வெனிசுலாவின் கதைக்கு வருவோம். சவுதி அரேபியாவை விட அதிகம் எண்ணெய் உற்பத்தி கொண்ட, அதாவது உலகின் மொத்த எண்ணெய் உற்பத்தியில் 18% கொண்ட வெனிசுலா ஏன் ராணுவத்தில், பொருளாதாரத்தில் வளர முடியவில்லை?
உணவு உற்பத்தி, விவசாயம், உள்ளூர் தொழில்கள் எதையும் அவர்கள் ஊக்குவிக்கவில்லை. விளைவாக உணவு இறக்குமதியை மொத்த நாடும் நம்பி இருந்தது.
ஒரு கட்டத்தில், உணவு உற்பத்தியை முன்னேற்ற ராணுவத்திடம் அதிகாரம் அளித்தார் மதுரோ. அது எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தியது.
தொழில்கள் பெரிதாக வளராமல், மக்கள் கிடைத்த வேலைகளைச் செய்தார்கள். கடந்த ஆண்டின் குறைந்த பட்ச சம்பளமே ஒரு நாளுக்கு 130 ரூபாய் மட்டுமே. மறுபுறம் அரசுத்துறை ஊழல்கள், மக்களோடு தொடர்பு இல்லாத அரசு நிர்வாகம் எல்லாம் சேர்ந்து எண்ணெய் வணிக வருமானம் எதுவும் அந்த நாட்டு மக்களுக்கு நேரடியாக எந்த பயனையும் அளிக்கவில்லை.
வெனிசுலாவில் இடதுசாரி ஆட்சி இல்லை. ஆளும் தேசிய சோசலிஸ்ட் கட்சி என்பது சைமன் பொலிவரிசம் மற்றும் இடது பாப்புலிசத்தை அடிப்படையாகக் கொண்டது.
முன்னாள் அதிபர் ஹியுகோ சாவேஸ் 2014ல் அமெரிக்க எண்ணெய் நிறுவனங்களை எந்த நஷ்ட ஈடும் தராமல் நாட்டுடமை ஆக்கினார். வெனிசுலாவின் எண்ணெய் கட்டுமானம் அனைத்தும் அமெரிக்க நிறுவனங்களால் உருவாக்கப்பட்டவை.
அடுத்து எண்ணெய் உற்பத்தி தொடர சீன நிறுவனங்களும், சீன முதலீடும் அனுமதிக்கப்பட்டது. விளைவாக, மொத்த எண்ணெய் உற்பத்தியில் 80% சீனாவுக்கு அனுப்பப்பட்டது.
இதில் சந்தையை விட குறைந்த விலையில் Delivery Shipment மற்றும் சீன முதலீட்டிற்கான வட்டி மற்றும் அனைத்து பரிமாற்றமும் எண்ணெய்யாகவே அனுப்பப்பட்டது.
ஒருபுறம் அமெரிக்க முதலீடு தேசியமயம், மறுபுறம் சீன முதலீடு ஊக்குவிப்பு இரண்டும் அமெரிக்காவை எரிச்சலடைய வைத்தது. இழந்த முதலீடுகள், மற்றும் இழந்த எண்ணெய் வர்த்தக லாபங்கள் அனைத்தையும் மீட்க, கடன் வாங்கியவரை கடத்தி வந்து பணம் வசூலிக்கும் நம்ம ஊர் கந்துவட்டி குண்டர்களைப் போல் ராணுவத்தை அனுப்பி இருக்கிறது அமெரிக்க அரசு.
நிக்கோலஸ் மதுரோ பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தான் விரும்பும் எந்த நாட்டுக்கு சென்று செட்டில் ஆனாலும் அதற்கு ஆகும் முழு செலவை ஏற்பதாக பேசப்பட்ட டீலை அமெரிக்க ராணுவ அமைச்சரே ஒத்துக்கொண்டார். மதுரோ இந்த டீலுக்கு படியவில்லை.
இனி அமெரிக்க நீதிமன்றத்தில் போலி குற்றச்சாட்டில் மதுரோ தண்டிக்கப்பட்டு சிறையில் இருக்க வாய்ப்பு அதிகம் உள்ளது.
மக்களோடு எந்த தொடர்பும் இல்லாத ஆட்சி நிர்வாகம், மன்னராட்சியை விட மோசமானது என்பது வெனிசுலா கற்றுத்தரும் பாடம்.
சம பலம் பொருந்தியவனோடு மோதாமல், சிறிய நாடுகள் மீது மட்டுமே வீரத்தைக் காட்டும் அமெரிக்கா மற்றொரு மோசமான உதாரணம்.
- சங்கர் சீனிவாசன்
👇
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக