கண்டுக்கல., நேரம் பாத்து சிகண்டிய கொண்டாந்து நிறுத்துறான் அர்ஜுனன். சிகண்டிய பாத்தவுடனே பேக் அடிச்ச பீஷ்மனை அம்பால அடிச்சுத் தள்ளுறான் அர்ஜுனன்.
உடம்பெல்லாம் அம்பு, ரத்தம். ஆனாலும் நினைச்ச நேரத்துல சாகுற வரம் வாங்குனதால எல்லாரும் பீஷ்மன் கிட்ட போயி "யோவ் பெருசு, செத்துத் தொலைய்யா.."ன்னு சொல்ல "நல்ல நேரம் வரட்டும், நானே செத்துக்கறேன் போங்கடா"ன்னு அவிங்கள விரட்டுறான் பீஷ்மன்.
பீஷ்மன் படுத்தவுடனே என்ட்ரி ஆகுறான் கர்ணன். இன்னொரு பக்கம் துரியோதனன் மகன் லட்சுமணகுமாரனை அர்ஜுனன் போட்டுத் தள்ளுறான். பதிலுக்கு அர்ஜுனன் மகன் அபிமன்யுவ கௌரவர்ஸ் + கர்ணன் சேர்ந்து போட்டுத் தள்ளுறானுங்க. பதிலுக்கு கர்ணன் மகனை அர்ஜுனன் போட்டுத் தள்ளுறான்.
இப்பிடியே வெட்டிக்கிட்டு சாகுறானுங்க..
*******
இப்பிடிக்கா 2ம் பாகமும் முடிஞ்சது